காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்து, கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, 10.12.2012 திங்கட்கிழமையன்று, சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகளிடம் சென்னை வாழ் காயலர்கள் ஒன்று திரண்டு, இதுகுறுித்து முறையிட்டனர்.
நவம்பர் 29 அன்று நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், காயல்பட்டினத்தில் புற்றுநோயாளிகளுக்கு அரசின் சிறப்புக் கவன வசதியைத் தரும், Cancer Palliative Care ஏற்பாட்டைப் பெற அரசிடம் கோரிக்கை வைப்பது என தீர்மானமியற்றப்பட்டிருந்தது.
இத்தீர்மானத்தின் அடிப்படையில் கோரிக்கையை முன்வைப்பதற்காக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்-யை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் KEPA குழுவினர், 10.12.2012 திங்கட்கிழமையன்று மாலையில் சந்தித்துப் பேசினர்.
காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையிலுள்ள குறைபாடுகள் குறித்தும், 4 மருத்துவர் பணியிடங்களைக் கொண்ட இம்மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாகவும் இச்சந்திப்பின்போது காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அமைச்சரிடம் தெரிவித்தார்.
கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்த அமைச்சர், இதுகுறித்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, விரைவில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பின் தொடர்ச்சியாக, 11.12.2012 செவ்வாய்க்கிழமையன்று காலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனையும் நகர்மன்றத் தலைவர் மற்றும் KEPA குழுவினர் சந்தித்துப் பேசினர்.
KEPA அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், KEPA அங்கத்தினரான ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், சாளை பஷீர், யு.நவ்ஃபல், எம்.ஏ.இப்றாஹீம் (48), எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் கணவர் ஷேக் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். |