காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கி, தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் நடைபெறவில்லை. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிப்பு செய்தார்.
மேலும், பழுதடைந்துள்ள காயல்பட்டினம் நகர்மன்றக் கட்டிடத்தை புதுப்பிக்க 1.5 கோடி ரூபாயும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கும், இதர நலத்திட்டப் பணிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றுவதற்காக, இன்று மதியம் 03.00 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடத்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அழைப்பு விடுத்திருந்தார். நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மான முன்வடிவு வருமாறு:-
இக்கூட்டத்திற்கு, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மட்டுமே வருகை தந்திருந்தார். போதிய உறுப்பினர்கள் இல்லாததால், கூட்டம் நடைபெறவில்லை.
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டியதிருப்பதாலும், பல உறுப்பினர்கள் ஊரிலில்லாத காரணத்தாலும், நன்றி தெரிவிக்கும் கூட்டப் பொருளையும் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மன்றக் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தனக்கு கடிதம் அளித்துள்ளதாக, நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் கூட்டத்தில் தெரிவித்தார். அக்கடிதம் வருமாறு:-
இக்கூட்டத்திற்கான கூட்டப் பொருள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை, 3 உறுப்பினர்கள் ஊரிலில்லாததால் பெறவில்லை என்றும், ஏனைய உறுப்பினர்கள் கடிதத்தை வாங்கவில்லை என்றும், கடிதத்தைக் கொடுக்கச் சென்ற நகராட்சி அலுவலர் ஏ.முஹம்மத் அலீ, நகராட்சி ஆணையருக்கு பின்வருமாறு அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்:
பின்னர், இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கருத்து தெரிவிக்கையில்,
காயல்பட்டினம் நகராட்சிக்கு நலத்திட்டங்களை வழங்கி, தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில், போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், கூட்டத்தை நடத்த முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும், நகர மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களிடமிருந்து பெருவாரியாக கையெழுத்துக்களைப் பெற்று, முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர் அளித்த பேட்டியின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
பின்னர், நகர்மன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற - தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கையெழுத்து சேகரிப்பு படிவத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் துவக்கமாக கையெழுத்திட்டார். 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனும் அப்படிவத்தில் கையெழுத்திட்டார்.
|