பொது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக - கேரள மாநிலம் கோழிக்கோடு வருகை தந்திருந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த நகரப் பிரமுகர்களுக்கு, மலபார் காயல் நல மன்றம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் - கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல் மகபூப் ஆகியோர் சிறப்புரையாற்றியுள்ளனர்.
இந்நிகழ்ச்சி குறித்து, மலபார் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செய்தித் தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (SEENA) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இம்மாதம் 02ஆம் தேதியன்று, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகிய பிரமுகர்கள் சென்னையிலிருந்தும், காயல்பட்டினத்திலிருந்தும் இம்மாதம் 01ஆம் தேதியன்று கோழிக்கோடு சென்றடைந்தனர்.
அவர்களுக்கு வரவேற்பளிக்கும் நோக்குடன், மலபார் காயல் நல மன்றத்தின் சார்பில், கோழிக்கோடு மாவூர் சாலையில் அமைந்துள்ள காலிகட் டவரில் - அன்றிரவு 07.30 மணியளவில் மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமையிலும், மன்ற துணைத்தலைவர் கே.ஆர்.எஸ்.ரஃபீக் முன்னிலையிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரவேற்புரை:
மன்றத் தலைவர் மஸ்ஊத் துவக்கமாக அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மலபார் காயல் நல மன்றம் - மக்வாவின் அழைப்பையேற்று இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சிறப்பு விருந்தினர்களையும், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கவுரவ ஆலோசகர்களையும் மனதார வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
மக்வாவின் நகர்நல செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், மருத்துவம் - கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக ஏழை - எளிய காயலர்களுக்கு உதவி வரும் மக்வா, பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
காயல் மகபூப் சிறப்புரை:
பின்னர், காயல் மகபூப் சிறப்புரையாற்றினார். மக்வா சார்பில் தங்கள் யாவரையும் அழைத்து வரவேற்பளித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், நலிந்த நிலையிலுள்ள காயலர்களுக்கு மருத்துவ உதவியாக மட்டுமே பல லட்சம் தொகையை உதவியாக வழங்கிய மக்வாவின் செயல்பாடுகள் மென்மேலும் தழைத்தோங்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, மக்வா குறித்து பொதுமக்களிடையே நல்ல அபிப்பிராயம் உள்ளதாகத் தெரிவித்தார்.
சிறுதொழில் முனைவோருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
பின்னர், மருத்துவம் - கல்வி - வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் மக்வா அமைப்பு செய்து வரும் நலத்திட்டப் பணிகள் மற்றும் அரசு தரும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வூட்டல் உள்ளிட்ட மக்வாவின் பணிகளை பெரிதும் புகழ்ந்துரைத்த அவர், ஒற்றுமையுடன் நகர்நலப் பணிகளாற்றி வரும் மக்வாவின் சேவை மகத்தானது என்றும் கூறினார்.
சிறுபான்மையின மக்களுக்கு அரசு தரும் சலுகைகள், கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்டவற்றை நம் மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், படித்தவர்கள் நிறைந்து வாழும் நமதூரில், வேலைவாய்ப்புக்காக Employment Exchangeஇல் பதிவு செய்வதேயில்லை என்றும், அரசு வேலைவாய்ப்புகளில் நம் சமுதாயம் உரிய பிரதிநிதித்துவத்தை ஆர்வத்துடன் பெற்றிட முனைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மக்வாவின் சார்பில் அரசுத் துறையினருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து புகழ்ந்து பேசிய அவர், காயல்பட்டினத்தின் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் DCW தொழிற்சாலை குறித்து விளக்கிப் பேசிதோடு, அதன் மாசுக் கட்டுப்பாடு விதிமீறல்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு மக்வா மனு அளிக்கவுள்ளதை தான் பெரிதும் பாராட்டுவதாகவும், இதுபோன்று அனைத்து மன்றங்களும் செய்திட வேண்டும் என்றும் கூறினார்.
திருநெல்வேலியிலிருந்து கோழிக்கோடு வழியாக ஹாப்பா வரை செல்லும் விரைவுத் தொடர்வண்டியின் சேவை நேரத்தை மாற்ற மக்வா சார்பில் மனு வழங்கப்படவுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.
தினசரி மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் மலபார் விரைவுத் தொடர்வண்டியை நாகர்கோயில் வரை நீட்டவுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து, அதை திருநெல்வேலி வரை நீட்ட வலியுறுத்தி மக்வா சார்பில் வழங்கப்படவிருக்கும் மனு குறித்தும் அவர் பாராட்டிப் பேசினார்.
இம்மூன்று மனுக்களையும் அது தொடர்பான அமைச்சருக்கும், மத்திய அமைச்சர் இ.அஹ்மத் சாஹிபுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான், இ.டி.முஹம்மத் பஷீர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கவுள்ள மக்வாவின் முடிவு மிகவும் சரியான முடிவு என்று அவர் தெரிவித்தார்.
மேற்கூறிய நம் மக்களின் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சமந்தபட்டவர்களிடம் எடுத்து கூறி பெற்றுத்தர வேண்டும் என்று கூறிய அவர், இதனால் நம் ஊருக்கும், மலபாரில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும் என்றும் கூறினார்.
மேலும் மத்ரஸாக்களை ஒருங்கிணைக்கும் அரசின் திட்டங்கள் தொடர்பான - பொதுச் செயலாளரின் கருத்துக்கள் குறித்து காயல் மகபூப் கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
நிறைவாக, தங்கள் வருகையை மையப்படுத்தியே சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தங்களை கண்ணியப்படுத்தியமைக்கு, மக்வா அமைப்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும், நகர்நல நோக்குடனான மக்வாவின் உழைப்பிற்கு, கருணையாளன் அல்லாஹ்விடம் மகத்தான நற்கூலி உண்டு என்றும் அவர் தெரிவித்து, தனதுரையை நிறைவு செய்தார்.
கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரை:
அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார். மக்வாவின் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கும், அதில் தங்களை அழைத்து கண்ணியப்படுத்தியமைக்கும் துவக்கமாக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மக்வாவின் செயல்பாடுகள் அனைத்தையும், இணையதளம் மூலமாக தொடர்ந்து அவதானித்து வருவதாகத் தெரிவித்த அவர், இளைஞர்கள் நிறைந்த மக்வாவின் எழுச்சி மிக்க செயல்பாடுகள் தன்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்வதாகத் தெரிவித்தார்.
பின்னர், காயல்பட்டினத்தில் அனைவரையும் பட்டதாரிகளாக்க வேண்டும் என்ற நோக்குடன் இக்ராஃ கல்விச் சங்கம் துவக்கப்பட்டு, இறையருளால் - மக்வா உள்ளிட்ட அனைத்து நகர்நல அமைப்புகளின் மேலான ஒத்துழைப்புடன் சிறப்புற செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐந்து அல்லது ஆறு காயல் நல மன்றங்கள் மட்டுமே இருந்து வந்த நிலை மாறி, இன்று உள்ளூர் - வெளியூர் - வெளிநாடுகள் அனைத்திலும் சுமார் 20 காயல் நல மன்றங்கள் உருவாகி, நகர்நலப் பணிகள் பலவற்றைச் செய்து வருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
சிற்சிறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இன்றி செயல்பட்டாலேயே இதுபோன்ற பெரிய பெரிய செயல்திட்டங்கள் சாத்தியமாகும் என்று தெரிவித்த அவர், அனைத்துலக காயல் நல மன்றத்தினர் அனைவரும் இன்னும் உறுதியான ஒற்றுமையுடன் செயலாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மருத்துவம் - கல்வி - சிறுதொழில் உள்ளிட்ட துறைகளில் ஏழை - எளிய காயலர்களுக்கு உதவுவதற்காக இயங்கி வரும் மக்வா அமைப்பு, தான் எடுத்துக்கொண்ட பணிகளை இறையருளால் செவ்வனே செய்து முடிக்கவும், அதன் பலன்கள் நம் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்திடவும் தான் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அமைச்சர்களும், தலைவர்களும் தன்னுடன் நல்ல உறவு வைத்துள்ளதாக கூறிய அவர், கேரளாவிலிருந்து வணிகம் செய்து வரும் காயலர்களுக்கு ஏதாவது நல்ல காரியங்களுக்கு அவர்கள் மூலம் தேவைகள் இருப்பின் தன்னை உரிமையுடன் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் தலைவர்களுள் ஒருவருமான இ.டி.முஹம்மத் பஷீர் மேற்பார்வையில் - புற்றுநோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் CH சென்டர் குறித்து விளக்கிப் பேசிய அவர், மக்வாவின் சார்பில் நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்வதாக இருந்தால், அவர்களுக்கு சலுகையளிப்பது குறித்து இ.டி.முஹம்மது பஷீர் அவர்களிடம் தான் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.மேலும் மக்வா வின் விரைவுத் தொடர்வண்டி கோரிக்கை மனு பற்றி சமந்தபட்டவர்களிடம் எடுத்துக் கூறி இன்ஷாஅல்லாஹ் அதை பெற்று தர முயற்சிப்பேன் என்றும் கூறினார்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த நம் மக்கள் எந்தக் கட்சியில் - எந்த அமைப்பில் இருந்தாலும், நல்ல காரியங்களைச் செய்வதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அவர், ஒரே இடத்தில் நமதூரைச் சேர்ந்த அனைவரும் இணைந்து சந்திக்க வாய்ப்பருளிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்து, தனதுரையை நிறைவு செய்தார்.
தீர்மானம்:
கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் உதவியுடன் மக்வாவின் சார்பில் கோரிக்கை மனுக்களை அமைச்சரிடமும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வழங்கவும், மக்வா பற்றி அவர்களிடம் அறிமுகப்படுத்தவும், 02/12/2012 அன்று கோழிக்கோடு நடக்காவில் அமைந்துள்ள ஈஸ்ட் அவன்யு ஹோட்டலில் அவர்களை சந்திக்கவும் இந்நிகழ்ச்சியின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
அனைவருக்கும் நன்றி:
பின்னர், மன்றத் தலைவர் மஸ்ஊத் அனைவருக்கும் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இரவு 08.00 மணிக்குத் துவங்கிய கூட்டம் 10.15 மணிக்கு நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், மலபார் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விருந்துபசரிப்பு:
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில் செய்தித் தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (Seena) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |