கையில் வெட்டுக் காயத்துடன், திருச்செந்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் காயலர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் தாக்கப்பட்டதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்துள்ளார். அதுகுறித்த - காவல்துறையின் முதல் தகவலறிக்கை (FIR)யில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்தவர் - நூர் முகம்மது என்பவரின் மகன் தங்க தம்பி காதர் சாகிப். இவருக்கு வயது 50. இவருக்கு, மனைவியும், ஒரு மகன் - ஒரு மகளும் உள்ளனர். காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் என்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகவும்,
அக்கடையில், துவக்கத்தில் தானும், தனது சகோதரன் மகனின் மாமனாரும் பங்காளர்களாக இருந்ததாகவும், பின்னர் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் தொகையைப் பெற்றுக்கொண்டு, வணிகப் பங்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாகவும்,
அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர், கடையில் தனக்கு பங்கு இருப்பதாகக் கூறி தகராறு செய்ததாகவும், அது தொடர்பாக திருச்செந்தூரிலுள்ள வழக்குரைஞர் ஒருவரை, இம்மாதம் 15ஆம் தேதி திங்கட்கிழமையன்று சந்தித்துவிட்டு, இரவு 09.00 மணியளவில் திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் நோக்கி, வீரபாண்டியன்பட்டினம் வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, சூர்யா டிம்பர் டிப்போ அருகில் நின்றுகொண்டிருந்த நீல நிற ஆம்னி வேனில் இருந்தவர்களில் இருவர் தனது இரு சக்கர வாகனத்தை மறிக்க,
அதே வாகனத்திலிருந்த தனது சகோதரரும், அவரது சம்பந்தியும் தரக்கேடான சொற்களால் பேசி, தன்னை கன்னத்திலும், மார்பிலும், அடி வயிற்றிலும் தாக்க, தன்னைப் பிடித்துக்கொண்டிருந்த மற்றொருவர் தனது இடது முழங்கையில் இரத்தக் காயத்தை ஏற்படுத்தியதாகவும்,
தான் மயங்கி விழுந்த பின், உறவினர் ஒருவரின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த முதல் தகவலறிக்கை (FIR) அளித்துள்ளார்.
தற்போது, தங்க தம்பி காதர் சாகிப், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், திருச்செந்தூர் காவல்துறை ஆய்வாளர் தில்லை நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 14:19 / 20.04.2013] |