காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிடுவது என பொதுக்கூட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, சென்னை வாழ் காயலர்களை திரட்டுவதற்காக அங்குள்ள கல்லூரிகளின் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதுபோல, காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரியும் நகைக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கும், நகர்நல அமைப்புகளின் நிர்வாகிகளிடமும் நேரடியாகச் சென்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சென்னை - மண்ணடியிலுள்ள மஸ்ஜிதே மஃமூர், மஸ்ஜிதுல் அஷ்ரஃப் ஆகிய பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரையின்போது இதுகுறித்து அறிவிக்கப்பட்டு, அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 09.12.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 02.00 மணியளவில், சென்னை - மண்ணடி - தம்புச்செட்டி தெருவிலுள்ள அக்வாபேஸ் கன்ஸல்டன்ட்ஸ் அலுவலக வளாகத்தில் KEPA குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம், அதன் துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு மறுநாள் வருகை தரும் காயலர்களை ஒருங்கிணைத்து செய்யப்பட வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
10.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில், ஹாஜி எல்.கே.எஸ்.ரஃபீ அஹ்மத், ஹாஜி டைமண்ட் செய்யித் அஹ்மத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன், ஜெம் ஷேக், ஜெம் காமில், பல்லாக் சுலைமான், ஆடிட்டர் ரிஃபாய் உட்பட சென்னை வாழ் காயலர்கள் சுமார் 275 பேரும், காயல்பட்டினத்திலிருந்து இதற்கென சென்றிருந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உட்பட சுமார் 25 பேர், மலபார் காயல் நல மன்ற தலைவர் மஸ்ஊத் உட்பட மொத்தம் சுமார் 300 பேர் ஒன்று திரண்டனர்.
துவக்கமாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - தலா பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, DCW ஆலை தொடர்பான கேள்விகளை 200 காயலர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தனித்தனியே அளித்து, அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம் வழிகாட்டலில், KEPA நிர்வாகிகளின் சார்பாக சென்னை வாழ் காயலர்கள் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |