தமிழக அரசின் IUDM திட்டத்தின்கீழ், காயல்பட்டினம் நகராட்சிக்கு - குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் வாங்கிட, 22.10.2012 திங்கட்கிழமையன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டத்தில் 36ஆவது கூட்டப் பொருள் படி ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டது.
ஒரு தொட்டிக்கு ரூபாய் 55,000 என்ற மதிப்பீட்டில் மொத்தம் 45 தொட்டிகள் வாங்கிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கான - நகராட்சியின் மொத்த மதிப்பீட்டுத் தொகை 24 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இ-டெண்டர் முறையில் விடப்பட்ட இந்த டெண்டருக்கான ஒப்பந்தப்புள்ளியை, சென்னை, கோயமுத்தூர், சேலம், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலிருந்து 8 நிறுவனங்கள் கோரியிருந்தன. கோயமுத்தூரைச் சேர்ந்த Sharp System நிறுவனம், மதிப்பீட்டுத் தொகையை விட 23.84 சதவிகிதம் குறைவான தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்ததால், அந்நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால், நகராட்சிக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் மிச்சமானது.
தற்போது, அந்நிறுவனத்திடமிருந்து காயல்பட்டினம் நகராட்சிக்கு குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் பெறப்பட்டு வருகிறது. இதுவரை 21 தொட்டிகள் பெறப்பட்டுள்ளதாகவும், துவக்கமாக ஒவ்வொரு வார்டிலும் ஒரு தொட்டி என்ற அடிப்படையில் தொட்டிகள் வைக்கப்பட்டு வருவதாகவும், எஞ்சிய தொட்டிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெறப்பட்டுவிடும் என்றும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, காட்டு தைக்கா தெரு, தைக்கா தெரு, சதுக்கைத் தெரு, நெய்னார் தெரு, தீவுத்தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
15ஆவது வார்டுக்குட்பட்ட உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவில் குப்பை தொட்டி வைக்கப்படும்போது, அந்த வார்டு உறுப்பினர் கே.ஜமால், அதிமுக 15ஆவது வார்டு செயலாளர் காசிலிங்கம், அப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் நாடார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்)
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ |