காயல்பட்டினம் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையால் ஏற்படும் மாசு குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று நகரில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்தியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 10ஆம் தேதி - சென்னையில் திரளான காயலர்கள், DCW நிறுவனம் குறித்த பல கேள்விகளை - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டனர். அதற்கான பதில்கள் தற்போது, விண்ணப்பதாரர்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை, DCW தொழிற்சாலையின் Ilmenite பிரிவினை மூடிட, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரைக்கு முந்தைய கடித போக்குவரத்து விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கிட டிசம்பர் 10 அன்று கோரப்பட்டிருந்தது. அதன் வாயிலாக கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், பல புதிய தகவல்களைத் தருகின்றன.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஜூலை 19 தேதியிட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை (Show cause notice) DCW தொழிற்சாலையின் Ilmenite தொழிற்சாலையை உள்ளடக்கிய Caustic Soda பிரிவை நடத்திட மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த இரண்டு நிபந்தனைகளை நினைவுகூர்கிறது.
அதில் DCW தொழிற்சாலை, தொடர்ந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யவேண்டும் என்றும், அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் கழிவுகள் எக்காலத்திலும் கலக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கிறது.
அந்த குறிப்பாணை - ஜூலை 19 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது DCW தொழிற்சாலையில் காணப்பட்ட 6 விதிமீறல்களை சுட்டிக்காட்டுகிறது. உப்பளங்களில் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் நீரோடையில் கலப்பது, நீரோடை கடலில் கலக்கும் இடத்தில் தடுப்பணை அமைத்தது, நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தியில் உருவாகும் சாம்பலை நீரோடை அருகே கொட்டியது போன்றவை அதில் அடங்கும்.
இவை - Water (Prevention and Control of Pollution) Act, 1974 என்ற சட்டத்தின் பிரிவுகள் 25, 44 மற்றும் 45 A ஆகியவற்றின் கீழ் விதிமீறல்கள் ஆகும். மேலும் அதற்கான தண்டனை 18 மாதங்களுக்கு குறையாமல், அபராதத்துடன் 6 ஆண்டு வரையிலான சிறைவாசம் ஆகும் என்றும் அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 15 நாட்களுக்குள் பதில் வழங்கும்படியும் நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது.
தனது ஆய்வறிக்கையை தலைமை நிலையத்திற்கு அனுப்பிய மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் வலுவான பரிந்துரையையும் குறிப்பிட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் IAS - DCW நிறுவனம் முறையான சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வரை, குறிப்பிட்ட ஆலையை மூடிட பரிந்துரைத்திருந்தார்.
DCW நிறுவனம் ஆகஸ்ட் 3 தேதியிட்ட தனது பதிலை வழங்கியது. அதில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் DCW மறுத்தது. எந்தச் சூழலிலும் கழிவுகளை தொழிற்சாலைக்கு வெளியில் செலுத்தவில்லை என்று அந்நிறுவனம் கூறியது. மேலும் நிலக்கரி சாம்பலை, இலவசமாக - தன் சொந்த செலவிலேயே, தேவைப்படும் நிறுவனங்களுக்கு அனுப்பி வருவதாகவும் DCW நிறுவனம் பதில் வழங்கியது.
DCW நிறுவனத்தின் பதில் திருப்தியளிக்காததால் ஆகஸ்ட் 22 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை - DCW நிறுவனத்தின் Ilmenite பிரிவினை மூடிட பரிந்துரை செய்து, தலைமை அலுவலகத்தின் உறுப்பினர், செயலாளருக்கு கடிதம் அனுப்பியது.
அந்த கடிதத்தில் முக்கியமாக - DCW தொழிற்சாலை தனது கழிவை அப்புறப்படுத்தவில்லை என்றால், அக்டோபர் மாதம் பருவமழை துவங்கும்போது கடலில் கழிவு கலந்து, கடல் செந்நிறமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பரிந்துரையின் மீது, தலைமை அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அக்டோபர் மாதம் 20 ம் தேதி பருவ மழை காயல்பட்டினம் பகுதியில் துவங்கியது. அக்டோபர் 22 அன்று DCW நிறுவனத்தின் கழிவுகள் கடலில் கலந்தன.
ஜூலை 19, 2012 தேதியிட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை (Show cause notice) ...
ஆகஸ்ட் 3, 2012 தேதியிட்ட DCW நிறுவன பதில் ...
ஆகஸ்ட் 22, 2012 தேதியிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை பரிந்துரை ...
தகவல்:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) |