குடிநீர் கட்டணம் நிலுவையின்றி இருந்தால் மட்டுமே புதிய குடிநீர் வினியோக திட்டத்தின் கீழ் பகிர்மான குழாயில் இணைப்பு தரப்படும் என காயல்பட்டினம நகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியில் புதிய குடிநீர் வினியோக மேம்பாட்டுத் திட்டம் ரூ.29.67 கோடியில் மேற்கொள்ள வேலை உத்தரவு வழங்கப்பட்டு, பணி துவங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் உள்ள பகிர்மான குழாய்கள் மாற்றப்பட்டு, புதிய பகிர்மான குழாய் D.I.Pipe மூலம் மாற்றியமைக்கப்படவுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளுக்கான பழைய இரும்பு குழாய்கள் அகற்றப்பட்டு, புதிதாக இணைப்புகள் அனைத்தும் துருப்பிடிக்காத எம்.டி.பி.இ. (MDPE) குழாய்களைப் பயன்படுத்தி, நகராட்சியின் மூலம் மீண்டும் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே, குழாய் இணைப்புக்கு 31.03.2013 வரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக நகராட்சியில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
குழாய் இணைப்பை மீண்டும் பகிர்மான குழாயில் இணைப்பு ஏற்படுத்த, குடிநீர் கட்டணம் நிலுவையின்றி செலுத்திய ரசீது இருந்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும். தவறும்பட்சத்தில், குழாய் இணைப்பு வழங்கப்படாத்து மட்டுமின்றி, குடிநீர் வினியோக உபவிதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |