போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் (டிசம்பர் மாத) சாதாரண கூட்டம், 19.12.2012 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நகர்மன்றக் கூட்டம் நடைபெற குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு (6 உறுப்பினர்கள்) கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு விதி இருக்க, 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகிய 3 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டதால், கோரம் இல்லை என்று கூறி, கூட்டத்தை ஒத்திவைப்பதாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அறிவித்தார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்த வீடியோ காட்சிகள்: பாகம் 1 பாகம் 2
பின்னர் நகர்மன்றக் கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், நடப்பு கூட்டத்திற்கான கூட்ட நிரல் (அஜெண்டா) தயாரிக்கப்பட்டு, நகராட்சி ஊழியர் அந்தோணி மூலம் முறைப்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்
ஆகியோர் மட்டுமே அவற்றைப் பெற்றுக்கொண்டு கைச்சான்றிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதர உறுப்பினர்கள் கூட்ட நிரலைப் பெற்றுக்கொள்ளவில்லை என நகராட்சி ஊழியர் எழுத்து மூலம் தெரிவித்துள்ள அறிக்கையை நகர்மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் அளித்தார்.
நடப்பு கூட்டத்தில் 3 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும், இதர உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததற்கு எவ்வித காரணத்தையும் தன்னிடமோ, ஆணையரிடமோ தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதை ஆமோதித்துப் பேசிய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், இம்மாதம் 30ஆம் தேதியன்று கூட்டத்தை நடத்த வாய்மொழியாக சில உறுப்பினர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.
உயிர்க்கொல்லி புற்றுநோய் காயல்பட்டினத்தைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில், காயல்பட்டினத்தில் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்தும், இதர நகர்நல கோரிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்ததாகவும், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகிய உறுப்பினர்கள் இக்கூட்டத்திற்கு தமது கோரிக்கைகளை சமர்ப்பித்திருக்க, அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது தனக்கு வியப்பளிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சந்தித்துப் பேசிய வீடியோ பதிவுகள் வருமாறு:-
பாகம் 1 பாகம் 2
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டதால், ஜெனரேட்டர் துணையுடன் நிகழ்வுகள் நடைபெற்றன. எனினும், நண்பகல் 12.30 மணியளவில் ஜெனரேட்டர் திடீரென நின்றுபோனது. உடனடியாக சரிசெய்ய இயலாத அளவுக்கு பழுது ஏற்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு மின் வினியோகம் இல்லா நிலையிலேயே நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுமார் 10 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
|