தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நகர்நலன் கருதி பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
கூட்ட நிகழ்வுகள்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 10.12.2012 திங்கட்கிழமை பின்னேரம் - இஷா தொழுகைக்குப் பின் பாங்காக் சன் மூன் ஸ்டார் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், ‘மணிச்சுடர்’ நாளிதழின் செய்தி ஆசிரியருமான காயல் மகபூப் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மன்ற துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஆர்.யூனுஸ் - சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
பின்னர், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் காயல் மகபூப், காயல்பட்டினம் நகருக்கு ஆற்றியுள்ள பணிகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தக்வா சார்பில் அவரை வரவேற்பதாகவும், நகர்நலப் பணிகளுக்கு எத்தகைய வேறுபாடுகளையும் காட்டாமல் இணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
செயலர் உரை:
அடுத்து, மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார். இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து அவர் குறிப்பிடுகையில், காயல்பட்டினம் DCW தொழிற்சாலை - சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவதை எதிர்த்தும், கண்டித்தும் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை விவரித்து, 10.12.2012 - கூட்டம் நடைபெறும் இதே தேதியில், சென்னையில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் சென்னை வாழ் காயலர்கள் 300 பேர் திரண்டு சென்று மனு அளித்தது பற்றியும், இம்முயற்சிகளுக்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தை பலப்படுத்துவதற்கும், அதற்கு சொந்த இடம் வாங்கி - சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், ‘மணிச்சுடர்’ நாளிதழின் செய்தி ஆசிரியருமான காயல் மகபூப் சிறப்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர் உருவான சரித்திரம், நகரில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகள், சுற்றுச்சூழல் மாசு குறித்து அன்றே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் - நடவடிக்கைகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - DCW ஆலைக்கெதிரான போராட்டங்களுக்கு முழு ஆதரவு:
காயல்பட்டினம் நகரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் DCW இரசாயன தொழிற்சாலையை எதிர்த்தும், கண்டித்தும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மன்றம் முழு ஆதரவளிக்கிறது.
தீர்மானம் 2 - த.நா.குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பைப்லைன் திட்டத்தை நிறைவேற்றக் கோரல்:
ரூபாய் 30 கோடி செலவில் காயல்பட்டினத்தில் நிறைவேற்றப்பட உள்ள குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வையில் ஓராண்டு பராமரிப்பில் செயல்படுத்த காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - இக்ராஃ வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதோடு, கருத்து வேறுபாடுகள் கொள்கை முரண்பாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஊர் வளர்ச்சியில் ஒன்றிணைந்து செயல்படுமாறு அனைத்து காயல் நல மன்றங்களையும் வெளிநாடு வாழ் காயலர்களையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 - பொது விஷயங்களில் அமைப்புகள் இணைந்து செயல்பட கோரிக்கை:
நகர்நலன் குறித்த பொது விஷயங்களில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, KEPA, காயல்பட்டினம் நகராட்சி போன்ற அமைப்புகள் இணைந்து செயல்பட மன்றம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 - ‘காயல்பட்டணம்’ என்ற பெயரிலான திரைப்படத்திற்கு எதிர்ப்பு:
‘காயல்பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்காமல் தடுக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள ஊர் பொது நல அமைப்புகளை இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்ற உறுப்பினர் என்.எஸ்.ஷேக் நன்றி கூற மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அபுல்ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தக்வா மன்றம் சார்பாக
S.A.R.யூனுஸ்
(துணைச் செயலாளர்)
மற்றும்
S.M.மிஸ்கீன் ஸாஹிப்
படங்கள்:
S.A.அஹ்மத் இர்ஃபான்
பாங்காக், தாய்லாந்து |