காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 10.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகளிடம் சென்னை வாழ் காயலர்கள் மற்றும் KEPA அங்கத்தினரால் முறையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த சுமார் 300 காயலர்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிவதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கேளரங்கில், அதன் செயலர் உறுப்பினர் (Member Secretary) டாக்டர் பாலாஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் நிறைவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வெளி வளாகத்தில் KEPA அமைப்பினரை செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினர்.
KEPA அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர், DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் குறித்தும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்போது செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
KEPA அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் உள்ளிட்ட KEPA அங்கத்தினர், சென்னை வாழ் காயலர்கள் இந்நிகழ்வின்போது திரண்டிருந்தனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |