சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக மன்ற உறுப்பினர்களால் வழங்கப்படும் உண்டியல் நிதியாக ரூபாய் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 07.12.2012 வெள்ளிக்கிழமையன்று 19.30 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
சாளை நவாஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இறைமறை வசனங்களை ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
KEPA செயல்பாடுகள் குறித்து கூட்டத் தலைவர் உரை:
அதனைத் தொடர்ந்து, தாயகம் காயல்பட்டினத்தில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுக்கெதிரான நடவடிக்கைகள் குறித்தும், கூட்டத் தலைவர் சாளை நவாஸ் விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள், சிறிதும் தயக்கமின்றி ஆலையின் அமிலக் கழிவுகளை அது கடலில் கலக்கும் செயல் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசிய அவர், KEPA சார்பில் விரைவில் மேற்கொள்ளப்பட்டவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.
KEPAவுக்கு முழு ஆதரவு:
KEPAவின் செயல்பாடுகளை பெரிதும் பாராட்டிப் பேசிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், நகர்நலன் கருதி, KEPAவின் செயல்திட்டங்கள் அனைத்திற்கும் மன்றம் முழு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
தொடர்ந்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் பேசினார். மன்றத்தின் செயற்பாடுகள், அதில் காணப்படும் முன்னேற்றங்கள், நகர்நலனுக்காக மன்றத்தால் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டம், ஏழை - எளிய மக்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம், முதியோருக்கான உதவித் திட்டங்கள் என அனைத்தும் தன்னை பெரிதும் வியப்பிலாழ்த்துவதாகத் தெரிவித்து, இத்திட்டங்கள் முழு வெற்றி காண முதுகெலும்பாய் செயல்படும் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்காக இறையோனிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
மன்றத் தலைவர் உரை:
பின்னர், மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் உரையாற்றினார். அண்மையில் தான் அமீரகம் சென்று, அங்கு அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார். துவங்கி குறைந்த காலமே ஆனபோதிலும், நகர்நலனுக்காக அபூதபீ மன்றம் பெருமளவில் நலத்திட்டப் பணிகளைச் செய்துள்ளதாக புகழ்ந்துரைத்தார்.
மன்ற உறுப்பினர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்குடன், மருத்துவ பரிசோதனை உள்ளரங்க முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
மன்ற ஆலோசகர் உரை:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உரையாற்றினார். கடந்த கூட்ட நிகழ்வுகள் குறித்தும், அதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்டமை குறித்தும் விளக்கிப் பேசிய அவர், கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மன்றத்தால் அனுப்பப்பட்ட கைபேசி குறுஞ்செய்திக்கு உறுப்பினர்கள் உடனுக்குடன் பதிலளித்தமை தன்னை பெரிதும் மகிழச் செய்ததாகத் தெரிவித்தார்.
நகரில் புற்றுநோய் பாதிப்புகளுக்கான காரணிகளைக் கண்டறிய உருவாக்கப்பட்ட Cancer Fact Finding Committee - CFFCயின் ஆய்வறிக்கை சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறித்தும், அதனைத் தொடர்ந்து KEPA சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட - DCW ஆலையின் சுற்றுச்சூழல் மாசுக்கெதிரான போராட்டத்தின்போது, அவ்வமைப்பால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தை, சிங்கப்பூர் நாட்டின் சட்டத்திட்டங்களைக் கருத்திற்கொண்டு மறுவடிவமைப்பு செய்து, விரைவில் இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னையில் வேலைவாய்ப்பு பெற காயலர்களுக்கு உதவி:
காயல்பட்டினத்தின் பட்டதாரி இளைஞர்கள், சென்னையில் தமக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றிடுவதற்காக சென்னையில் அவர்களுக்கு தங்குமிடம், உணவு, கணினி கல்வி (Computer Course) உள்ளிட்ட கூடுதல் பயிற்சிகளைப் பெற்றிட வழிவகை செய்யும் திட்டம் மன்றத்திடம் உள்ளதாகவும், துவுக்கமாக 5 காயலர் பட்டதாரி இளைஞர்கள் இவ்வகைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
விருப்பமுள்ள காயலர்கள், kwas@hotmail.com அல்லது kwasingapore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது முழு சுய விபரங்களுடன் தொடர்புகொள்ளலாம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பழைப்பாளர் உரை:
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் உரையாற்றினார். காயல்பட்டினத்திலுள்ள மாணவர்களின் முன்னேற்றம் குறித்த விபரப்பட்டியலை மன்றம் சேகரிக்க வேண்டுமென்றும்,
ஐந்து முதல் பத்து வரை மாணவர்களை மன்றம் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான முழு கல்விச் செலவினங்களுக்கும் பொறுப்பேற்கலாம் என்றும்,
விடுமுறையில் தாயகம் செல்லும் மன்ற உறுப்பினர்கள், அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று மாணவர் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வருங்கால முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு - பல்வேறு துறைகளின்பால் அவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும் மன்றம் நடத்த வேண்டும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
அடுத்து வரும் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், அண்டை நாடான மலேஷியாவில் வசிக்கும் காயலர்களையும் அழைத்து பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை தாக்கல்:
பின்னர், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
உதவிகள் கோரி மன்றத்தால் புதிதாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களை, அடுத்த சில நாட்களில் மன்றத்தின் விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு கவனிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிதிநிலையறிக்கை தயாரிப்புக் குழு:
மன்றத்தின் 2013ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையை தயார் செய்திட, உறுப்பினர் ஜவஹர் இஸ்மாஈல் தலைமையில், உமர் ரப்பானீ, செய்யித் இஸ்மாஈல் ஆகியோரடங்கிய குழு Budget 2013 Committeeயாக நியமிக்கப்பட்டனர்.
குடும்ப சங்கம நிகழ்ச்சி:
மன்றத்தின் அடுத்த குடும்ப சங்கம நிகழ்ச்சி, 12.01.2013 அன்று நடத்தப்படும் என்றும், நிகழ்விடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உண்டியல்கள் திறப்பு:
பின்னர், நகர்நலனுக்கான மன்றத்தின் நிதி சேகரிப்புத் திட்டங்களுள் ஒன்றான உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், உறுப்பினர்களால் நிரப்பி பெறப்பட்ட உண்டியல்கள் கூட்டத்தில் திறக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் (சென்னை), அப்துல் லத்தீஃப் (காயல்பட்டினம்), ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் (ஹாங்காங்) ஆகியோர் உண்டியல்களைத் திறந்தனர். மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் தொகை நகர்நல நிதியாக சேகரிக்கப்பட்டது.
நகரின் - தேவையுள்ள மக்களுக்காக தாராள மனதுடன் நிதியளித்த மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி தெரிவித்தார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் மஹ்மூத் ஹஸன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இரவுணவு விருந்துபசரிப்பு:
நிறைவில், அனைவருக்கும் மலாய் பாரம்பரிய உணவான - தேங்காய் சோறு, பொறித்த கோழி, மீன் - சில்லி சம்பல் உள்ளிட்ட பதார்த்தங்களை உள்ளடக்கிய Nasi Lemak பரிமாறப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
துணைக்குழு உறுப்பினர்,
சிங்கப்பூர் காயல் நல மன்றம். |