நடப்பாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுத ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் - காயல்பட்டினம் ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் ‘நாவலர்’ ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.
ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் இயக்குநரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் மாணவ-மாணவியரை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.
நகரின் கல்வியாளரும், சமூக ஆர்வலருமான எல்.டி.இப்றாஹீம் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அரசுத் தேர்வை புதிதாக சந்திக்கவுள்ள மாணவ-மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் ஊக்கவுரை வழங்கினார்.
நிறைவில், கடந்தாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற - ரஃப்யாஸ் பள்ளியின் முன்னாள் மாணவரும், கமலாவதி மேனிலைப்பள்ளியின் மாணவருமான பாலாஜியைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சித் தலைவர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் பரிசை வழங்கினார்.
அதுபோல, கடந்தாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500க்கு 477 மதிப்பெண்கள் பெற்ற – ரஃப்யாஸ் பள்ளியின் முன்னாள் மாணவியும், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியும், அப்பள்ளியின் ஆசிரியை நூர் ஜஹான் மகளுமான ஹமீதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், பள்ளி ஆண்டு விழாவின்போது பரிசு வழங்கப்படவுமுள்ளது.
பின்னர், சாதனை மாணவர் பாலாஜியின் தாயாரும், ஹிந்தி மொழி ஆசிரியையுமான ஆனந்தி, மாணவ-மாணவியரை வாழ்த்தி உரையாற்றினார்.
நிறைவில், நிகழ்ச்சித் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினருக்கு, பள்ளி இயக்குநரும் - நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் சால்வை வழங்கி கண்ணியப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் 1999 முதல் 2001 வரை பயின்ற மாணவ-மாணவியர் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பள்ளியின் சார்பில் தயாரிக்கப்பட்ட கல்வி வழிகாட்டு நூல் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஏ.எஸ்.புகாரீ மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன் |