DCW தொழிற்சாலைக்கெதிராக காயல்பட்டினத்திலுள்ள இளைஞர்கள் செய்யும் போராட்டம் பாராட்டத்தக்கது என, இம்மாதம் 10ஆம் தேதியன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இந்திய யூனியன் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், ‘மணிச்சுடர்’ நாளிதழின் செய்தி ஆசிரியருமான காயல் மகபூப் பேசியுள்ளார்.
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 10.12.2012 திங்கட்கிழமை பின்னேரம் - இஷா தொழுகைக்குப் பின் பாங்காக் சன் மூன் ஸ்டார் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், ‘மணிச்சுடர்’ நாளிதழின் செய்தி ஆசிரியருமான காயல் மகபூப் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையுரையாற்றினார். மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
பின்னர், சிறப்பு விருந்தினர் காயல் மகபூப் பேசியதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் காயல்பட்டினம்:
காயல்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர். காயல், பழையகாயல், புன்னக்காயல், கொற்கை என்பதெல்லாம் ஒரே பகுதியாக இருந்த ஊர்கள் என்ற உண்மையும் அந்த பரந்த நிலப்பரப்பில் சிறந்த துறைமுகம் இருந்த செய்தியும் ஆய்வாளர்களால் வெளிக்கொண்டு வரப்பட்டு, அது தொடர்பான ஆங்கில நூல்களும் வரைபடங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த சிறப்பிற்குரிய காயல்பட்டினத்தின் வளர்ச்சிக்கு நம் முன்னோர்கள் மகத்தான தியாகங்கள் செய்துள்ளனர்.
முன்னோர்களின் சேவை:
இந்நகரில் தோன்றிய எண்ணற்ற புலவர்கள், மகான்கள் தமிழுக்கும் அரபிக்கும், அரபுத் தமிழுக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளனர். புலவர் நாயகம் ஷேக்னா புலவர், கண்ணகுமது மொஹூதூம் முஹம்மது புலவர், மஹான் சதக்கதுல்லா அப்பா, ஸாம் ஷிஹாபுத்தீன் ஒலிகள் எல்லாம் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதே போன்று இந்நகரின் வளர்ச்சிக்காக சேவையாற்றிய பெரியோர்கள் பேரூராட்சியின் தலைமை பொறுப்பை அலங்கரித்து ஆற்றிய பணிகளை நாம் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.
உள்ளாட்சியின் வரலாறு:
1886 ஜனவரி 26இல் காயல்பட்டினம் ஊராட்சி துவக்கப்பட்டு முதல் 17 ஆண்டு காலம் பொன்னையா நாடார் தலைவராக இருந்தார். அப்போது காயல்பட்டினத்தோடு ஆறுமுகனேரி இணைந்திருந்தது. 1926இல் பிரிந்தது. நம்முடைய மருத்துவ மாமேதை டாக்டர் முஹம்மது தம்பி அவர்களின் தந்தை எம்.கே.டி.முஹம்மது அபூபக்கர் அவர்களின் தந்தை முஹம்மது தம்பி அவர்கள்தான் கீழக்கரையிலிருந்து இங்கு வந்து பேரூராட்சி தலைவரானார்கள்.
முன்னோரால் மேற்கொள்ளப்பட்ட நகர்நல திட்டங்கள்:
1936 முதல் 1942 வரை தண்ணீருக்காக நாம் பட்ட கஷ்டங்கள் 1955இல் குடிநீர் திட்டம் நிறைவேற நம் ஊர் பெரியவர்கள் அளித்த ஒத்துழைப்புகளையெல்லாம் இன்றைய தலைமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்.
1955இல் கொண்டு வரப்பட்ட காயல்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டத்திற்குப் பின், குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பின் ரூபாய் 18 கோடியில் பொன்னன்குறிச்சி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்று உலக வங்கி நிதியுதவியில் ரூபாய் 30 கோடியில் மாபெரும் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசு 80 சதவீதம் மானியமும், தமிழக அரசு 10 சதவீத மானியமும் தருகின்றது. நமது நகராட்சியின் பங்களிப்பு 10 சதவீதம். ஆனால் இரு டெண்டர்கள் மட்டுமே வரப்பெற்று கூடுதல் தொகை கோரப்பட்டுள்ளதால் நமது பங்களிப்பு 20 சதவீதமாக உயரும்.
இம்மாபெரும் திட்டத்தை நமது நகராட்சியே நேரடியாக நிறைவேற்ற உள்ளது. எந்தவொரு தொழில்நுட்ப வசதியும், பொறியாளரும் இல்லாத காயல்பட்டினம் நகராட்சி இதை எடுத்துச் செய்தால் திட்டம் வெற்றி பெறாது. எனவே, அதற்கு பதிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வையில் இத்திட்டத்தை செய்து முடித்து, ஓராண்டு அவர்கள் பராமரிப்பிற்குப் பின் நமது நகராட்சியிடம் ஒப்படைக்கச் செய்வதே புத்திசாலித்தனம். இதை நம் மக்கள் சிந்திக்க வேண்டும்.
DCW இரசாயன தொழிற்சாலையின் கேடுகள்:
இன்று இளைஞர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவது பற்றி அவர்கள் கவலை கொண்டு போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். DCW இராசயன தொழிற்சாலை உருவாக அனைத்து நிலங்களையும் கொடுத்தவர்கள் காயல்பட்டினம் மக்கள். ஆனால் அந்த நிறுவனம் இன்று காயல்பட்டினம் சுற்றுவட்டார மக்களுக்கே கேடு விளைவிக்கக் கூடியதாக - சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடியதாக உள்ளது.
DCWக்கு எதிராக முஸ்லிம் லீக் மேற்கொண்ட நடவடிக்கைகள்:
அதுமட்டுமின்றி, அது எந்தக் காலத்திலும் காயல்பட்டினத்திற்கு ஆதரவாக இருந்ததேயில்லை. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே அதனை காயல்பட்டினத்திலிருந்து பிரித்து தனி டவுன்ஷிப்பாக்க முயற்சித்தார்கள். அது நிறைவேற இருந்த நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நேரடி முயற்சியில் இறங்கி, அன்றைய தலைவர் சிராஜுல் மில்லத் அ.கா.அப்துஸ் ஸமத் ஸாஹிப் அவர்கள் முயற்சியில் முறியடிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் எம்.ஏ.லத்தீப் ஸாஹிப் தமிழக சட்டப் பேரவையில் பொது கணக்குக் குழு தலைவராக இருந்தபோது DCW நிறுவனத்தை ஆய்வு செய்து அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க குறிப்பெழுதி அரசுக்கு அனுப்பினார்.
DCWக்கு எதிராக நகராட்சி மேற்கொண்ட நடவடிக்கை:
அனுமதி பெறாமல் ஆபத்தான இராசயான தயாரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரைபடத்தை திருப்பி அனுப்பியது போன்ற நடவடிக்கைகள் தலைவர் வி.எம்.எஸ்.லெப்பை அவர்கள் தலைவராக இருந்தபோது எடுக்கப்பட்டன.
நாங்கள் பேரூராட்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்தபோது DCW தொழிற்சாலை பகுதியில் ‘இது பேரூராட்சி எல்லைக்குட்பட்டது’ என போர்டு எழுதி வைத்தோம். அவற்றை அப்புறப்படுத்தினார்கள். சாகுபுரத்திற்கு தனி பின்கோடு வாங்கினார்கள். கடலிலே இரசாயன கழிவு நீரை சர்வ சாதாரனமாக திறந்து விட்டார்கள்.
போராட்டக்காரர்களை மடக்கிய DCW...
நாங்கள் முயற்சி மேற்கொண்டபோதெல்லாம் DCW மேல்மட்டத்தவர்களை விளையாட்டு போட்டிகளுக்கு பரிசளிக்க வைத்தும், சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கவுரவப்படுத்தியும், நாங்கள் முயற்சி மேற்கொண்ட போதெல்லாம் காட்டு பக்கீர் தர்காவிற்கு சுவர் எழுப்பச் செய்து - அதற்காக பாராட்டு விழாவை நடத்தியும், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியும் வந்ததால், எங்கள் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இல்லையேல் 25 வருடங்களுக்கு முன்பே இது விசுவரூபம் எடுத்திருக்கும்.
இளைஞர்களின் போராட்டம் பாராட்டுக்குரியது...
ஆனால் இன்றைக்கு அனைத்து பகுதி இளைஞர்களும் இப்போராட்டத்தைக் கையில் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அனைவரும் இதற்கு ஒத்துழைப்போம்.
தக்வா ஒரு முன்னுதாரணமான மன்றம்...
அதே போன்று இக்ராஃ வளர்ச்சி பற்றி இங்கே பேசினார்கள். காயல்பட்டினத்தின் கல்வி வளர்ச்சிக்காக தாய்லாந்து வாழ் காயல்வாசிகள் முயற்சி மேற்கொள்வது மனநிறைவைத் தருகிறது. எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவது எல்லா நாடுகளிலும் உள்ள காயல் நலச் சங்கங்களுக்கு முன்னுதாரனமாக உள்ளது.
இங்கே ஒரு மாணவனுக்கு ரூபாய் 15 ஆயிரம் என ஸ்பான்சர் அறிவிப்பு செய்தார்கள். இன்று ஒரு பொறியியல் மாணவனுக்கு அரசு கட்டணமே ரூபாய் 40 ஆயிரம். விடுதிக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம். ரூபாய் 15 ஆயிரம் நீங்கள் கொடுத்தால் இன்னும் பல பேரிடம் கையேந்த வேண்டிய நிலை. கிடைக்கவில்லை என்றால் அம்மாணவன் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிடுகிறான். கல்வியால் அவமானப்படுத்தப்படுகிறான்.
வசதியுள்ளோர் ஒரு மாணவனை தத்தெடுங்கள்!
எனவே என்னுடைய வேண்டுகோள், வசதியுள்ள ஒவ்வொருவரும் ஒரு மாணவனை முழுமையாக தத்தெடுங்கள்! அவனைப் படிக்க வைத்து ஆளாக்குங்கள். அவனுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்து அதன் மூலம் அவன் இன்னொரு மாணவனைத் தத்தெடுக்க வழிகாட்டுங்கள்!
தாய்லாந்து நாட்டிற்கு என்னை வரவழைத்து வரவேற்று உபசரித்த உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
இவ்வாறு காயல் மகபூப் பேசினார். |