கடந்த சில காலமாக தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்பு பரவலாகக் காணப்பட்டு வருகிறது. இவ்வகை காய்ச்சல் வராது தடுக்கவும், காய்ச்சல் கண்டோருக்கு சிகிச்சையாகவும், சித்த மருத்துவ அடிப்படையிலான மருந்துகள் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மருந்துகளில் ஒன்றான நிலவேம்புக் குடிநீர், தமிழகமெங்கும் வழங்கப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஜலாலிய்யாநிகாஹ் மஜ்லிஸ் வளாகத்தில், நிலவேம்புக் குடிநீர் இலவச வினியோக முகாம், இம்மாதம் 16, 17 (ஞாயிறு, திங்கள்) தேதிகளில் - காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை வழங்கப்பட்டது.
16.12.2102 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09.00 மணியளவில் முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் துவக்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், அதன் முன்னாள் தலைவர் ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற துணைத்தலைவர் பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், மன்ற உறுப்பினரும் - சித்த மருத்துவருமான டாக்டர் எஸ்.எம்.என்.செய்யித் முஹ்யித்தீன் - சித்த மருத்துவத்தின் சிறப்பு, டெங்கு காய்ச்சலின் தன்மை, நிலவேம்புக் குடிநீரின் மகத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசினார்.
முன்னதாக, நகரில் நோய்கள் பரவாமல் பாதுகாப்புத் தேடும் பொருட்டு துஆ - பிரார்த்தனை செய்யப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் துஆ இறைஞ்சினார்.
பின்னர் துவங்கிய முகாமில், பெயர் முன்பதிவு செய்த 866 ஆண்கள், 2352 பெண்கள் என - அனைத்து சமயங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் மருந்து இலவசமாக வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் முகாமில், பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க முன்பதிவு செய்யாத பொதுமக்களுக்கும் மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் முகாமில் சுமார் 3000 ஆண்-பெண்கள் பங்கேற்றனர். 7000 பேர் அருந்தும் வகையில் மண் பானைகள் மூலம் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்ட மருந்து திரவத்தை அனைவரும் பெற்றுப் பருகியதுடன், தமது உறவினர்களுக்கும் எடுத்துச் சென்றனர். தயாரிக்கப்பட்ட மருந்தின் அடியிலிருந்த சக்கை கூட முகாமில் மிஞ்சவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகாமின்போது உறவினர்களுக்கு மருந்து எடுத்துச் செல்வதற்காக ப்ளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வந்தோருக்கு அறிவுரை வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் ப்ளாஸ்டிக்கைத் தவிர்த்து, உலோக பாத்திரங்களைக் கொண்டு வந்து மருந்து பெற்றுச் சென்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் முகாமில் கலந்துகொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், துணைச் செயலாளர் வாவு கே.ஏ.ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட மன்ற அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல்:
H.M.செய்யித் அஹ்மத்
செய்தித் தொடர்பாளர்
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
காயல்பட்டினம். |