தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரியும், மதுப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குமுகமாகவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி (வைகோ) - 10.12.2012 திங்கட்கிழமையன்று உவரியிலிருந்து நடைப்பயணத்தைத் துவக்கினார். 25.12.2012 அன்று மதுரையில் நடைப்பயணம் நிறைவடைகிறது.
14.12.2012 அன்று வைகோ தலைமையிலான நடைப்பயணக் குழுவினர் சுமார் 1000 பேர் நண்பகல் 11.45 மணிக்கு காயல்பட்டினத்தை வந்தடைந்தனர். நடைப்பயணக் குழுவினரை வரவேற்பதற்காக நகரின் திருச்செந்தூர் சாலை, பிரதான வீதி, எல்.எஃப்.ரோடு ஆகிய வீதிகளில் மதிமுக கொடிகளும், தோரணங்களும் பறக்க விடப்பட்டிருந்தன.
துவக்கமாக, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நுழைவாயில் அருகில் வைகோ தலைமையிலான நடைப்பயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அக்கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் வைகோவுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் வைகோவுக்கு சால்வை அளித்தார். பின்னர், கல்லூரி மாணவியரிடையே வைகோ உரையாற்றினார்.
கல்லூரியின் நுழைவாயில் அருகிலுள்ள சாலைப் பகுதியில் - கல்லூரி செயலர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவியர் வரிசையாக நின்று நடைப்பயணக் குழுவினரை வரவேற்றனர். அவர்களிடம் மதுப்பழக்கத்தின் தீமைகளை விளக்கும் பிரசுரங்களை நடைப்பயணக் குழுவினர் வினியோகித்தனர்.
பின்னர், கே.எம்.டி. மருத்துவமனை அருகிலும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அருகிலும் வைகோ தலைமையிலான நடைப்பயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் வைகோவுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர். காயல்பட்டினம் பிரதான வீதி - சீதக்காதி திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக பாடகர் நெல்லை அபூபக்கர் கட்சியின் கொள்கை முழக்கப் பாடல்களைப் பாடினார்.
மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பின்னர் வைகோவுக்கு மதிமுக நகரச் செயலாளர் பத்ருத்தீன் சால்வையும், காயல்பட்டினம் நகர்மன்ற 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி மாலையும் அணிவித்து கண்ணிப்படுத்தினர்.
நிறைவில் வைகோ சிறப்புரையாற்றினார். எங்கு கண்டாலும் ‘மாமா’ என தன்னை அன்போடு அழைக்கும் காயல்பட்டினம் மக்களின் நட்பு குறித்து புகழ்ந்து பேசிய அவர், மதுப்பழக்கத்தின் தீமைகள், அதற்கு அடிமையானோர் - அவர்தம் குடும்பத்தினர் நிலை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்து விளக்கிப் பேசினார்.
அறியாமைக் காலத்தில் மதுப்பழக்கத்தில் மூழ்கியிருந்த தம் தோழர்களை இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கனிவாகப் பேசி திருத்திய வரலாற்றுக் குறிப்புகளை தனதுரையில் அவர் நினைவுகூர்ந்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவரையும் பார்த்து கையசைத்தவாறு காயல்பட்டினத்திலிருந்து வை.கோபால்சாமி தலைமையிலான நடைப்பயணக் குழுவினர் விடைபெற்றுச் சென்றனர்.
|