காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் 07.02.2013 வியாழக்கிழமையன்று (நேற்று) ஆய்வு நடத்தினார். விபரம் வருமாறு:-
ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் தொழிற்சாலை சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் நேற்று காலை திடீர் ஆய்வு நடத்தினார்.
கலெக்டர் ஆய்வு
ஆறுமுகநேரி அருகே சாகுபுரத்தில் உள்ள தொழிற்சாலை வெளியிடும் கழிவுகள் கடல்நீரில் கலப்பதால் தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, காயல்பட்டணம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த மாதம் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் தொழிற்சாலையை சுற்றிலும் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவு நீர் வெளியே செல்லும் வாய்க்கால் பகுதிகளை பார்வையிட்டார்.
உப்பளங்கள்
அப்போது, உப்பு உற்பத்தியாளர்கள் சிலர் தொழிற்சாலையின் ரசாயன கழிவு நீரால் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தொழிற்சாலையை சுற்றியுள்ள உப்பளங்களை பார்வையிட்டார். பின்னர் காயல்பட்டணம் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக சில இடங்களை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கொங்கன், தாசில்தார் நல்லசிவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி என்ஜினீயர் கோகுல்தாஸ், காயல்பட்டணம் நகரசபை தலைவி ஆபிதா ஷேக், ஆணையாளர் அசோக்குமார், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி ஆதாரம்:
தினத்தந்தி நாளிதழ் (நெல்லை பதிப்பு - நாள் 08.02.2013) |