காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிடுவது என பொதுக்கூட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், 10.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில் திரண்ட சென்னை வாழ் காயலர்கள், துவக்கமாக - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் DCW ஆலை தொடர்பான கேள்விகள் அடங்கிய கடிதங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கட்டணம் செலுத்தி சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த சுமார் 300 காயலர்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிவதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கேளரங்கில், அதன் செயலர் உறுப்பினர் (Member Secretary) டாக்டர் பாலாஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் குறித்தும், அது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கேள்வியெழுப்பியும் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ஹாஜி எம்.ஏ.கிதுரு முஹம்மத், ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.), எம்.ஏ.இப்றாஹீம் (48) ஆகியோர் பேசினர்.
இந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காயல்பட்டினம் மக்களை மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஊர்களின் பொதுமக்களுக்கும் பொதுவானவையே என்றும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அமைதி வழியில் தற்போது உரிமைக்குக் குரல் எழுப்பி வருவதாகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து மேற்கொள்ளும் நடவடிக்கையைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்ட செயல்திட்டம் வகுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, DCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிராக நடவடிக்கை கோரி, KEPA சார்பில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலர் உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் பேசிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டாக்டர் எஸ்.பாலாஜி, தொழிற்சாலைகள் விதிமீறல்களைச் செய்யாமல் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தனது தொழிற்சாலையினால் ஏற்படும் மாசுவை கட்டுபடுத்துவதில் DCW நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், மாசுபடுத்தும் தொழிற்சாலையின் Ilmenite பிரிவை - அது சுற்றுச்சூழலைப் பாதித்து கொண்டிருக்கும் வரை ஏன் மூடக்கூடாது என வினவினார்.
அப்போது பதில் அளித்த டாக்டர் பாலாஜி, DCW நிறுவனம் - ஆகஸ்ட் 2013 க்குள் Ilmenite பிரிவு கழிவுகளை பயன்படுத்த புதிய ஆலையை (Iron Oxide Plant) துவக்க முயற்சி செய்வதாக தெரிவித்திருப்பதாக கூறினார்.
அதுபோன்ற தொழிற்சாலையை - தான் உருவாக்கப்போவதாக DCW 2006ஆம் ஆண்டே தெரிவித்துவிட்டது என்றும், இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இத்தொழிற்சாலை நிறுவப்படும் என்றும் DCW நிறுவனம் முன்னர் கூறிய தகவல் - டாக்டர் பாலாஜியிடம், KEPA அங்கத்தினரால் எடுத்துரைக்கப்பட்டது. அத்தொழிற்சாலையை உருவாக்குவதில் DCW நிறுவனம் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.
DCW தரப்பு விளக்கத்தைக் கேட்பதற்காக காயலர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வரவில்லை என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை பரிந்துரைத்தப்படி ஏன் இன்னும் Ilmenite பிரிவை மூடவில்லை என்று வினவவும், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் பல ஆண்டுகளாக நடந்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடாமல் - DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கவுமே காயலர்கள் திரளாக வந்திருப்பதாகவும் KEPA அங்கத்தினர் தெரிவித்தனர்.
DCW நிறுவனத்தின் செயல்பாடுகளை தான் ஆதரித்து பேசவில்லை என்று தெரிவித்த டாக்டர் பாலாஜி, சுற்றுச்சூழல் துறை செயலாளர் சி.வி.சங்கர் IAS வெளிநாடு சென்றிருப்பதால், அவர் நாடு திரும்பியவுடன், உடனடியாக இதுகுறித்து விசாரித்து, முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில், KEPA அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் உள்ளிட்ட KEPA அங்கத்தினர், சென்னை வாழ் காயலர்கள் என சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |