பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ரசாக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசு வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி ஏற்படுத்தியுள்ளது. இந்நிதிக்கு கொடையாளர்கள் பங்களிப்பும் வரவேற்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கொடையாளர்கள் நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழக முதல்வரால் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் நிறுவன மேம்பாடு நிதிக்கு மாண்புமிகு வக்ஃப் வாரிய தலைவர் மற்றும் மாண்புமிகு
அமைச்சர் நிதியினை அளித்து துவங்கி வைத்தனர்.
பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ரசாக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு, ‘வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி’ ஏற்படுத்தி 2012-2013ஆம் ஆண்டுக்கு நலிந்த வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக மூன்று கோடி ரூபாய் ஒப்பளிப்பு தந்து
ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியுடன் இத்திட்டத்தை தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலமாக செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் 6.3.2013 அன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தின்போது இந்நிதிக்காக கொடையாளர்கள் அளிக்கும் முதல் நிதியாக ரூ.50,000/-க்கான வங்கி வரைவோலையினை மாண்புமிகு வக்ஃப் வாரியத் தலைவர் திரு.அ.தமிழ்மகன் உசேன் தமது சொந்த நிதியிலிருந்து முதன்மை செயல் அலுவலரிடம் அளித்து துவங்கி வைத்தார். பின்னர் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.அ.முஹம்மத்ஜான் ரூ.50,000/- க்கான காசோலையினை அளித்தார்கள். மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.அப்துல் ரஹீம், மற்றும் வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் திரு.சிக்கந்தர், திரு.ஹாஜா கே.மஜீத், திரு.கான், ஆகியோரும் தலா ரூ.50,000/- நன்கொடை வழங்கினார்கள்.
இந்நிகடிநச்சியில் வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் திரு.S.அப்துல் ரஹீம், M.L.A., திரு.S.A.பாரூக், திரு.சிக்கந்தர், திரு.ஹாஜா கே.மஜீத், திரு.M.K.கான், செல்வி.A.S.பீ பீ ஜான், திரு.சலாவுதீன் முஹம்மது அயூப், திரு. குலாம் முஹம்மது மெஹ்தி கான் மற்றும்
வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் திரு.ப.அப்துல் ராசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வக்ஃப் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்திற்கு தாராளமாக நிதி வழங்கிட இஸ்லாமிய செல்வந்தர்கள், பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9. |