காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கான KEPAவின் பொதுக்குழுக் கூட்டம் 02.12.2012 அன்று நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் செய்யப்பட்டுள்ள - செய்யப்பட வேண்டிய ஏற்பாட்டுப் பணிகள் குறித்தும், நகர்மன்ற அங்கத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சி குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, 06.12.2012 வியாழக்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவிலுள்ள ஆயிஷா மன்ஸிலில் KEPAவின் பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில் நடைபெற்றது.
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், 07.12.2012 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணிக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் அனைவரையும், நகர்மன்ற வளாகத்தில் சந்திக்க தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நகர்மன்ற அங்கத்தினர் அனைவருக்கும், KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா இதுகுறித்து அழைப்பு விடுத்தார். அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அப்போது தெரிவித்தனர்.
பின்னர், இம்மாதம் 10ஆம் தேதியன்று, சென்னை - கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்ச்சி தொடர்பாக சென்னையில் இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அடுத்து செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. |