இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன நாளான மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து கிளைப் பகுதிகளிலும் பிறைக்கொடி ஏற்றுவதென்றும், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்ட கால முஸ்லிம் விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் தேதியன்று தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்புப் பேரணியை நடத்துவதென்றும் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், 05.03.2013 செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். முன்னிலை வகித்த - முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் கூட்ட அறிமுகவுரையாற்றினர்.
அவரைத் தொடர்ந்து, கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர் தலைமையுரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்துகொண்டோரின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கொடியேற்றம் மற்றும் கவன ஈர்ப்புப் பேரணி:
அண்மையில் திண்டுக்கல் நகரில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, இம்மாதம் 10ஆம் தேதி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளன்று, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பிறைக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை நடத்திடவும்,
ஓய்வுபெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் படி, முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் 10 சதவிகித தனி இட ஒதுக்கீடு - மாநில அளவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தல், முழு மதுவிலக்கு, நீண்டகாலமாக சிறைகளிலிருக்கும் விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் சார்பில் - நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படவிருக்கும் கவன ஈர்ப்புப் பேரணியின் ஓரங்கமாக, 5 ஆயிரம் பொதுமக்களைத் திரட்டி - தூத்துக்குடி நகரிலும் கவன ஈர்ப்புப் பேரணியை நடத்தி, நிறைவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளிப்பதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - காயல்பட்டினம் சாலைகள் சீரமைப்பு:
காயல்பட்டினத்தில் மிகவும் சேதமடைந்து பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் பெரிய நெசவுத் தெரு சாலை, கூலக்கடை பஜார், பிரதான வீதி உள்ளிட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடுமாறு காயல்பட்டினம் நகராட்சி மற்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இனியும் காலதாமதம் செய்யப்பட்டால், இக்கோரிக்கையை வலியுறுத்தும் முகமாக பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இத்தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இறுதியாக, கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் நன்றி கூற, எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், மூத்த உறுப்பினர்களான தூத்துக்குடி மாநகர கவுரவ தலைவர் கனி, தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் சஹாப்தீன், இளைஞரணி செயலாளர் உவைஸ், மாவட்ட பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், கேம்பலாபாத் அபுல் ஹஸன், எம்.பி.எம்.அப்துல் காதிர், தெற்கு ஆத்தூர் செய்யித் அப்பாஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உட்பட, கட்சியின் மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளின் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |