காயல்பட்டணம்.காம் இணையதள நிருபர்கள் - காயல்பட்டினம் நகராட்சியில் செய்திகளை சேகரிக்க எந்த தடங்கலும் ஏற்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று (டிசம்பர் 14; வெள்ளிக்கிழமை) ஆணையிட்டது.
காயல்பட்டினம் நகராட்சி மீது காயல்பட்டணம்.காம் இணையதளத்தை பராமரிக்கும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், இடைக்கால தடை வழங்கி நீதிபதி ஆர்.சுப்பையா இந்த ஆணையை நேற்று பிறப்பித்தார். காயல்பட்டணம்.காம் இணையதளம் சார்பாக மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல் கான் ஆஜரானார்.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி சுப்பையா - பேச்சுரிமை விசயத்தில் அரசு அதிகாரிகளோ, அரசு துறைகளோ தலையிட முடியாது. அவ்வுரிமை - பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்குரியது - என்றார். காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையருக்கு இது குறித்த விளக்கம் அளிக்க 4 வார காலம் அவகாசம் வழங்கி, நீதிபதி வழக்கினை ஒத்திவைத்தார்.
காயல்பட்டணம்.காம் இணையதளம் - பல ஆண்டுகளாக காயல்பட்டினம் நகராட்சி பற்றிய செய்திகள் உட்பட பல செய்திகளை வெளியிட்டுவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் - புதிய நகர்மன்றம் தேர்வாகியப்பின், நகர்மன்றக்கூட்ட செய்தி உட்பட நகர்மன்றம் தொடர்பான அனைத்து செய்திகளையும் சேகரிக்க அனுமதி கோரி - நகர்மன்றத் தலைவருக்கும், நகராட்சி ஆணையருக்கும் காயல்பட்டணம்.காம் கடிதம் அனுப்பியது. அனுமதி வழங்கி - நகர்மன்றத் தலைவரின் பதிலும் பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து - நகர்மன்றம் தொடர்பான பல செய்திகளை காயல்பட்டணம்.காம் வெளியிட்டு வந்தது. இதில் - நகராட்சி கூட்டங்கள், டெண்டர் அறிவிப்புகள், நகராட்சி மீதான தணிக்கை தடைகள் போன்ற செய்திகளும் அடங்கும்.
ஜூன் மாதம் 14 ம் தேதி அன்று - காயல்பட்டணம்.காம், வளைந்து
கொடுக்கனும்னா இப்படித்தானோ? என்ற தலைப்பிலான செய்தியினை வெளியிட்டது. அதில் - நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் - லஞ்சம்
பெறுவது குறித்து விவாதிக்கும் வார்த்தைகள் அடங்கியிருந்தன.
அதனை தொடர்ந்து நடந்த மூன்று நகர்மன்ற கூட்டத்தில் இருந்து (ஜூன் 28, ஜூலை 19, ஆகஸ்ட் 30) - பெருவாரியான உறுப்பினர்கள், காயல்பட்டணம்.காம் ஒரு
தலைப்பட்சமாக செயல்புரிவதாகவும், இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் கூறி, வெளிநடப்பு செய்தனர்.
ஜூலை 9 அன்று - மாவட்ட ஆட்சியரிடம், காயல்பட்டினம் நகராட்சியில், செய்திகளை சேகரிக்க காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தடங்கல் ஏற்படுத்தப்படுவதாக மனு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பி விளக்கம் வழங்க கூறினார். 15 நாட்களுக்குள் பதில் வழங்கவேண்டும் என்றாலும் - அதற்கான பதில் நகராட்சியிடம் இருந்து பெறப்படவில்லை.
ஜூலை மாத கூட்டத்தை தொடர்ந்து - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளரிடம் - உறுப்பினர்கள் கையெழுத்திட்டு - ஜூலை 28 தேதியிட்ட - புகார் மனுவினை சமர்ப்பித்தனர்.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் - காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் எஸ்.கே. சாலிஹை விசாரணை மேற்கொள்ள
காவல்நிலையத்திற்கு அழைத்தார். காயல்பட்டணம்.காம் நிருபர் - வழக்கறிஞர் உதவியுடன், காவல் நிலையத்திற்கு ஆகஸ்ட் 11 அன்று சென்று
விளக்கம் வழங்கினார். நேரடியாக இணையதளத்திடம் எந்த புகாரின் நகலும் வழங்கப்படாவிட்டாலும், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளருக்கு -
எழுத்துப்பூர்வமான பதில் - இணையதளம் சார்பாக - பதிவுசெய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் அக்டோபர் 5 அன்று நடந்த நகர்மன்றத்தின் (அவசர) கூட்டத்தில் -
காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளரை தடுக்க - ஆணையரும், நகர்மன்ற உறுப்பினர்களும் முற்பட்டனர். அதனை தொடர்ந்து -
காயல்பட்டணம்.காம் இணையதள நிருபர் எஸ்.கே சாலிஹ் மீண்டும் அக்டோபர் 15 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
அம் மனுவிற்கான பதிலினை அக்டோபர் 25 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் அசோக் குமார் வழங்கினார். அதில் காயல்பட்டணம்.காம்
இணையதளம் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்த மனுவினை நிராகரித்து - கீழ்க்காணும் விளக்கத்தை - ஆணையர் வழங்கினார்.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அவர்களிடம் பத்திரிகை உரிமம் ஏதும் தங்களால் சமர்ப்பிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கும் பட்சத்தில்
நகர்மன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றி அனுமதிக்க வழிவகை செய்யப்படும்.
இதனை தொடர்ந்து காயல்பட்டணம்.காம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.
[செய்தி திருத்தப்பட்டது @ 16.12.2012/10:00 am] |