சன் மூன் ஸ்டார் (எஸ்.எம்.எஸ்.) கோப்பைக்காக நடத்தப்பட்ட ஐவர் கால்பந்து (FUTSAL) போட்டியில், வி-யுனைட்டெட் அணி வெற்றி பெற்றுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகரின் சிறுவர்களிடையே கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் துவக்கப்பட்டது சன் மூன் ஸ்டார் கால்பந்து சுற்றுப் போட்டி. இந்த ஆண்டுடன் தொடர்ந்து நான்காமாண்டாக நடத்தப்பட்டு வரும் இச்சுற்றுப் போட்டியை தாய்லாந்து - பாங்காக் நகரிலுள்ள சன் மூன் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரரான சாக்கர் புகாரீ என்றழைக்கப்படும் எம்.எச்.புகாரீ குழுவினர் நடத்தி வருகின்றனர்.
நடப்பாண்டு போட்டிகள், 13.01.2013 முதல் 16.01.2013 வரை நடைபெற்றது. சி-யுனைட்டெட், ஸ்டார்க்ள் கய்ஸ், சோலார் பவர் கய்ஸ், வி-யுனைட்டெட், யூஃபா ஜூனியர்ஸ், காலரி பேர்ட்ஸ், ரீபோக் ஜாலி, பிஸ்மி கிஃப்ட் சென்டர் ஆகிய 8 அணிகள் பங்கேற்ற - லீக் முறையில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில், வி-யுனைட்டெட் அணியும், பிஸ்மி கிஃப்ட் சென்டர் அணியும் மோதின. இதில் வி-யுனைட்டெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்ற தலைவர் டாக்டர் எஸ்.ஓ.செய்யித் அஹ்மதுக்கு, ஆட்ட இடைவேளையின்போது ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
முன்னதாக, 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஐவர் கால்பந்துப் போட்டியும் நடைபெற்றது. இதில், பாங்காக் பால் பஸ்டர்ஸ், சி-யுனைட்டெட், ஸ்போர்ட்டிங் காயல் - ஏ, ஸ்போர்ட்டிங் காயல் - பி, மாஷாஅல்லாஹ் க்ரூப்ஸ், ரீபோக் ஜாலி, காயல் வெடெரன்ஸ், எல்.கே.ஸ்கூல் பாய்ஸ் ஆகிய 8 அணிகள் களம் கண்டன.
நாக்கவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதிப்போட்டியில், சி-யுனைட்டெட் அணியும், பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணியும் மோதின. போட்டியின் இறுதி வரை ஈரணிகளும் சமநிலையிலிருந்ததால், சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. இதில், சி-யுனைட்டெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
அன்றிரவு 07.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பாலப்பா முஹ்யித்தீன் அப்துல் காதிர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹிஷாம் புகாரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பாங்காக் எம்.ஏ.சி.இப்றாஹீம் அப்பரிசை வழங்கினார்.
அடுத்து, போட்டிகளில் நடுவர்களாகப் பங்கேற்ற - காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜமால், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மாணவர் இஸ்மாஈல், ஐக்கிய விளையாட்டு சங்க வீரர் இஸ்மாஈல் ஆகியோருக்கு, ஹாஜி எஸ்.எம்.உஸைர் சிறப்புப் பரிசுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து. சிறந்த முன்கள ஆட்டக்காரர்களுக்கான பரிசுகள், ஸ்டார்க்ள் கய்ஸ் அணியின் ஹாதீ, வி-யுனைட்டெட் அணியின் அகீல் ஆகிய வீரர்களுக்கும், இளம் நட்சத்திர வீரருக்கான பரிசு, காலரி பேர்ட்ஸ் அணியின் ஆதில் என்ற வீரருக்கும், ஜூனியர் அணி பயிற்சியாளருக்கான பரிசு ஸதக்கத்துல்லாஹ்வுக்கும் வழங்கப்பட்டது. பாங்காக் வாவு எஸ்.எச்.மொகுதூம் அப்பரிசுகளை வழங்கினார்.
சிறந்த முன்கள இளம் வீரருக்கான பரிசு, ரீபோக் ஜாலி அணியின் ஃபஹீம் என்ற வீரருக்கும், சிறந்த நடுக்கள வீரருக்கான பரிசு, சோலார் பவர் கய்ஸ் அணியின் ஜாஃபர் என்ற வீரருக்கும் வழங்கப்பட்டது. அப்பரிசுகளை, ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா வழங்கினார்.
ஆல் ரவுண்டருக்கான பரிசு, யூஃபா ஜூனியர்ஸ் அணியின் அஸ்ஹர் என்ற வீரருக்கும், சிறந்த தடுப்பாட்டக்காரருக்கான பரிசு, சி-யுனைட்டெட் அணியின் பன்னா என்ற வீரருக்கும், சிறந்த வீரருக்கான பரிசு, பிஸ்மி கிஃப்ட் சென்டர் அணியின் ஸதக்கத்துல்லாஹ் என்ற வீரருக்கும் வழங்கப்பட்டது. டாஸ் ஹோம் ஸ்டைல் நிறுவன அதிபர் நவ்ஃபல் அப்பரிசுகளை வழங்கினார்.
போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பூட் பரிசு, வி-யுனைட்டெட் அணியின் நவீத் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது. சன் மூன் ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் சாக்கர் புகாரீ அப்பரிசை வழங்கினார்.
அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடிய 64 வீரர்களுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. சன் மூன் ஸ்டார் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ்.ஹஸன் அவற்றை வீரர்களுக்கு வழங்கினார்.
பின்னர், இறுதிப்போட்டியில் வெற்றிக்கு முனைந்த பிஸ்மி கிஃப்ட் சென்டர் அணிக்கான பரிசை, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை வழங்கினார்.
இறுதிப்போட்டியில் வென்ற வி-யுனைட்டெட் அணிக்கான பரிசை, சிறப்பு விருந்தினரான - ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் வழங்கினார்.
17 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் வெற்றிக்கு முனைந்த பாங்காக் பால் பஸ்டர் அணிக்கான பரிசை கேப்டன் ஹபீப் வழங்கினார். வெற்றிபெற்ற சி-யுனைட்டெட் அணிக்கான பரிசை ஹாஜி இல்யாஸ் வழங்கினார்.
கலாமீ யாஸர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
பாங்காக் தங்ஙள் ஜெம்ஸ் எம்.ஏ.சி.இப்றாஹீம், ஜம் ஜம் ஜெம்ஸ் என்.எஸ்.ப்ரதர்ஸ், ஹாங்காங் தஸ்லீம், பாங்காக் வாவு எஸ்.எச்.மொகுதூம் ஆகியோர் பரிசுகளுக்கு அனுசரணையளித்திருந்தனர்.
போட்டி ஏற்பாடுகளை, எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.பி.பி.புகாரீ, இஸ்மாஈல், பாலப்பா, கரீம், ரியாஸுத்தீன், கலாமீ யாஸர், அப்துல் ரஹ்மான், ஸதக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |