காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (நாளை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நாடறிந்த நாவலரும், தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களுள் ஒருவரும், காயல்பட்டினத்தில் பன்னூற்றுக் கணக்கான மார்க்க அறிஞர்கள் உருவாகக் காரணமானவரும், காயல்பட்டினத்தில் கலை - இலக்கிய ஆர்வலர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரும், எமது கத்தர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர் நூருத்தீன் அவர்களின் தந்தையும், உறுப்பினர் ஜெய்லானீ அவர்களின் மாமாவும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் கண்ணியத்திற்குரிய முதல்வருமான மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ அவர்கள் இன்று நள்ளிரவில் வஃபாத்தான செய்தியறிந்து மிகவும் கவலையுற்றோம்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொருத்தருளி, அன்னாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனபதியை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் மறைவு நம் சமுதாயத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் எங்கள் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினருக்கும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்கள் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள துஆ இறைஞ்சுகிறோம்.
இவ்வாறு கத்தர் காயல் நல மன்ற செய்தித் தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |