புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு நவீன சிகிச்சைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது:
மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதுடன், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நவீன சிகிச்சைகளை அளிக்கும் பொருட்டு, மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையிலும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி, மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 10 கோடி ரூபாய், கட்டடம் கட்டுவதற்காக 3 கோடியே 2 லட்சம் ரூபாய், 48 புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே 24 லட்சம் ரூபாய் என 14 கோடியே 26 லட்சம் ரூபாயும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் அமைப்பதற்காக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 10 கோடி ரூபாய், கட்டடம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய், 46 புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே 37 லட்சம் ரூபாய் என 14 கோடியே 37 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 28 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், புற்றுநோய்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் தேசிய புற்றுநோய், நீரிழிவு, இதயநோய்கள் (Cardio Vascular diseases) தடுப்புத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மாநில அரசின் பங்களிப்பான 1 கோடியே
20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இந்தியாவிலேயே தலை சிறந்த ஆய்வுக் கூடங்களில் ஒன்றான சென்னையிலுள்ள கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு புத்துயிர் அளித்து, மீண்டும் அங்கு தடுப்பு ஊசி உற்பத்தியை தொடங்குவதற்கும், அங்கு திசு வங்கி அமைப்பதற்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி, கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு 7 கோடியே 42 லட்சம் ரூபாய், திசு வளர்ச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஏற்படுத்த 1 கோடி ரூபாய், திசு வங்கி அமைப்பதற்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை - 9. |