அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் ஏற்பாட்டில், நீர் மோர் பந்தல், காயல்பட்டினம் கூலக்கடை பஜாரிலுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி அணுகுசாலை முனையில், 22.04.2013 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
கட்சியின் மேலவை பிரதிநிதியும், காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றினார்.
கட்சியின் வார்டு கழக செயலாளர்களான எம்.செந்தமிழ், எம்.எஸ்.நிஜார், மங்கை ஒய்.சுயம்பு, எம்.இ.எல்.புகாரீ, இ.காசிலிங்கம், பூவை எஸ்.சிவபெருமாள், எஸ்.ஆறுமுகநெயினார், காயல் பி.ஆதி, எஸ்.டி.மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் பட்டணம் எம்.கணேசன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்தார்.
பின்னர், சேது எம்.முருகன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, கட்சியின் நகர பேச்சாளர் ஹாஜி எஸ்.ஏ.மெய்தீன் சிறப்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்களை வழங்கி, சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, இம்மாதம் 19ஆம் தேதியன்று நடைபெறவிருந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், அண்மையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததற்கு அவர் தனதுரையில் கண்டனம் தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் நோக்குடனேயே அவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், அதை உணராமல் அவர்களை கட்சியில் இணைத்துக்கொண்ட - தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனைக் கண்டித்துப் பேசிய அவர், உள்நோக்கத்துடன் கட்சியில் இணைக்கப்பட்டுள்ள இந்த நகர்மன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் கூறினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்திற்குத் தொடர்பில்லாத ஒருவர் தனது பணபலத்தால் நகராட்சி நிர்வாக நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிட்டு, நகரை சீரழித்து வருவதாகவும், விரும்பத்தகாத இப்போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நகரில் கட்சி நலனுக்கு மாற்றமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் அனைத்தையும் கட்சியின் மேலிடத்திற்கு முறைப்படி தகவல் அளித்துக்கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
காயல் எஸ்.புரட்சி சங்கர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், கட்சியின் நகர உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கட்சியின் நகர துணைச் செயலாளர் ஹாஜி கே.ஏ.சேகு அப்துல் காதர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
படங்கள்:
A.K.இம்ரான் |