காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, 02.12.2012 அன்று நடைபெற்ற KEPAவின் பொதுக்குழுக் கூட்டத்தில், விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தூத்துக்குடியிலுள்ள மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்திலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் நேரில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில், KEPA நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் அடங்கிய குழுவினர், 05.12.2012 புதன்கிழமையன்று மாலை 04.00 மணியளவில், தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலுவலரிடம் தீர்மானங்களை சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 05.00 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை - KEPA குழுவினர் நேரில் சந்தித்து, தீர்மான நகல்களை சமர்ப்பித்தனர்.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
துணைச் செயலாளர், KEPA. |