காயல்பட்டினத்தில் நேற்று ஒரு நகைக்கடையில் திருட்டும், பல இடங்களில் திருட முயற்சியும் நடந்துள்ளது.
காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ளது ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ் நகைக்கடை. 20.12.2012 வியாழக்கிழமையன்று (நேற்று) காலை 08.00 மணியளவில், அருகிலுள்ள பலசரக்கு கடை அதிபர் தனது கடையைத் திறக்க வந்தபோது, நகைக்கடையின் ஷட்டர் கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார்.. உடனடியாக கடை உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் தெரிவித்ததையடுத்து, கடை அதிபர்களான ஒய்.எம்.முஹம்மத் தம்பி, எஸ்.ஐ.செய்யது மொகுதூம் ஆகியோர் கடைக்கு விரைந்து சென்று பார்த்தபோது, கடையின் ஷட்டர் கதவு திறக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறடிக்கப்பட்டு கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 350 கிராம் வெள்ளி நகைகளும், பணமும் திருடப்பட்டுள்ளதாக பின்னர் கண்டறியப்பட்டது. இத்திருட்டு குறித்து உடனடியாக காவல்துறையிடம் முறையிடப்பட்டதன் பேரில், திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், துணை ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர், விரல் ரேகை நிபுணர் பிரம்மநாயகம் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிகழ்வு காரணமாக, நேற்று காலையில் எல்.கே.லெப்பைத்தம்பி சாலை பரபரப்புடன் காணப்பட்டது.
கடந்த சில நாட்களில் மட்டும் காயல்பட்டினத்தில் - பள்ளிவாசல், இறைச்சிக்கடை என பல இடங்களில் திருட்டு முயற்சி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற திருட்டு நிகழ்வுகளின்போது - அது சிறியதோ, பெரியதோ, உடனடியாக காவல்துறையிடம் முறையிடப்பட்டால்தான், குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க இயலும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தகவல் உதவி & படங்கள்:
A.K.இம்ரான் |