வரும் பிப்ரவரி மாதம் 01ஆம் தேதியன்று ஒருநாள் ஊதிய நன்கொடை நாளாகும் என சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 11.01.2013 வெள்ளிக்கிழமையன்று 20.00 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
மன்ற உறுப்பினர் சோனா அபூபக்கர் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.அஹ்மத் ஃபுஆத் – கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
துவக்க காலங்களில் 6 முதல் 7 உறுப்பினர்களை மட்டுமே மன்றம் கொண்டிருந்ததாகவும், வெகு குறுகிய காலத்திலேயே இறையருளால் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இம்மன்றம் தற்போது ஏராளமான உறுப்பினர்களுடன் காட்சியளிப்பதைப் பார்க்க பரவசமாக உள்ளதாகவும் அவர் கூறியதுடன், மன்றத்தின் நடப்பு நகர்நலப் பணிகள் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் அனைத்தும் சிறந்தோங்க வாழ்த்துவதாகவும் கூறினார்.
மகவு பிறப்பையொட்டி மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
பின்னர், மன்ற உறுப்பினர் கே.எஸ்.நூருல் அமீன், தனக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்த செய்தியை கூட்டத்தில் அறிவித்து, தனது மகிழ்ச்சியை அனைவருடனும் பரிமாறிக்கொண்டார். அனைத்து உறுப்பினர்களும் - அவரையும், அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தினர்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.உமர் ரப்பானீ சிற்றுரையாற்றினார். முதியோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மன்றத்தின் செயல்திட்டங்களுள் ஒன்றான - முதியோர் சமூக நலத் திட்டம் என்பது காயல்பட்டினத்தில் தற்காலத்தில் மிகவும் அவசியமான திட்டம் என அவர் கூறினார்.
செயலர் உரை:
பின்னர், மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அக்கூட்டத்தின் முடிவுகள் செயல்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விரைவில் தமது படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெற்றிடும் பொருட்டு, சென்னையில் - தங்குமிடம் மற்றும் உணவு உட்பட அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க மன்றம் ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வகைக்காக விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் kwasingapore@hotmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தமது முழு சுய விபரங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மன்றம் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
ஆலோசகர் உரை:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் சிற்றுரையாற்றினார். மன்ற உறுப்பினர்கள் - அவ்வப்போது அவர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை குறித்த கால நிர்ணயத்திற்குள் சிறப்புற செய்து முடிப்பதை அவர் தனதுரையில் பாராட்டிப் பேசினார்.
நிதிநிலை முன்னறிக்கை:
பின்னர், 2013ஆம் ஆண்டிற்கான - மன்றத்தின் நிதிநிலை முன்னறிக்கையை (Forecast Budget), மன்ற உறுப்பினர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் தலைமையிலான குழு - பவர் பாய்ண்ட் துணையுடன் கூட்டத்தில் சமர்ப்பித்ததுடன், அதுகுறித்து விரிவான விளக்கங்களை வழங்கியது.
இறையருளால், அனைத்துறுப்பினர்களின் பேராதரவுடன், இந்நிதிநிலை முன்னறிக்கை படி மன்றத்தின் செயல்திட்டங்கள் நடப்பாண்டில் செவ்வனே செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுமென கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கணக்குத் தணிக்கை:
மன்றத்தின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பு மன்றத்தின் நடப்பு பருவ துணைக்குழு உறுப்பினர்களான எம்.ஜெ.செய்யித் அப்துல் ரஹ்மான், ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோரிடம் அளிக்கப்பட்டதுடன், நடப்பாண்டு பிப்ரவரி மாத செயற்குழுக் கூட்டத்தில் அவர்கள் கணக்குத் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இக்ராஃவுக்கான பங்களிப்பு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கான - இன்றளவிலான மன்றத்தின் கல்வி உதவித்தொகை மற்றும் சந்தா பங்களிப்புகள் குறித்து, மன்ற செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.எம்.அப்துல் காதிர் விளக்கிப் பேசியதுடன், நடப்பு 2013ஆம் ஆண்டிற்கான இக்ராஃவின் சந்தா தொகைகளை குறித்த காலத்தில் உறுப்பினர்கள் வழங்கியொத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு:
பல்வேறு தேவைகளுக்காக உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடப்பு குழுவினராக - மன்ற உறுப்பினர் ஏ.எம்.உதுமானை தலைவராகக் கொண்டு, ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர், எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ, எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர் ஆகியோரைக் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட அறிக்கையை இக்குழு வரும் பிப்ரவரி மாத செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஒருநாள் ஊதிய நன்கொடை நாள்:
வரும் பிப்ரவரி மாதம் 01ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாளை மன்றத்தின் “ஒருநாள் ஊதிய நன்கொடை” நாளாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்றும், அதனடிப்படையில், 2013ஆம் ஆண்டின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது நன்கொடை தொகைகள் உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகரின் ஏழை - எளியோர் நலனுக்காகவும், நகர்நலப் பணிகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு கடந்தாண்டில் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் மனப்பூர்வமான வரவேற்பு கிடைக்கப்பெற்றதாகவும், அதற்காக அனைத்துறுப்பினர்களையும் மன்றம் மனதார பாராட்டுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலச்சினை - முழக்கம் ஆயத்தப் பணிகள்:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கான இலச்சினை மற்றும் முழக்கம் (Logo & Slogan) ஆகியன ஆயத்தம் செய்யும் பணி, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் தலைமையில், ஏ.எம்.உதுமான், கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய், ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரடங்கிய குழுவால் செய்யப்பட்டு வருவதாகவும், சிங்கப்பூர் அரசு பதிவகத்தில் அவற்றை சமர்ப்பிக்கும் பொருட்டு - இலச்சினை மற்றும் முழக்கத்தை வடிவமைத்து இறுதி செய்யும் பணியை மேற்குறிப்பிடப்பட்ட குழுவிடம் ஒப்படைப்பதாகவும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.
முதியோர் சமூக நலத்திட்டம்:
மன்றத்தால் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ள - “முதியோர் சமூக நலத் திட்டம்” குறித்த நடைமுறை சாத்தியங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்ந்தறிந்து, வரும் பிப்ரவரி மாத செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க, மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமையில், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத், ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர், சோனா அபூபக்கர் சித்தீக் ஆகியோரடங்கிய குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
வரும் பிப்ரவரி மாத மன்றத்தின் செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக சோனா அபூபக்கர் சித்தீக் நியமிக்கப்பட்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்றத்தின் நடப்பு பருவ துணைக்குழு உறுப்பினர் எம்.ஜெ.செய்யித் அப்துல் ரஹ்மான் துஆவுடன், 22.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு - துணைக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |