தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருச்செந்தூர் சார்பில், மின்சார சிக்கன வாரம் 14.12.2012 முதல் 20.12.2012 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மின்சார சிக்கன வார விழா நிகழ்ச்சி, டிசம்பர் 19ஆம் தேதி (இன்று) மதியம் 03.00 மணியளவில் ஆறுமுகநேரி ரத்னா கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்த விபரங்களடங்கிய பிரசுரம் (நோட்டீஸ்) இன்று நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி வெளி வளாகத்தில் வினியோகிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலக உதவி பொறியாளர் முருகன் தலைமையில், அதன் ஊழியர் ஒருவர், ஆசிரியர் மு.அப்துல் ரசாக் ஆகியோர் பிரசுரத்தை பொதுமக்களுக்கும், நகராட்சி அங்கத்தினருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தனர்.
மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் DCW நிறுவன துணை மேலாளர், குரும்பூர் காமராஜர் மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர், ஆறுமுகநேரி - கே.ஏ.மேனிலைப்பள்ளி ஆசிரியை, திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபர், ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற தலைவர், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் தொழில்நுட்பக் கல்லூரியின் முதுல்வர், ஆழ்வார் திருநகரி தேர்வுநிலை பேரூராட்சியின் தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளதாக அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரையோ, பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளையோ அழைக்காதது ஏன் என காயல்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் முருகனிடம் பொதுமக்கள் கேள்வியெழுப்பினர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றக் கேட்டுக்கொண்டதாகவும், அவர்கள் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மின் வாரியத்தின் சார்பில் அழைக்கப்பட்ட நான்கு காயலர்கள் யார் என்று மறுபடியும் கேட்கப்பட்டபோது, “உயரதிகாரிதான் பேசினார்... அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்... வேண்டுமானால் நீங்க யாராவது பேச வாருங்களேன்...” என்று கூறினார்.
அழைக்க வேண்டியவர்களை முறைப்படி அழைக்காமல் நோட்டீஸும் அச்சடிக்கப்பட்ட பின்னர், நின்ற இடத்தில் அழைப்பது சரியல்ல என்றும், நிகழ்ச்சியில் உரையாற்ற காயல்பட்டினத்திலுள்ளோரை புறக்கணிக்கும்போது, கலந்துகொள்ள மட்டும் அழைப்பு விடுப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.
அத்துடன், மின்சார சிக்கன வார விழாவை அறிவிக்கும் ஸ்டிக்கர் - விழா முடிய ஒரேயொரு நாள் மட்டுமே உள்ள நிலையில் நேற்றுதான் (டிச.18) நகரில் சில இடங்களில் ஒட்டப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய ஆசிரியர் மு.அப்துல் ரசாக், ஏற்கனவே மின் வாரியத்தின் சார்பில் கவிதைப் போட்டியொன்று காயல்பட்டினத்தின் பள்ளியொன்றில் நடத்தப்பட்டதாகக் கூறினார். வேறு நிகழ்ச்சிகளைப் பற்றி தாங்கள் எதுவும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், மின்சார சிக்கன வார விழாவில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை மட்டும் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அவரிடம் தெரிவித்தனர்.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 17:42 / 19.12.2012] |