அருமையான ஆக்கம் posted byMohamed Buhary (Chennai)[24 September 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 37478
நண்பர் எஸ்.கே. சாலிஹின் ஆக்கம் மிக அருமை. நானும் NSE ORGANIC FOOD STORE சென்று பல பொருட்களை கொள்முதல் செய்தேன். காலத்தின் தேவை கருதி நமது உணவுப் பழக்கவழக்கங்களை நெறிப்படுத்த வேண்டும்.
உணவே மருந்தாக அமைய வேண்டும். அப்போதுதான் கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற இயலும். அதற்கு இது போன்ற விஷம் கலக்காக உணவுப் பொருட்களை உபயோகிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Buhary (Chennai)[19 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 33241
Delivery to the following recipient failed permanently:
msra@rb.railnet.gov.in
Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain rb.railnet.gov.in by mail.rb.railnet.gov.in. [122.252.243.146].
The error that the other server returned was:
550 5.1.1 : Recipient address rejected: User unknown in relay recipient டேபிள்
மேற்குறிப்பிட்ட வாசகங்கள் மின்னஞ்சல் வழியாக உரியவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் msra@rb.railnet.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு போய்ச்சேரவில்லை.
ஆரோக்கியமான கருத்துரையாடல் தேவை posted byMohamed Buhary (Chennai)[06 October 2013] IP: 14.*.*.* India | Comment Reference Number: 30553
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறவுள்ள பிறை ஆய்வரங்கம் சிறப்பாக நடைபெற துஆக்களும் வாழ்த்துக்களும்...
பொதுவாக, நம்மிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளை அழகிய முறையில் பரிமாறுவதே நாகரிகமாகும். அதை விடுத்த ஒரு சாரார் பிறிதொரு சாராரை கடும்போக்குடன் எதிர்கொள்வது இஸ்லாமிய நாகரிகமன்று. இதை நாம் எல்லோரும் மனதில் கொள்வது அவசியத்திலும் அவசியம்.
மார்க்கச் சட்ட விவகாரங்களைப் பின்பற்றும் விஷயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்துகள் இருப்பின், அவற்றை நிதானமாகவும் விவேகமாகவும் நளினமாகவும் எடுத்துரைப்பதை அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்கச் சட்ட விவகாரங்கள் (ஃபிக்ஹுஷ் ஷரீஆ) அரசியலாக்கப்படக் கூடாது. மாற்றுக் கருத்துகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதில் உள்ளூர் பிறையா? அல்லது சர்வதேசப் பிறையா? அல்லது கணிப்பீட்டுப் பிறையா? என்பதைவிட என் கருத்து பெரிதா? உன் கருத்து பெரிதா? என்ற கருத்து யுத்தம்தான் மேலோங்கி நிற்கிறது.
இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள் விவாதித்து தீர்வு காண வேண்டிய விவகாரங்களையெல்லாம் இன்று பொதுமக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாற்றுவதும், அரைகுறையான போக்கிலேயே கொண்டுபோய்ச் சேர்க்கும்.
எனவே, அழைப்பாளர்கள் இது குறித்து ஆழமாக யோசித்து உங்கள் கருத்தை அழகிய முறையில் சிறப்பாக எடுத்துவைப்பீர்கள் என நம்புகிறேன்.
கான் பாகவியின் தினமணி ஆசிரியர் கடிதம் posted byMohamed Buhary (Chennai)[19 September 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 30203
அண்மையில் தமிழகத்தில் அறியப்பட்ட பிரபல மார்க்க அறிஞர் கான் பாகவி அவர்களின் முகநூல் பக்கத்தில் படித்த கடிதம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன்.
தினமணி ஆசிரியருக்கு ஒரு கடிதம்
1975ஆம் ஆண்டிலிருந்து தினமணி நாளேட்டை விரும்பிப் படித்துவரும் வாசகன் நான். தினமணியின் 80 ஆண்டுகால வரலாற்றில் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தொடர்புள்ளவன்.
தினமணி வாயிலாகவே உலக அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், சமயம், நாட்டு நடப்புகளை அறிந்தவன். செம்மொழியாம் தமிழ்மொழியை நான் கற்றதே தினமணியிடம்தான். பிழையின்றி பேசவும் எழுதவும் கற்றுக்கொடுத்த ஆசிரியர் என்னைப் பொறுத்தவரை தினமணியே.
என் கட்டுரைகள், கடிதங்கள் பல தினமணியில் நிறைய வெளிவந்துள்ளன. என் முதலாவது ஆக்கம், ஐயா ஏ.என். சிவராமன் அவர்கள் காலத்தில் வெளிவந்தது. காலம் சென்ற என் தந்தையும் தினமணியின் நீண்டகால வாசகரே. என் பெரிய தந்தை ஒருவரை ‘தினமணி பெரியப்பா’ என்றே நாங்கள் அழைப்போம்.
தினமணியின் தனிச் சிறப்பே, அதன் செய்திகளில் இருந்த நம்பகத் தன்மைதான். நல்லிணக்கம், மதச்சார்பின்மை, கட்சி அல்லது குழு சார்பற்ற நிலை, நடுநிலைப் போக்கு, நளினமான நடை, கண்ணியமான எழுத்து, நல்ல தமிழ் முதலான அம்சங்களால் தமிழ் இதழ்களில் தினமணிக்குத் தனிஇடம் இருந்தது.
அண்மைக் காலமாக –குறிப்பாக கே. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பை ஏற்றதிலிருந்து- தினமணி தன் பாரம்பரிய கண்ணியத்தை இழந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. செய்திகள், தலையங்கம், கட்டுரை… என எல்லாப் பகுதிகளிலும் ஒரு வக்கிரம் தெரிகிறது. செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. நடுநிலை வாசகர்களை முகம் சுழிக்கவைக்கிறது.
1. செய்திகள்: முன்பெல்லாம் செய்தியை செய்தியாகக் கொடுத்துவந்த தினமணி, இப்போது சொந்தக் கருத்தைச் செய்தியினூடே புகுத்துவது வெளிப்படையாகவே தெரிகிறது; செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டது. ஏதோ ஒரு புலனாய்வு வார இதழைப் படிக்கும் உணர்வுதான் சாமானிய வாசகனுக்கு ஏற்படுகிறது. ‘மெய்யாலுமா?’ ஓர் எடுத்துக்காட்டு!
ஒரு தேசிய – காந்திய நாளிதழ் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்? இன்றைய தினமணியை வாசிக்கும் யாரும், அது மாநில அளவில் அ.தி.மு.க.வையும் தேசிய அளவில் பா.ஜ.க.வையும் ஆதரிக்கும் பத்திரிகை எனச் சட்டெனக் கூறிவிடலாம்.
மதச் சிறுபான்மையினருக்கு –குறிப்பாக முஸ்லிம்களுக்கு- எதிரான, அவர்களைக் காயப்படுத்துகின்ற செய்திகளுக்கு இப்போதெல்லாம் தினமணி முன்னுரிமை அளிப்பது வெள்ளிடை மலை. ஒரு பயங்கரவாதச் செயலுக்கு யார் காரணம் என்பது உறுதியாவதற்கு முன்பே முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்கி முதன்மைச் செய்தியாக வெளியிட்டுவிட்டு, முஸ்லிம்கள் காரணமல்ல என்பது உறுதியானபின் ஓர் ஓரத்தில் முக்கியமே இல்லாமல் வெளியிடும் இரட்டை நிலை தினமணிக்கும் வந்துவிட்டது.
அவ்வாறே, உயர்சாதி இந்துக்களின் செய்திகள், நிகழ்ச்சிகள், புகைப்படங்களே இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அதிக முக்கியத்துவத்துடன் சமய விழாக்கள் அடிக்கடி சில பக்கங்களைப் பிடித்துக்கொள்கின்றன.
2. தலையங்கம்: தலையங்கம் சிலநேரங்களில் சிறப்பாக அமைந்துவிடுவதுண்டு. பெரும்பாலும், கட்சிக் கண்ணோட்டமே மேலோங்கி நிற்கிறது.
முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் கைங்கர்யமும் அவ்வப்போது நடக்கிறது. குற்றவாளிகளுக்கு மதம் ஏது? மத அடையாளத்தோடு ஏன் விமர்சிக்க வேண்டும்? குற்றத்தை அது உண்மையாக இருந்தால் – கண்டிக்க வேண்டியதுதானே?
3. கட்டுரைகள்: பெரிய எழுத்தாளர்கள், மொழி வல்லுநர்கள், துறைசார்ந்த அறிஞர்கள் ஆகியோரின் கட்டுரைகள் குறைந்துபோய், தரமோ சுவையோ இல்லாத கட்டுரைகளே பெரும்பாலும் ஆசிரியர் பக்கத்தில் இடம்பெறுகின்றன.
கட்டுரைகளிலும் கட்சி, மதம், சாதி ஆகியவற்றின் ஒருசார்பு நிலை அவ்வப்போது தெரிகிறது.
மொத்தத்தில் தினமணியின் தரமும் கண்ணியமும் சிறிதுசிறிதாக மங்கிவருவது நிதர்சனம். நடுநிலையான, உண்மையான, சார்பற்ற செய்திகளுக்காகத் தினமணி வாசகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில்தான், எமக்கு ஆறுதலாகவும் உற்சாகம் அளிக்கும் விதமாகவும் ‘தி ஹிண்டு’ குழுமத்திலிருந்து ‘தி இந்து’ எனும் தமிழ் நாளிதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. நான் அவ்விதழுக்கு ஆறு மாதச் சந்தா செலுத்திவிட்டேன். தினமணிக்கு விடை கொடுத்துவிட்டேன்.
இது நான் மட்டும் எடுத்த முடிவன்று. என்னைப் போன்ற ஏராளமான தினமணி வாசகர்கள் எனக்குத் தெரிந்து ‘தி இந்து’ நாளிதழுக்குச் சந்தா செலுத்தியுள்ளனர். இது வருத்தத்தோடும் வேறுவழியின்றியும் நான் எடுத்த கசப்பான முடிவாகும்.
இனியாவது தினமணி தன் போக்கை மாற்றிக்கொண்டு, பாரம்பரிய கண்ணியத்தைக் காக்க முன்வர வேண்டும் என்பதே என் அவா!
பிரிய மனமில்லாமல் பிரியும் வாசகன்
அ. முஹம்மது கான் பாகவி
16.09.2013
இஜ்திமா சிறக்க வாழ்த்துக்கள் posted byMohamed Buhary (Kayalpatnam)[06 April 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 26726
அண்மைக் காலமாக இஸ்லாமும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதை ஊடகங்களினூடாக அறிகிறோம். ஊடகங்களேகூட இது போன்ற விமர்சனங்களுக்குத் துணைபோவதையும் பார்க்கிறோம். இத்தகைய காலகட்டத்தில் முஸ்லிம்களாகிய நமக்கிடையே பொதுக்கருத்தை நோக்கிய பயணம் தொடங்கப்பட வேண்டும்.
காலங்காலமாக நம்மிடையே காணப்படும் வேற்றுமைகளையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதாலோ அல்லது ஒருவர் மற்றவரை விமர்சித்துக்கொண்டிருப்பதாலோ அல்லது ஒரு ஜமாஅத் மற்றொரு ஜமாஅத்தை குறை கூறிக்கொண்டிருப்பதாலோ நன்மைகள் பயக்கப்போவதில்லை. பொது எதிரிக்குத்தான் இதில் அதிக நன்மை.
எந்தவொரு ஜமாஅத்தாக இருந்தாலும், இஸ்லாம் இயம்பும் அடிப்படையான விஷயங்களில் ஒற்றைக் கருத்துடையதாகத்தான் காணப்பட வேண்டும். அடிப்படைக்கு மாற்றமாக இருக்கும் ஜமாஅத் சமூகத் தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவை. இன்றைய காலத்தில் ‘அவாமுந் நாஸ்’ எனப்படும் பாமர மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். யாரும் எதையும் கூறி, மழுப்பித் தப்பித்துவிட இயலாது; தப்பிக்கவும் விடமாட்டார்கள். உண்மை எது? பொய்மை எது? என்பதையும் தெளிவாக அறிந்துள்ளனர். ஆனால், அறிஞர்களிடையேதான் கருத்து யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது ஒரு விதமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது. தமது தரப்பு அணியினர் தம்மைவிட்டு விலகிவிடக் கூடாது என்பதற்காகச் செய்யப்படும் மூளைச் சலவை. இஃக்லாசும், இறையச்சமும் குறைந்தபோனதுதான் இதற்கான அடிப்படைக் காரணிகள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தொன்மையான இஸ்லாமியக் கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பெயர்போன காயல்பதியில் தப்லீஃக் ஜமாஅத்தின் மாபெரும் இஜ்திமா நடைபெறுகிறது. இந்த இஜ்திமா குறித்த விமர்சனங்கள் பல எழுந்தாலும், தப்லீஃக் சகோதரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது.
இந்த ஜமாஅத் காலங்காலமாக பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பெங்களூரு தப்லீஃக் மர்கஸுக்குச் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் தப்லீஃக் ஜமாஅத்தின் பணிகளும் சேவைகளும் தெரியவந்தது. ஒரு மஹல்லாவை இஸ்லாமிய அடிப்படையில் எவ்வாறெல்லாம் இயங்கச் செய்ய முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தப்லீஃக் ஜமாஅத் இதர ஜமாஅத்களோடு பொதுக் கருத்துகளில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தப்லீஃக் அல்லாத ஏனைய ஜமாஅத்தாரை சமூகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணும் போக்கு கைவிடப்பட வேண்டும். எல்லோரும் நம் சகோதரர்கள் என்ற நிலைக்கு வர வேண்டும். பொதுவான சமூகத் தீமைகளை அகற்றிட இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு இடைவெளியின்றி செயல்பட முன்வருவோமானால், நமக்கிடையே காணப்படும் கருத்து பேதங்கள் சன்னம் சன்னமாக குறைந்துபோகும். நமது முழுக் கவனமும் வளர்ச்சிப் பணிகளை நோக்கியதாகவே இருக்கும். இது குறித்து அவசியம் சிந்திக்க வேண்டும். இலங்கையில் செயல்படும் ஜம்இய்யத்துல் உலமா இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. தப்லீஃக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, ஸலஃபி ஜமாஅத் இணைந்ததொரு ஜம்இய்யத்துல் உலமா இங்கும் உருவாக்கப்பட வேண்டும். சமூகப் பணியில் களம் காணும் இளம் உலமாக்களும், சிந்தனையாளர்களும் காலத்தின் தேவை கருதி இந்தக் கருத்தை நோக்கி தங்களை நகர்த்த வேண்டும்.
தப்லீஃக் சகோதரர்களுக்கு இஜ்திமாவின் சிந்தனையாக இவற்றை முன்வைக்கிறேன். நாம் அனைவரும் பொதுக் கருத்தை நோக்கிய பயணத்திற்குத் தயாராக வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் தூய எண்ணங்களுடனும் செயல்பாடுகளுடனும் இணைப்பானாக. ஆமீன்.
வளர்கள் உங்கள் எழுத்துப் பணி, வாழ்த்துக்கள் posted byMohamed Buhary (Chennai)[01 April 2013] IP: 49.*.*.* India | Comment Reference Number: 26589
மரியாதைககுரிய கலாமி ஹாஜி அவர்களின் ‘எனது பயணம்’ என்ற தமிழாக்கம் வரவேற்புக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் உரியது. அல்லாஹ் அவர்களின் இந்தப் பணியை அங்கீகரிப்பானாக! எனப் பிரார்த்திக்கிறேன்.
எழுத்துத் திறமையும், அறிவாற்றலும், கூரிய சிந்தனை படைத்தவர்களும் ஏராளமாக காயல்பட்டினத்தில் உள்ளனர். தங்களின் ஓய்வு காலங்களை இது போன்ற எழுத்துத் துறைகளில் அவர்கள் பயன்படுத்தினால் எதிர்கால சந்ததினருக்கு இது சிறந்ததொரு வழிகாட்டலாக அமையும்.
பொதுவான தலைப்புகளில் இது போன்ற நூல்கள், கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதலாம். இதன் மூலம் சமூகத்தின் எல்லா மட்டத்தினரையும் நமது எழுத்து சென்றடைய வழிவகுக்கும்.
வெளிவந்துள்ள இந்நூல் வெளியீட்டு விழா, நூல் திறனாய்வு போன்றவற்றை காயல்பட்டினத்தில் நடத்த வேண்டும் என்பது என்னைப் போன்றவரின் பேரவா.
‘எழுத்து மேடை மையம்’ எனத் தொடங்கப்பட்ட புதிய இயக்கம், இது போன்ற எழுத்தாற்றல் படைத்தவர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிட முன்வர வேண்டும்.
சமூகத்திற்கு இது போன்ற அரிய நூல்களை நூலாசிரியர் தொடர்ந்து கொண்டவர வாழ்த்துகிறேன்.
மண்ணறை வாழ்வு ஒளிரட்டும posted byMohamed Buhary (Kayalpatnam)[18 February 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 25578
மரியாதைக்குரிய இக்பால் ஹாஜி அவர்களின் துணைவியாரின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மர்ஹூமாவின் பிழைகள் பொறுக்கப்பட்டு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அல்லாஹ் வழங்குவானாக என துஆ செய்கிறேன்.
அவர்களின் பிரிவால் துயருற்றுள்ள இக்பால் ஹாஜி உள்ளிட்ட, மக்கள் மருமக்கள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
أللهم اغفر لها أللهم ثبت لها
அல்லாஹும்மஃபிர் லஹா, அல்லாஹும்ம ஸப்பித் லஹா
(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! (வானவர்களின் விசாரணைக்குப் பதிலளிக்கும்போது) இவரை உறுதிப்படுத்துவாயாக.)
மார்க்க அறிஞர்களின் கவனத்திற்கு... posted byMohamed Buhary (Kayalptnam)[18 October 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 22899
சகோதரர், பஷீர் அவர்களின் கட்டுரையை வாசிக்கும் கண்கள் கண்ணீர் சிந்த வேண்டும். அந்த அளவுக்கு சமூகத்தின் அவலங்களை படம்பிடித்துக் காட்டியுள்ளார். எழுத்து மேடையில் கட்டுரை எழுதினோம் அல்லது கமெண்ட்ஸ் எழுதினோம் என்பதோடு நமது பாரத்தை இறக்கிவைத்து இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்தாகிவிட்டாச்சு என்றிருந்திடாமல், தீர்வை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது.
உலமாக்கள் மார்க்கச் சட்ட விவகாரங்களில் எப்போதும் முரண்பட்டுக்கொண்டிராமல் எல்லோராலும் தடுத்துநிறுத்தப்பட வேண்டிய சமூகத் தீமைகளை சமூக அவலங்களை எவ்வாறு களைவது என்பது பற்றி ஒன்றுகூடுங்கள். இதில் உங்களுக்கிடையே இருக்கும் அபிப்பிராய பேதங்களை, ’ஈகோ’க்களை மூட்டைக்கட்டி ஓரத்தில் போடுங்கள்.
தெருக்கோடியில் பற்றி எரிகின்ற நெருப்பை அணைக்காமல் என் வீட்டில் எரியவில்லை என வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால், என் வீடு எவ்வாறு தப்பிக்கும்?
சோதனை அல்லது வேதனை என்பது கெட்டவர்களுக்கு மட்டும்தான் என்ற மமதையுடன் இருந்தால், அது நம்மையும் பீடிக்கும் என்ற இறைவாக்கை மறந்துவிடக் கூடாது.
நீங்கள் (அல்லாஹ்வின்) வேதனைக்கு பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை. நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன், 8:25)
எனவே, மார்க்க அறிஞர்களாகிய உலமாப் பெருமக்களும், சமூக அந்தஸ்தில் உள்ள பெரியவர்களும்தான் இதற்கு பொறுப்பாளர்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்ற அச்சத்துடன் செயலாற்றிட முன்வாருங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross