காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்து, கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகியன நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
அதே நாளில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA கேட்டுக்கொண்டதன் பேரில் - ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தினர் புது டில்லி வாழ் காயலர்களுடன் இணைந்து, புதுடில்லியில் - நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மானை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக - தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவதாக அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, 09.12.2012 அன்று சென்னையிலிருந்த அவரை, KEPA சார்பில் அதன் பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் தலைமையில், துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, அங்கத்தினரான பல்லாக் சுலைமான், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஏ.எஸ்.புகாரீ, எம்.டி.ஹபீப், ‘துணி’ அன்ஸாரீ, யு.நவ்ஃபல், ஷேக், அஹ்மத் அப்துல் காதிர் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இச்சந்திப்பின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உடனிருந்தார்.
|