DCW ஆலை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 12, சனிக்கிழமை அன்று ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது. அக்கூட்டம் குறித்து - கூட்ட ஏற்ப்பாட்டாளர்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ளட் அறிக்கை வருமாறு:
காயல்பட்டணம் நகர எல்லைக்குள் அமைந்துள்ள DCW ஆலை குறித்து நமதூரில் அண்மையில் தீவிரமாக எழுந்த எதிர்ப்பினை தொடர்ந்து, அந்நிறுவாகத்தின் சார்பில் நகர்மன்றத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அக்கடிதத்தில் தங்கள் நிலை குறித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும், அதற்காக நகர்மன்றத்தினர் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நகர்மன்றத்தினர் இவ்விசயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்ற ஆலோசனையை பெறுவதற்கு, அனைத்து ஜமாஅத்துக்கள, புறநகர் ஊர் கமிட்டிகள், முஸ்லிம் ஐக்கிய பேரவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
12-01-2013 சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் இக்கூட்டம் நடைபெற்றது.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அல்ஹாஜ் M.M. உவைஸ் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள்.
அல்ஹாஜ் S.M. ஃபாஸி, அல்ஹாஜ் S.M.உஸைர், அல்ஹாஜ் S.O.அபுல் ஹஸன் கலாமி, அல்ஹாஜ் A.A.C. நவாஸ் அஹ்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அல்ஹாஃபிழ் M.M. முஜாஹித் அலி இறைமறை ஓதி இக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.
நகர்மன்ற உறுப்பினர் திரு.E.M.சாமி வரவேற்புரையாற்றினார். கூட்டம் குறித்த அறிமுகவுரையை நகர்மன்ற உறுப்பினர் சகோ.K.ஜமால் வழங்கி, கூட்டத்தை நெறிப்படுத்தினார்.
முன்னதாக நகர்மன்ற உறுப்பினர்களின் சார்பில், DCW ஆலை பற்றி தங்கள் நிலைபாடு குறித்தும், ஆலையில் இருந்து வந்திருக்கும் அழைப்பு கடிதம் குறித்தும் விளக்கிடும் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து DCW-வில் இருந்து நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வந்த கடிதத்தையும், உறுப்பினர்களின் சார்பில் ஆலை நிர்வாகத்திற்கு எழுதப்பட்ட பதில் கடிதத்தையும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
அடுத்து கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை விரிவாக பதிவு செய்தனர். நிறைவாக கூட்டத் தலைவர் மற்றும் முன்னிலை பொறுப்பேற்றோர் வழங்கும் ஆலோசனையை தீர்மானமாக ஏற்பதென முடிவாகியது.
முன்னிலை வகித்தோர்களில் ஒருவராகிய அல்ஹாஜ். A.A.C. நவாஸ் அஹ்மது, தலைவர் மற்றும் முன்னிலை வகித்தோர்களின் சார்பில் தன்னுடைய பரிந்துரையை, கலந்து கொண்டோர் கருத்தறிந்து பதிவு செய்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அவரது பரிந்துரைகளை ஏற்க, அவை தீர்மானமாகின.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
* DCW ஆலையை துறை சார்ந்த அறிவியல் ஆய்வாளர்களை கொண்டு முறையாக நம்முடைய சார்பில் ஆய்வு செய்யும் காலம் வரும் வரை, அந்த ஆலையில் இருந்து நகர்மன்றத்திற்கோ, மற்ற எந்த அமைப்புக்களுக்கோ வருகின்ற பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களை தவிர்க்க வேண்டுமென, அனைவரையும் வலியுறுத்தி கேட்டு, இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
* DCW ஆலைக்கெதிரான நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்தவும், வலுப்படுத்தவும் குழு ஒன்றை அமைப்பதெனவும், அக்குழுவில் ஊரின் பொதுஅமைப்பான ஐக்கிய பேரவை, ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நகர்மன்றத்தினர், இவ்வாலைக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் இயக்கமான சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு இவைகளின் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்வதெனவும், ஒவ்வொரு அமைப்பிலும் 3 பேர் வீதம் மொத்தம் 9 நபர்களை கொண்ட குழுவாக இதுசெயல்படும் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நகர்மன்ற உறுப்பினர் சகோ.ஜஹாங்கிர் நன்றி நவில, அல்ஹாஜ் A.R.லுக்மான் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
எஸ்.ஆர்.பி. ஜஹாங்கிர் |