கேரள மாநிலம் கோழிக்கோடு நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், 15 உறுப்பினர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
புதிய செயற்குழு தேர்தல்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 03.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, மன்றத்தின் கவுரவ ஆலோசகரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான எஸ்.ஐ.அப்துல் ஜலீல் இல்ல மேல் மாடியில் நடைபெற்றது.
உறுப்பினர்கள் வருகை:
தேர்தலை முன்னிட்டு முற்கூட்டி வருகை தந்து வாக்குப்பதிவு செய்யுமாறு உறுப்பினர்களுக்கு முன்னரே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, குறித்த நேரத்தில் உறுப்பினர்கள் நிகழ்விடத்தில் திரளாகக் குழுமியிருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்:
தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப்பதிவு செய்வதற்கான வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் விபரங்களை உள்ளடக்கிய வாக்குப்பதிவு மாதிரி சீட்டு ஆகியன நிகழ்விட நுழைவாயிலிலேயே அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது.
சந்தா சேகரிப்பு:
வாக்குச் சாவடியின் கீழ் தளத்தில், உறுப்பினர் சந்தா நிலுவைத் தொகைகளை, மன்றத்தின் நடப்பு பொருளாளர் உதுமான் அப்துல் ராஸிக் வசூலித்துக் கொண்டிருந்தார்.
தேர்தல் துவக்கப் பணிகள்:
தேர்தல் துவக்கப் பணிகளை, எஸ்.ஐ.ஜலீல் தலைமையில், கிழுறு முஹ்யித்தீன், கவுஸ் முஹம்மத், சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் ஆகிய தேர்தல் அதிகாரிகள் முனைப்புடன் செய்தனர்.
வாக்குச் சாவடி நுழைவாயிலில், வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணியை, நடப்பு செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் தலைமையில் குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.
வாக்குப் பதிவு:
காலை 10.30 மணிக்கு, திட்டமிட்ட படி வாக்குப்பதிவு துவங்கியது. துவக்கமாக தேர்தல் அதிகாரிகளும், அவர்களைத் தொடர்ந்து மன்றத்தின் நடப்பு நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்குப்பதிவு செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் அதிகாரிகள் விளக்கிக் கூறி, வாக்களிக்கச் செய்தனர்.
தவிர்க்கவியலாத காரணங்களால் வாக்குப் பதிவிற்கு நேரடியாக வரவியலாத உறுப்பினர்களின் தபால் வழி மற்றும் தொலைபேசி வழி வாக்குகளை, மன்ற உறுப்பினரல்லாதோர் - அந்தந்த வாக்காளர்களின் சார்பாக பதிவு செய்தனர்.
நண்பகல் 11.30 மணி வரை விறுவிறுப்புடன் சென்ற வாக்குப்பதிவு, அதற்குப் பிறகு சிறிது மந்தமானது.
பின்னர், வாக்குப்பதிவு நேரம் நிறைவடையும் தருணத்தில் மீண்டும் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 01.30 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்றதாக, தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.
களறி சாப்பாடு ஆயத்தப் பணிகள்:
வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிகழ்விடத்தின் கீழ்ப்பகுதியில் மதிய உணவு - களறி சாப்பாடு சமையல் பணிகள் பரபரப்போடு நடைபெற்றது.
தம் குடும்த்தினருக்காக முன்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, மக்வாவின் பெயர் அச்சிடப்பட்ட பிரத்தியேக பாத்திரத்தில் பவுத்தி சாப்பாடு வினியோகிக்கப்பட்டது.
வாக்குப் பெட்டி பாதுகாப்பு:
வாக்குப்பதிவு நிறைவுற்ற பின்னர், வாக்குப் பெட்டி, பூட்டிய அறைக்குள் தேர்தல் அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டது. மதிய உணவு ஏற்பாட்டுப் பணிகள் நிறைவுற்றதும், பாதுகாப்புப் பணியிலீடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகளுக்கு, அவர்களின் இருப்பிடத்திலேயே மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
மறுபுறத்தில், வாக்குப்பதிவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டம் நடைபெறும் - நெய்னாக்கா இல்ல மொட்டை மாடி வளாகத்தில் மதிய உணவு - களறி சாப்பாடு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை:
மதியம் 02.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தேர்தல் அதிகாரிகளுடன், மக்வா நடப்பு செயலாளர் ஹைதுரூஸ் ஆதில், காயல்பட்டினத்திலிருந்து வருகை தந்திருந்த ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் துணைப்பணியாற்றினர். துவக்கமாக வாக்குப் பெட்டி தேர்தல் அதிகாரிகளால் முறைப்படி திறக்கப்பட்டது.
வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில், தேர்தலில் போட்டியிட்ட 24 பேரில் 15 பேருக்கோ, அதற்கும் குறைவாகவோ முத்திரையளித்து வாக்களிக்க வேண்டும்.. 16 அல்லது அதற்கும் மேற்பட்டு முத்திரையளித்தால் அது செல்லாத வாக்கு என விதிமுறை முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், 15க்கும் மேற்பட்ட முத்திரைகள் குத்தப்பட்ட 6 வாக்குச்சீட்டுகள் துவக்கமாக கண்டறியப்பட்டு, அவை செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.
அடுத்து, தவிர்க்கவியலாத காரணங்களால் வாக்குப்பதிவில் நேரடியாகக் கலந்துகொள்ளவியலா நிலையிலிருந்த உறுப்பினர்களின் அஞ்சல் வழி வாக்குகள் 2, தொலைபேசி வழி வாக்குகள் 3 ஆகியன எண்ணப்பட்டன.
பின்னர், அனைத்து வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட படிவங்களில் வாக்கு எண்ணிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டது.
பதிவான வாக்குகள்:
மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 137
மொத்த வாக்குப்பதிவு: 106
அவற்றுள்,
நேரடி வாக்குப்பதிவு: 101
அஞ்சல் வழி வாக்குப்பதிவு: 002
தொலைபேசி வழி வாக்குப்பதிவு: 003
வாக்குப்பதிவு சதவிகிதம்: 77.37%
அடுத்து, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த வாக்குகள் தனி படிவத்தில் பதிவு செய்யப்பட்டு, கூடுதல் வாக்குகளைப் பெற்ற 15 வேட்பாளர்கள் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைக்குள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களைத் தவிர வேறெவரும் அனுமதிக்கப்படவில்லை.
உறுப்பினர் ஒன்றுகூடல்:
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நெய்னாக்கா இல்ல மொட்டை மாடி வளாகத்தில் கூட்டத்திற்காக உறுப்பினர்கள் திரண்டமர்ந்திருந்தனர். மாலை 04.00 மணியளவில் கூட்டம் துவங்கியது.
நடப்பு துணைத்தலைவர் முஹம்மத் ரஃபீக் (கே.ஆர்.எஸ்.) மகள் இறைமறை வசனங்களுடன் நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
துளிர் பிரதிநிதிகள் பங்கேற்பு:
துவக்கமாக, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்திருந்த - அதன் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத், செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.வஹீதா, ஆகியோரடங்கிய நிர்வாகக் குழுவினர் தம் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து கூட்டத்தில் விளக்கிப் பேசியதுடன், ஆர்வப்பட்ட உறுப்பினர்களிடம், துளிருக்கு நிதி திரட்டும் உண்டியல்களை வழங்கினர்.
அத்துடன், மக்வா மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் பாராட்டி, துளிர் பள்ளியின் சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
துளிர் பள்ளியின் அலுவலக பொறுப்பாளர் சித்தி ரம்ஸான், பெற்றோர் கழக தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி ஆகியோரும் அக்குழுவினருடன் இணைந்து வந்திருந்தனர்.
தொழுகை & தேனீர்:
இடையிடையே இரண்டு முறை, அஸ்ர் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் காயல்பட்டினம் முறைப்படி இஞ்சி கலக்கப்பட்ட தேனீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
மாலை 05.20 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. துவக்கமாக வாக்கு எண்ணிக்கை நிறைவுற்று - முடிவுகள் ஆயத்தமாக உள்ள தகவலை தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஐ.அப்துல் ஜலீல் அறிவித்தார்.
பின்னர், மற்றொரு தேர்தல் அதிகாரியான சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் - வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற விதம் குறித்து கூட்டத்தில் விளக்கியதோடு, தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை பட்டியலையும், அதனைத் தொடர்ந்து, புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரின் பெயர் பட்டியலையும் முறைப்படி அறிவித்தார்.
புதிய செயற்குழு:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:-
(01) எஸ்.எம்.மஸ்ஊத்
(02) அப்துல் காதிர் (நெய்னாக்கா)
(03) உதுமான் அப்துல் ராஸிக்
(04) முஹம்மத் உதுமான் (லிம்ரா)
(05) செய்யித் ஐதுரூஸ் (சீனா)
(06) உமர் அப்துல் காதிர் (லக்கி)
(07) செய்யித் அஹ்மத் (ஜெ.பி. டூல்ஸ்)
(08) ஸாஹிப் தம்பி. டி.எஸ்.
(09) மஹ்மூத் சேட்
(10) ரஹ்மத்துல்லாஹ். எஸ்.என்.
(11) ஷேக் ஸலாஹுத்தீன்
(12) முஹம்மத் ஸிராஜ். ஏ.எஸ்.ஐ.
(13) முஹம்மத் ரஃபீக் (கே.ஆர்.எஸ்.)
(14) ஜெய்னுல் ஆப்தீன் (ஆப்தீன் பாய்)
(15) முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ
தேர்தல் ஆவணங்கள் ஒப்படைப்பு:
பின்னர், தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தேர்தல் அதிகாரிகள் புதிய செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் - மன்றத்தின் நடப்பு தலைவரும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான எஸ்.எம்.மஸ்ஊத் வசம் ஒப்படைத்தனர்.
வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழுவினரும் தனியறையில் கலந்தாலோசனை செய்தனர். இதனிடையே, கூட்ட நிகழ்விடத்தில், புதிய செயற்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உறுப்பினர்கள் உரையாற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து, காயல்பட்டினத்திலிருந்து வந்து, வாக்கு எண்ணிக்கையிலும் ஈடுபட்ட ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.
மன்றத்தின் நகர்நலச் சேவைகளைப் பாராட்டிப் பேசிய அவர், தேர்தல் நடைபெற்ற விதத்தை தான் ஒவ்வொன்றாக அவதானித்ததாகவும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொன்றுமே தனித்துவத்துடன் திகழ்ந்து, தன்னை பெரிதும் வியப்பிலாழ்த்தியதாகவும் புகழ்ந்துரைத்தார்.
இவ்வளவு ஜனநாயகமாக தேர்தல் நடத்தப்படும் எந்த அமைப்பிலும் பெரிய அளவில் சர்ச்சைகள் இருக்காது என்று கூறிய அவர், வாய்ப்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் இதுபோன்றதொரு தேர்தலை நடத்துமாறு அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.
மன்ற நிர்வாகத்தில் பொறுப்பேற்று நகர்நலப் பணிகளை செய்வதென்பது சாதாரண பணியல்ல என்றும், எனினும் இவ்வளவு சிரமமிக்க இப்பணியில் ஈடுபட 24 பேர் ஆர்வத்துடன் முன்வந்து வேட்பாளர்களாகப் போட்டியிட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று அவர் மேலும் கூறினார்.
24 போட்டியாளர்களில், கோழிக்கோடு நகரில் இருப்பவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்கள் என்ற அடிப்படையில் இலகுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தலைச்சேரி உள்ளிட்ட அருகாமை ஊர்களிலிருந்து இம்மன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்றிட வாய்ப்பில்லை என்பதால், அருகாமை ஊர்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில், புதிய செயற்குழுவில் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தனது ஆலோசனையை முன்வைத்தார்.
இதனிடையே, புதிய செயற்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழுவினர் விபரத்தை மன்றத்தின் நடப்பு துணைத் தலைவரும், புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான முஹம்மத் ரஃபீக் (கே.ஆர்.எஸ்.) கூட்டத்தில் அறிவித்தார்.
புதிய நிர்வாகக் குழு:
புதிய நிர்வாகக் குழுவினர் விபரம் வருமாறு:-
தலைவர்:
எஸ்.எம்.மஸ்ஊத்
துணைத்தலைவர்:
செய்யித் அஹ்மத் (ஜெ.பி.)
செயலாளர்:
உதுமான் (லிம்ரா)
துணைச் செயலாளர்:
அப்துல் காதிர் (நெய்னாக்கா)
பொருளாளர்:
உதுமான் அப்துல் ராஸிக்
புதிய தலைவர் ஏற்புரை:
அதனைத் தொடர்ந்து, புதிய செயற்குழுவினர் சார்பாக, மன்றத்தின் புதிய தலைவர் மஸ்ஊத் ஏற்புரை வழங்கினார்.
ஏற்கனவே பொறுப்பு வகித்த பலர் மீண்டும் புதிய செயற்குழுவிலும் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்ந்தெடுத்துள்ள உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், அனைவரின் நம்பிக்கைகளையும் மதித்து இன்னும் பொறுப்புடன் புதிய செயற்குழுவினர் செயலாற்றுவர் என்றும் கூறினார்.
மன்றப் பொறுப்புகள் செயலரிடம் ஒப்படைப்பு:
பின்னர், மன்றத்தின் அனைத்து நிர்வாக ஆவணங்கள் மற்றும் பொறுப்புகளையும், புதிய செயலாளரான உதுமான் (லிம்ரா) வசம் பழைய செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் ஒப்படைத்து, தான் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இதுகாலம் மன்றத்திற்கு செய்த உழைப்புகளை, இனியும் செய்யப் போவதாகவும், புதிய செயலாளருக்கு தனது அனுபவத்தினடைப்படையில் அனைத்து ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கிட ஆயத்தமாக உள்ளதாகவும் கூறினார்.
புதிய செயலர் உரை:
பின்னர், மன்றத்தின் புதிய செயலாளர் உதுமான் (லிம்ரா) உரையாற்றினார்.
பழைய செயலாளர் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளதை மனதிற்கொண்டே, இப்பொறுப்பை தான் உறுதியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து மன்றத்தின் புதிய துணைத்தலைவர் செய்யித் அஹ்மத் (ஜெ.பி.), புதிய துணைச் செயலாளர் அப்துல் காதர் (நெய்னாக்கா) ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
புதிய பொருளாளர் உரை:
அவர்களைத் தொடர்ந்து, மன்றத்தின் புதிய பொருளாளர் முஹம்மத் உதுமான் உரையாற்றினார்.
கடந்த பருவத்திலும் தானே பொருளாளர் பொறுப்பை வகித்ததாகவும், உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தனது பணி முழுமையடையும் என்பதை கடந்த காலங்களில் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மீண்டும் தனது பொருளாளர் பொறுப்பு முழுமையடைய வேண்டுமானால், அனைத்து உறுப்பினர்களும் முன்பை விட அதிக ஆர்வத்துடன் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டியது அவசியம் என்றும், அவ்வாறு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதில் தான் என்றும் போல் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.
நிறைவாக, புதிய செயற்குழு உறுப்பினர் முஹம்மத் ஸிராஜ் அனைவருக்கும் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
திரளான உறுப்பினர்கள்...
இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகத்தினரும், துணைக்குழு பொறுப்பாளர்களும் விமரிசையாக செய்திருந்தனர்.
மக்வா புதிய செயற்குழு தேர்தல் நிகழ்வுகளின் படக்காட்சிகளைத் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!
இவ்வாறு, மக்வா செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி வடிவமைப்பு:
S.K.ஸாலிஹ்
படங்கள்:
செய்யத் ஐதுரூஸ் (சீனா)
[கூடுதல் தகவல்கள் & படங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 11:45 / 07.03.2013] |