காயல்பட்டினத்தில் நிறைவேற்றப்படவுள்ள இரண்டாவது பைப்லைன் திட்டம் தொடர்பான அவசரக் கூட்டம், 14.12.2012 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,
01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பின்வரும் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு, அலுவலகக் குறிப்பின்படி அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத் துளிகள்...
கூட்டம் துவங்கிய நேரத்தில், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மினிட் புத்தகத்தில் உடனடியாக பதிவு செய்யாதது ஏன் என 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு உட்பட சில உறுப்பினர்கள் கேட்டனர்.
ஆணையர் சென்னை சென்றிருந்த காரணத்தால் மினிட் புத்தகம் குறித்த நேரத்தில் தன்னிடம் தரப்படவில்லை என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
மினிட் புத்தகத்தை வீட்டில் வைத்திருந்தது ஏன் என தலைவரை நோக்கி மீண்டும் கேள்வியெழுப்பப்பட்டது. மினிட் புத்தகத்தை தான் எடுத்துச் செல்லவில்லை என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அவரது வீட்டிலிருந்து நகராட்சி அலுவலர் மினிட் புத்தகத்தை திரும்ப எடுத்து வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தங்களிடம் உள்ளதாக, 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கூறினார்.
மினிட் புத்தகத்தை தன் வீட்டிற்கு எடுத்து வர வேண்டாம் என நகராட்சி அலுவலர்களை தான் வலியுறுத்திக் கூறிய பின்னரும், தன் அனுமதியின்றி மினிட் புத்தகம் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நகர்மன்றத் தலைவர், தன்னை குற்றம் சுமத்துவதற்காக வேண்டுமென்றே மினிட் புத்தகத்தை தனது வீட்டிற்குக் கொடுத்து விட்டு, படம் எடுப்பதற்காகவே மீண்டும் தன் வீட்டிலிருந்து அது எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவ்வேளையில், கூட்ட நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த காயல்பட்டணம்.காம் செய்தியாளரை நோக்கிப் பேசிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், கூட்டத்தை வீடியோ எடுக்க அனுமதியில்லை என்று தெரிவித்தார். 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் ஆகியோர், மீடியா வரும் வரையில் காத்திருந்து - அதற்காகவே தலைவி கூட்டத்தை தாமதமாகத் துவக்கியுள்ளதாகக் கூறினர்.
உறுப்பினர்கள் சிலரின் வருகையைத் தவிர வேறெவரின் வருகைக்காகவும் தான் காத்திருக்கவில்லை என நகர்மன்றத் தலைவர் அப்போது பதிலளித்தார்.
பின்னர் பேசிய 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், தலைவி கேமராவிற்கு போஸ் கொடுப்பதற்காகவே கூட்டத்தை தாமதமாகத் துவக்கியதாகக் கூறியதையடுத்து, கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்நேரத்தில், காயல்பட்டணம்.காம் செய்தியாளரை நோக்கி ஆத்திரத்துடன் நெருங்கி வந்த 12ஆவது வார்டு உறுப்பினர், அவர் கையிலிருந்த கேமராவைப் பிடுங்க முயற்சித்ததோடு, கூட்டத்தை வீடியோ பதிவு செய்யக்கூடாது என்றும், கூட்டரங்கை விட்டும் வெளியேறுமாறும் உரத்த குரலில் கூறினார்.
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, செய்தியாளரை ஒளிப்பதிவு செய்ய விடாமல் மறைத்தவாறு நின்றுகொண்டிருந்தார்.
கூட்ட நிகழ்வுகளின் வீடியோ ஒளிப்பதிவுகள் வருமாறு:-
பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3 |