காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், இம்மாதம் 03ஆம் தேதியன்று ‘உலக மாற்றுத் திறனாளிகள் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து, அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டணம் இரத்தினபுரி ஏ.கே.எம். நகாpல் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய மற்றும் பல்வேறு இயலாநிலை குழந்தைகளுக்கான துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த தினத்தில் துளிர் தனது குழந்தைகளை மகிழ்விக்கவும் உற்சாகப்படுத்தவும் அவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகளை நடத்தியது. குறிப்பாக ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், கண்ணாடியில் வண்ணம் தீட்டுதல், சிறு குடுவையில் வண்ணம் பூசுதல், கதை சொல்லுதல், செய்தி வாசித்தல் உள்ளிட்ட திறன் போட்டிகளுடன், வால் பிடுங்குதல், பந்து கைமாற்றுதல் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கு வெற்றிப் பரிசுகளும், கலந்துகொண்ட சிறப்புக் குழந்தைகள் அனைவருக்கும் திறன் பரிசுகளும் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிகளில் சிறப்புக் குழந்தைகள் ஆர்வமுடனும், சந்தோஷத்துடனும் கலந்து கொண்டதோடு, போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளைப் பார்த்து அனைத்து குழந்தைகளும் ஆரவாரம் செய்தனர். இந்த போட்டிகளுக்கு பின்பாக சிறப்புக் குழந்தைகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாற்றுத்திறனாளிகளாய் இருக்கும் இந்த சிறப்புக் குழந்தைகள் வாழ்வில் தன்னம்பிக்கையும் சம வாய்ப்புகளும் பெற்று, சமூகத்தில் உயர்ந்திட வேண்டும் என்று துளிர் பள்ளியின் செயலர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துளிர் பள்ளியின் பெற்றோர் மன்ற தலைவி வி.எஸ்.ஏ.ஆயிஷா சாஹிப் தம்பி தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனுடையவர்களுக்கு மத்திய - மாநில அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை துளிர் தன் பள்ளியில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகளுக்கும், நம் வட்டாரத்தில் உள்ள ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கும் பெற்றுத் தந்துள்ளது எனவும், குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட சிறாருக்கு மாதாந்திர பராமரிப்பு ஊக்கத் தொகையைப் பெற்றுத் தந்திருப்பது உள்ளிட்ட துளிரின் பணிகள் பற்றி துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் எடுத்துரைத்தார்.
மாற்றுத்திறன்மிக்க சிறார் மனநிறைவுடன் வாழூம் நிலையில் அனைத்து உதவிகளையும், ஏற்றமிகு திட்டங்களையும் அனைவரின் ஒத்துழைப்போடும் துளிர் உறுதியுடன் செயல்படுத்தும் என்றும், அவர்கள் மற்றவர்களுக்கு இணையாக வாழ எல்லா வகையிலும் பாடுபடும் என்றும், துளிர் நிறுவனர் வழக்குறைஞர் எச்.எம்.அஹ்மத் அப்துல் காதர் - மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
துளிர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாக
சித்தி ரம்ஸான் |