சவுதி அரேபியா - ஜித்தா, கடந்த 11.01.2013 வெள்ளிக்கிழமை ஜித்தாவில் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 69-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 69-ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 11.01.2013 வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் மன்றத்தலைவர் சகோ. குளம் எம்.எ.அஹமது முஹிய்யதீன் இல்லத்தில் நடைபெற்றது. சகோ.எஸ்.ஹெச். ஹுமாயூன் கபீர் தலைமை தாங்க, பொறியாளர் அல்ஹாபிழ் எஸ்.எம்.செய்கு ஆலம் இறைமறை ஓதி துவக்க, சகோ.குளம் எம்.எ அஹமது முஹிய்யதீன் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
தொடர்ந்து தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ.எஸ்.ஹெச். ஹுமாயூன் கபீர்; 'நாம் ஒன்றுபட்டு செலுத்தும் சிறு சந்தாவானது ஒரு பெரும் தொகையாக பல ஏழைகளை சென்றடைகிறது என்றும்; அதன் மூலம் இறைவன் புறத்திலிருந்து நாம் பெறும் பலன் மிக உயர்வானது என்றும் கூறினார். மேலும்; 'நாம் சந்தாக்களில் அதிக கவனம் எடுத்து இன்னும் கூடுதலாக பல ஏழைகளுக்கு உதவிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என வேண்டி நல்ல பல கருத்துகளை தந்து அமர்ந்தார்.
தாயகத்திலிருந்து ஜித்தா வந்துள்ள சகோ ஹாஜி கே.வி.எம்.எம்.முஹம்மது அப்துல் காதர் அவர்கள் இச்செயற்குழுவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்ட அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை மன்ற செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் விபரமாக எடுத்துக்கூறினார்.
மன்றத்தின் சீரிய பணிகள் மற்றும் நடக்கவிருக்கும் பொதுக்குழு குறித்து அறியத்தந்த மன்றச்செயலாளர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம்; குடும்ப சங்கமமாக நாம் நடத்தவிருக்கும் நம் மன்ற பொதுக்குழு குறித்த உறுப்பினர்களின் கருத்துக்களை கூறுமாறு வேண்டிக்கொண்டார். அப்பொதுக்குழு சம்பந்தமாக சிறப்பு ஆலோசனைக்கூட்டம் விரைவில் மக்காவில் நடைபெற உள்ளதாக கூறிய அவர்; மக்கா காயலர்கள் தவறாது அக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றும், உறுப்பினர்களின் உயரிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து, வரும் பொதுக்குழுவை மிகச்சிறப்பாக நாம் நடத்த வேண்டுமென்றும் கூறினார். அதற்கான பணிகளை நாம் இப்போதே துவக்கி உறுப்பினர்களை களப்பணிகளில் தயார் படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு பேச்சை நிறைவு செய்தார்.
வரவேண்டிய சந்தாக்கள், பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் விடுப்பு போன்ற முழு விபரங்களையும் நிதி நிலை அறிக்கையாக சமர்பித்தார் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் மற்றும் ஜமாத் பரிந்துரையின்படி வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு; சிறுநீரகத்தில் கல், குடல் இறக்கம் அறுவை சிகிச்சை, சக்கரை நோய், இருதய அறுவை சிகிச்சை, கர்பப்பை புற்று நோய் சிகிச்சை என பாதிப்புக்குள்ளான நான்கு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவுசெய்யப்பட்டு, அவர்களின் பூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
தீர்மானம்:
இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி முதல் மாலை 08:00 மணி வரை 'மன்றத்தின் 29-வது பொதுக்குழு, 11-ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் 6-ஆவது அமர்வுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு' என அனைத்து நிகழ்வுடன் "காயலர் குடும்ப சங்கம" நிகழ்ச்சியாக இப்பொதுக்குழுவை நல்ல முறையில் சிறப்பாக நடத்திட முடிவுசெய்யப்பட்டது.
அச்சங்கம நிகழ்வில்; நம் காயலின் பசுமை மாறா நினைவுகளை நினைவூட்டும் முகமாக வெளியரங்க விளையாட்டு போட்டிகள், உள்ளரங்க அறிவுச்சார் போட்டிகள் மற்றும் ஆண்கள்,மகளிர் மற்றும் மழலைகள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளை செம்மைபடுத்தி ஏற்பாடுகளை நலமே செய்ய ஏற்பாட்டுக் குழுவும், போட்டிகளை முறையாக சிறப்பாக நடத்த போட்டிக்கான வழிகாட்டு குழுவும் இன்னும் சில முக்கிய விழா குழுக்களும் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் தேவைக்கு தொடர்பு கொண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவும் வேண்டிக்கொள்ளப்பட்டது.
நன்றி நவிலல்:
சகோ. நஹ்வி எ.எம்.ஈசா ஜக்கரியா நன்றி கூற சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
கூட்டத்திற்கான முழு அனுசரணையை சகோ. குளம்,எம்.எ.அஹமது முஹிய்யதீன் நல்லபடி செய்து இருந்தார். கூட்ட ஏற்பாடுகளை சகோ. சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி மற்றும் அல்ஹாபிழ் எஸ்.எம்.செய்கு ஆலம் சிறப்புடன் செய்து இருந்தனர்.
தகவல் மற்றும் படங்கள்:
ஜி.கா.ந.ம.சார்பாக
எஸ்.ஹெச்.அப்துல் காதர் மற்றும்
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் |