சஊதி அரபிய்யா - ஜித்தா - காயல் நற்பணி மன்றத்தின் 29 வதுபொதுக்குழு,6 ஆவது அமர்விற்கான நிர்வாக தெரிவு மற்றும் 11 ஆம் ஆண்டு துவக்கவிழா ஜித்தா சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ள மிர்சல் வில்லேஜ் அருகில் 'அல் ஸஃப்வா' என்ற அழகியதோர் ஓய்வரங்கில் கடந்த 08-02-2013 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
வாகன ஏற்பாடு:
முன்னதாக அறிவித்தபடி காலை 07:30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா - ஷரஃபிய்யா ஆர்யாஸ் உணவகம் முன் குழும ஆரம்பித்தனர். சகோ.எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் மற்றும் சகோ.எஸ்.எஸ்.ஜாபர் ஸாதிக் ஆகியோர் வந்திருந்தவர்களை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.
மன்ற நிர்வாகிகள் மற்றும் வாகனம் வைத்திருந்தோர் தமது வாகனங்களில் முற்கூட்டியே நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். மக்கா உறுப்பினர்கள் யாவரும் குடும்பத்துடன் அவர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த சிற்றுந்து மூலம் சகோ.எம்.ஏ.இப்ராஹீம் தலைமையில் முன்னரே விழா தளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
யான்புவிலிருந்து திரளான உறுப்பினர்கள் இவ்விழாவில் ஆர்வமாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவர்களையும் சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன், சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான், சகோ.பிரபு நூர்தீன் நெய்னா, வங்காளம் எம்.என்.முஹம்மது அனசுதீன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழுவினர் வரவேற்றனர்.
காலை பசியாறு:
வந்திருந்தோர் அனைவரும் சுவைமிக்க காலை உணவு பசியாற இட்லி, வடை, சாம்பார், சட்னி, கேசரி மற்றும் காயல் இஞ்சி டீ என பரிமாறப்பட்டு சிறப்பாக உபசரிக்கப்பட்டது. அனைவர்களும் தங்களுக்குள் உற்சாகமாக உரையாடி நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
சகோதரர்கள் எம்.எம்.எஸ்.செய்கு அப்துல் காதிர் மற்றும் பொறியாளர் ஜி.எம்.முஹம்மது சுலைமான் ஆகியோர் உறுப்பினர்களின் சந்தாக்கள் மற்றும் நன்கொடைகளை பெறும் பணியில் ஈடுபட்டிருந்தனர். புதிய சகோதரர்களும் உறுப்பினர்களாகி தங்களை மன்றத்தில் இணைத்துக்கொண்டனர். அங்கேயே அமைக்கபட்டிருந்த உறுப்பினர் பதிவேட்டில் தமது வருகையை அனைவரும் பதிவு செய்து, செலுத்தப்பட்ட சந்தாக்களுக்கும் நன்கொடைகளுக்கும் ரசீதும் பெற்று கொண்டு விளையாட்டு மைதானம் நோக்கி விரைந்தனர்.
வெளியரங்க விளையாட்டு போட்டிகள் :
போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினரை அழைத்து முறைப்படி போட்டிகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார் சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன். அதன்படி போட்டி ஏற்பாட்டு குழுவினரான சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப், சகோ.ஒய்.எம்.முஹம்மது சாலிஹ், சகோ.சீனா.எஸ்.ஹெச்.மொகுதூம்முஹம்மது, சகோ.சொளுக்கு எம்.ஐ.செய்யது முஹம்மது சாஹிப், சகோ.கே.வி.எம்.எ.சி.ஷாமீரான் சாஹிப் சகோ.சோல்ஜர் எஸ்.எ.எஸ்.செய்கு அப்துல்லாஹ், சகோ.குளம் எஸ்.டி.முஹம்மது அஸ்லம் மற்றும் சகோ.எம்.என். முஹம்மது ஷமீம் ஆகியோர் விளையாட்டு போட்டிகளை தனித்தனியாக ஆரம்பித்தனர். முதலாவதாக விசாலமான மைதானத்தில் வெளியரங்க விளையாட்டு போட்டிகள் துவங்கின. போட்டிக்கான அறிவிப்பு செய்தவுடன் துள்ளிக்குதித்து வந்து சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் உறுப்பினர்கள் யாவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
பெனால்டி கிக்:
கால்பந்து பெனால்டிகிக் போட்டி 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு வழமையான உற்சாகத்துடன் நடைபெற்றது. யான்பு, மக்கா, மதினா, ஜித்தா என்று பெயரிட்டு கலந்து கொண்டனர்.
பின்னர் கால்பந்து போட்டியும் அதனைதொடர்ந்து வாலிபால் போட்டியும் விறுவிறுப்பாக நடந்தது. நமதூர் ஐக்கியவிளையாட்டு சங்கத்தில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஒலிக்கப்படும் பின்னணி இசையும் இங்கு ஒலிக்கப்பட காயல் மண்ணில் இருந்தது போன்ற உள்ளுணர்வு ஏற்பட்டது.
போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் பள்ளி பருவ துள்ளி விளையாட்டை நினைவு படுத்தி காயல் தெருவில் விளையாடும் சிறார்களாக மாறி ஆட்டம் ஆடமுற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண்முன் கொண்டுவந்தது.
ஓட்டப்பந்தயம்:
அடுத்து 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெரியவர்கள் சிறுவர்களாகி போட்டியில் பங்குகொண்டனர். இதன் சிறப்பம்சமாக; புனித உம்ரா கடமையை நிறைவேற்ற மக்கா வந்துள்ள இலங்கை வாழ் காயல் சகோ.எம்.எ.எம்.அன்சாரி ஹாஜி மற்றும் அவர்கள் சகோதரரின் மகன்.மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாத் சேர்ந்து ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு ஓடியது அருமையாக இருந்தது.
தொடர்ந்து; 5 ஓவர் நிர்ணயிக்கப்பட்ட கிரிகெட் T – 5 மாட்ச், கண்ணைக் கட்டிக்கொண்டு பொருட்களை தேடும் வேடிக்கை விளையாட்டு, ஒன்றோடு ஒன்றாய் பிணைத்துள்ள வளையத்தை பிரித்தெடுத்தல், நாற்பது வயதுக்கு மேற்பட்ட வயிறு பெருத்தோர் பங்கு பெற்ற மெது ஓட்டம், பந்தை ஒருவர் பின் ஒருவராக பாஸ் செய்யும் இசைப்பந்து போன்ற அழகிய விளையாட்டுகளும் ஆங்காங்கே நடைபெற்றது.
குட்டீஸ்களுக்கான போட்டி:
அதே சமயம் மறுபுறம் குட்டீஸ்களுக்கான சூப்பர் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், பலூன் வெடித்தல், இசை நாற்காலி மற்றும் இசை பந்து, வாளி (பானை) உடைத்தல், வாயால் கயிற்றில் கிளிப் மாட்டல், கால் கட்டி பந்துதைத்தல், ஸ்கிப்பிங் ஓட்டம், ஸ்பூனும் பகடையும் போன்ற கண்கவர் மழலை போட்டிகள் தனித்தனியாக காலை முதல் இரவு வரை நடைபெற்றது. கொஞ்சம் கூட அலுப்பு தட்டாது மிகுந்த ஆர்வத்துடன் அனைத்து குழந்தை செல்வங்களும் கலந்து கொண்டது பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொண்டது. தங்கள் குழந்தைகளின் விளையாட்டு போட்டிகளை தாய்மார்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். குட்டீஸ்களுக்கான போட்டிகள் அனைத்தையும் சகோ.எம்.அய்.அரபி முஹம்மது ஷுஅய்ப் மற்றும் சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம் முன்னின்று அழகுற நடத்தினர்.
ஜும்மா தொழுகைக்கான இடைவேளை:
மதியம் 12:15 மணியளவில் விளையாட்டுபோட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஜும்ஆவுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இஸ்திராஹாவிலுள்ள விசாலமான உள்ளரங்கில் 12:30 மணியளவில் மன்ற உறுப்பினர் சகோ. அல்ஹாஃபிழ் முஹம்மது நூஹுஆலிம் அல்தாபி அவர்கள்; இஸ்லாம் கூறும் தர்மங்கள், நல்லுதவிகள், பேருபகாரங்கள் இவைகளை உரியோர்க்கு அளிப்பதால் இரு உலக வாழ்விலும் நாம் பெறும் நன்மைகள் பற்றிய விரிவான அழகிய குத்பாவை நிகழ்த்தி தொழுகையை வழி நடத்தினார்.
29-வது பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் நிகழ்வு:
ஜும்மா தொழுகை நிறைவுற்றதும் அதே இருப்பில் 29-வது பொதுக்குழு கூட்டம் ஆரம்பமானது. இக்கூட்டத்திற்கு சகோ.எம்.எ.எம்.அன்சாரி ஹாஜி, சகோ.எ.கே.ஜெஸ்மின் கலீல் ஹாஜி, சகோ.கே.வி.முஹம்மது அப்துல்காதர் ஹாஜி, யான்பு பிரதிநிதிகள் சகோ.ஆதம் சுல்தான், பொறியாளர் நெய்னா முஹம்மது மற்றும் தாஃப்ரெஜ் ஜித்தா அமைப்பின் தலைவர் கீழக்கரை சகோ.முஹ்யித்தீன் சீனி அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார். சகோ. பொறியாளர் அல்ஹாஃபிழ் எஸ்.எம்.செய்கு ஆலம் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்று தலைமையுரையாற்றினார். வரவேற்புரையை சகோ.எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் நிகழ்த்தினார். சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் கடந்த கூட்ட நிகழ்வுகளின் தீர்மானங்களை வாசித்தார்.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஆரம்ப தலைமையிலிருந்து இன்றைய தலைமை வரை பத்தாண்டு கால தலைமை மற்றும் முன்னாள் நிர்வாகிகளின் சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்த சகோ.எம்.எ. செய்யிது இப்ராஹீம்; இதுவரை மன்றம் செய்த உதவிகளையும் அதன் மூலம் நாம் இறைவனிடத்தில் பெறும் வெகுமதிகளையும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
நிதி நிலை அறிக்கை:
மன்றம் மூலம் உயர் கல்வி மற்றும் மருதுவத்திற்கென வழங்கிய தொகை, சிறு தொழிலுக்கு வழங்கிய ஊக்கத்தொகை இவைகள் போக மீதமிருப்பு; இந்நிகழ்வில் பெறப்பட்ட சந்தா மற்றும் நன்கொடை போன்ற விபரங்களை தெளிவாக அறிவித்தார் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம்.
வாழ்த்துரை:
மருத்துவர் முஹம்மது ஜியாத் தனக்கே உரிய UK தமிழில் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார். உயிர் கொல்லி நோயின் தாக்கம் நமதூரில் அதிகமாக இருப்பதாக பதிவு செய்த அவர்; இதற்குரிய தீர்வு விரைந்து காணப்படவேண்டும் என்று வலியுறித்தினார்.
'நாம் கடல் கடந்து சம்பாதிக்க வந்த இடத்தில் நம்மூர் நலனுக்காக நாம் ஒற்றுமையாக இருந்து சேவைகளை செய்வதை நினைத்து உள்ளம் உவகை கொள்கிறது என்றும்; அனைவரும் உதவிட தானாக முன்வரவேண்டும்' என்ற வேண்டுகோளுடன் அழுத்தமான வாழ்த்துரையை தந்து அமர்ந்தார் சகோ.ஆதம் சுல்தான் அவர்கள்.
புதிய நிர்வாகத்தை தெரிவு செய்தல்:
கடந்த நிர்வாகக்குழு அனைத்தும் கலைக்கப்பட்டு 6-வது அமர்வு 2013-2014 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்வு நடந்தேறியது. நிகழ்வின் கண்காணிப்பளராக சகோ.எம்.எம்.மூஸா சாஹிப் பொறுப்பேற்று வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலுடன் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்தார். அதன் விபரம் அடுத்த செய்தியில் தெரியபடுத்தப்படும்.
நன்றியுரை:
சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யது முஹம்மது சாஹிப் நன்றி நவில, சகோ. எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் பிரார்த்தனையுடன் பொதுக்குழு சிறப்பாக நிறைவுற்றது.
காயல் களரி சாப்பாடு:
மதிய உணவாக நம் காயல் மண்ணுக்கு சொந்தமான சுவைமிகுந்த களரி சாப்பாடு ஏற்பாடு செய்யப்படிருந்தது. முதலில் பெண்கள் மற்றும் மழலைகளுக்கும், பொதுகுழுவிற்கு பின்பு ஆண்களுக்கான பந்தியுமாக சஹனுக்கு இரண்டு பேர் அமர்ந்திட பரிமாறப்பட்டது. Cone Zone ஐஸ்க்ரீம் மற்றும் கொக்கா சாக்லேட்டும் வழங்கப்பட்டது.
உணவு ஏற்பாடு மற்றும் பரிமாறுதல்களை சகோதரர்கள் சட்னி செய்யது மீரான், கத்தீப்.எம்.என்.லெப்பை தம்பி, எம்.எஸ்.தாவூத், சட்னி முஹம்மது உமர் ஒலி, பொறியாளர்.எம்.எம்.முஹம்மது முஹியதீன், எல்.எஸ்.சாலிஹ் மற்றும் அபுபக்கர் சித்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்தனர்.
மகளிர்க்கான போட்டி:
பெண்கள் சாப்பாடு முடிந்து சிறிது ஓய்வுக்குப்பின் தாய்மார்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் உள்ளரங்கில் ஆரம்பமானது. பந்து வீசுதல் / இசை பந்து, வளையத்தை எடுத்தல், சைகை மொழி அறிந்து பதில் சொல், வாளியில் பந்து போடுதல், பின்புறமாக கையில் வளையல் மாட்டல், காயல் தமிழ் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அனைத்து போட்டியையும் நான்கு பேர் கொண்ட பெண்குழுவினர் சிறப்புற நடத்தினர்.
கயிறு இழுக்கும் போட்டி:
ஜித்தா அணி ஒரு புறமும், மக்கா, யான்பு அணி மறு புறமும் என கயிறு இழுக்கும் போட்டி மிகுந்த ஆரவாரங்களுக்கிடையில் நடைபெற்றது. இரு அணியினரும் தங்கள் பலம் முழுவதும் வெளிக்கொணர்ந்து இழுத்ததில் இறுதியாக மருத்துவர் முஹம்மது ஜியாத் தலைமையிலான ஜித்தா அணி வெற்றி பெற்றது.
காயல் மரபு சொல் விளையாட்டு:
மக்ரிப் தொழுகைக்குப்பின் காயல் தமிழ் / காயல் வழக்க மற்றும் மரபு சொல் விளையாட்டு தொடங்கியது. 5 பேர்கொண்ட 6 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டி நடத்தியவர்கள் தமிழ் வழக்க வார்த்தைகளை ஆங்கிலத்தில் தொடுக்க அதற்கான பிரத்தியோக காயல் தமிழ் சொல்லை பதிலாக அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி ஆரம்பமானது. பொழுதுபோக்காகவும், கேளிக்கையாகவும் நடந்த இப்போட்டியில்; மாராயம், தடுக்குபாய், அவந்தரை, படுதூறு, அரிகண்டம், நப்பி, எகனை, தப்பிபோடு, அஸ்பல் பனாட்டு, கொளுவிபோடு, சல்லமை போன்ற காயலுக்கே உரிய வார்த்தைகள் விளையாடின. மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு வெற்றி பெற்ற அணி அறிவிக்கப்பட்டது. இப்போட்டியினை அருமையாக தயாரித்து நடத்தியவர்கள் சகோ.சீனா எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது மற்றும் சகோ.ஒய். எம் முஹம்மது ஸாலிஹ்.
இந்த காயலர் குடும்ப சங்கமத்தின் இடைவிடாத உற்சாக விளையாட்டினால் நேரமின்மையை கருத்தில் கொண்டு சில அறிவிக்கப்பட்ட போட்டிகள் நடத்தமுடியவில்லை.
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும் ஆண்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின் குழந்தைகள் வந்து மகிழ்வுடன் பரிசுகளை வாங்கி சென்றனர். அல்லாமல் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
மெகா பரிசு:
வருகை தந்திருந்த உறுப்பினர்களை உற்சாகமூட்டும் வண்ணம் குலுக்கல் முறையில் பம்பர் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. மெகா பரிசினை தட்டிச்சென்றோர்; புனிதமக்கா ஹரம் ஷரீஃப் எதிரில் உள்ள ஹில்டன் டவர் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் இருநாள் இரவு குடும்பத்துடன் தங்கிட டீலக்ஸ் அறை வசதியுடன் தலா இரண்டு நபருக்கு உம்ரா கடமைதனை நிறைவேற்றும் அரியதோர் வாய்ப்பிணை சகோ.பிரபு. எம்.எஸ்.செய்யது மொஹிதீன் (இ.டி.எ) மற்றும் சகோ.எஸ்.முத்து வாப்பா (துறைமுகம்) இருவரும் பெறுகிறார்கள்.
புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற மக்கா வந்திருந்த ஹாங்காங் சகோ. எம்.எஸ்.இஸ்மாயில் இந்நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்டனர்.
காயலர் குடும்ப சங்கம ஒருங்கிணைப்பு மற்றும் பொதுக்குழு நிகழ்வுகளை ஜித்தா காயல் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகச்சிறப்பாக திறமையாக செய்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றி:
காயலர் குடும்ப சங்கமத்தின் இறுதியில்; காயல் நற்பணி மன்றத்தின் அன்பழைப்பினை ஏற்று வந்து கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஜித்தா, மக்கா, யான்பு நகர காயல் சொந்தங்கள், சிரமங்களை பொருட்படுத்தாது தொலைவுகளில் இருந்து வந்து இவ்வினிய நிகழ்வை சிறப்பித்த அன்பு சகோதரர்கள், மேலும்; இந்நிகழ்வு நடைபெற அனைத்து வகைகளிலும் உதவிய, உழைத்த நல்லுள்ளங்கள் என அனைவருக்கும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவித்துகொள்கிறது என்று கூறி காயல் சங்கம நிகழ்வை நிறைவு செய்தார் சகோ குளம் அஹமத் முஹியதீன்.
கலைந்து சென்றனர்:
காயலர்கள் அனைவரும் கவலைகள் மறந்து "ஓடி விளையாடு பாப்பாவாக" மாறிய இந்நாளை மறக்க முடியுமா? என்ற வினாவுடன் ஒரே நாளில் ஊர் சென்று திரும்பிய மன திருப்தியுடன் சந்தோசத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் மீண்டும் இது போன்ற இனியதோர் நாள் வர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கலைந்து சென்றனர்.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
தகவல் மற்றும் படங்கள் :
எஸ்.ஐச்.அப்துல் காதர்,
சொளுக்கு,எஸ்.எம்.முஹம்மது உமர்,
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
16.02.2013.
|