காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துவக்கமாக, சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி 04.03.2013 அன்று நடைபெற்று முடிந்துள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா நிகழ்வின் தொடக்கப் போட்டியான 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மாநபியின் மாண்புகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி 04.03.2013 ஞாயிறு மதியம் 02.00 மணிக்கு நடைபெற்றது
துவக்கமாக ஒய்.எஸ்.இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். அதன் பின் போட்டியில் கலந்துகொண்ட 30 மாணவர்களும் தங்களின் பேச்சுத்திறனை திரை மறைவின்றி வெளிப்படுத்தினர். அதிலும் 3 வயதுடைய 2 சிறுவர்கள் மாநபியின் மாண்புகளை எடுத்துரைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இப்போட்டிக்கான நடுவர்களாக, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, காயல் அமானுல்லாஹ், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதிர் ஆகியோர் பணியாற்றினர். இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் முதற்கட்ட பரிசாக ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வியந்தகு பரிசுகள் வெள்ளி விழாவின்போது அறிவிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. போட்டியாளர்கள் ஒரு மதிப்பெண்ணில் முதல் பரிசை இழப்பதை தவிர்க்கும் பொருட்டு தரம் 1,2,3 என பிரிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
போட்டி நிகழ்ச்சிகளை மன்றத்தின் செயலர் முஹம்மத் முஹ்யித்தீன், செயக்குழு உறுப்பினா; ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
மன்ற துணைச் செயலர் வாவு ஷாஹுல் ஹமீத் நன்றி கூற, பாத்திஹா துஆவுடன் முதல் நிகழ்வு இனிதே நிறைவுற்றது, அல்-ஹம்துலில்லாஹ்!
இன்ஷாஅல்லாஹ் அடுத்த நிகழ்வு மாணவர்களுக்கான வினாடி-வினா தகுதிச்சுற்று போட்டி 10.03.2013 ஞாயிறு மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |