தமிழகத்தில் இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் கடற்கரையில், 15, 16 (செவ்வாய், புதன்) தேதிகளில் பெரும் மக்கள் திரள் காணப்பட்டது. முன்னதாக - மக்கள் திரள் காரணமாக கடற்கரையில் சீர்கேடுகள் எதுவும் நிகழாவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு காவல்துறையினரிடம் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதனையடுத்து, காயல்பட்டினம் கடற்கரையில் அந்நாட்களில் ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையில், துணை ஆய்வாளர்களான ஷ்யாம் சுந்தர், ராஜகுமாரி, சண்முகவேல் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, இரு சக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்களை கொச்சியார் தெருவிலும், அதற்குப் பிறகு சொளுக்கார் தெரு - முத்துவாப்பா தைக்கா தெருவிலும் நிறுத்தச் செய்தனர். அனைத்து தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட பின்னர், ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், இளைஞர் ஐக்கிய முன்னணி - குருவித்துறைப் பள்ளி சுவரோரத்தில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்தனர்.
காவல்துறையினருடன், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், ஏ.கே.இம்ரான் உள்ளிட்ட குழுவினர் துணைப்பணியாற்றினர்.
இச்சிறப்பு ஏற்பாடு காரணமாக, பொதுமக்கள் எவ்வித சிரம்முமின்றி கடற்கரைக்கு வந்து சென்றனர். வாகனங்கள் உரிய இடங்களில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் எதுவுமின்றி சீராக அமைந்திருந்தது. |