காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (நாளை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் சார்பில் - அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வரும், நாடறிந்த நாவலரும், தலைசிறந்த மார்க்கப் பேரறிஞருமான மவ்லான மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி காதிரி அவர்கள், 20.12.2012 வியாழக்கிழமையன்று அதிகாலை 02.00 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஹழ்ரத் பெருந்தகை அவர்கள், தமிழ்நாடு - கேரளம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமது சீரிய சொல்லாற்றலாலும், எழுத்தாற்றலாலும் சன்மார்க்கப் பிரச்சாரப் பணிகளின் மூலம் தீன் சேவையாற்றியும், தன்னுடைய பரந்த - நிறைவான அறிவு ஞானத்தைக் கொண்டு, பன்னூற்றுக் கணக்கான இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியும் சேவை செய்துள்ளார்கள்.
அல்லாஹ் அவர்களின் சேவையை ஏற்றுக்கொண்டு, சுவனபதியில் உயர் பதவி நல்குவதுடன், ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நம் உயிரினும் மேலான தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களையும், நம்மையும் ஒன்று சேர்த்தருள்வானாக, ஆமீன்.
பேரருளாளன் அல்லாஹ், அவர்களுக்கு சுவனத்தில் உயர்வான நற்பதவிகளை நல்க நாம் துஆ செய்வோமாக... அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வானாக.
ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஹழ்ரத் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைக் கொடுத்தருள் புரிவானாக, ஆமீன்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |