அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா (Assured Maximum Service to Marginal People in All Villages) திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் வட்டத்தில் - நல்லூர், காயல்பட்டினம் தென்பாகம் கிராமங்களில் இம்மாதம் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெற்றது.
இம்முகாம்களில், மக்களின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை 10.00 மணிக்கு துவங்கிய இம்முகாம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாச்சியர் (திருச்செந்தூர்) எல்.காமாட்சி தாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டல துணை வட்டாட்சியர் ராஜீவ் தாகூர் ஜேக்கப், வட்ட வழங்கல் அலுவலர் அழகம்மை, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்களான மைக்கேல் ராஜ் (காயல்பட்டினம்), தேசிகன் (புன்னைக்காயல்), இசக்கிமுத்து (சேர்ந்தபூமங்கலம்), அப்பனேஸ்வரி (சேதுக்குவாய்த்தான்), உதவியாளர் சுகுமார், காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களான கந்தசாமி, முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட இம்முகாம், திட்டமிட்ட படி மாலை 05.00 மணிக்கு நிறைவுறாமல், கூட்ட மிகுதி காரணமாக இரவு 10.00 மணி வரை நீடித்தது.
முகாமுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் பல உறுப்பினர்களும், ஆளும் அதிமுக கட்சி நகர கிளை அங்கத்தினர் சிலரும், முகாம் வழிகாட்டல் மற்றும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் பணியைச் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் முன்னர் அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் - காயல்பட்டினம் வட பாகத்தில் இம்முகாம் வரும் அக்டோபர் மாதம் 08ஆம் தேதியன்றும், காயல்பட்டினம் தென் பாகத்தில் இம்முகாம் அக்டோபர் 15 அன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 23 அன்று முகாம் நடைபெறும் என்ற மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு ஏப்ரல் 19 அன்று வெளியானது பலரை சென்றடையவில்லை என்று தெரிகிறது.
அரசு அதிகாரிகள் மூலம் நேற்று இம்மாதம் 22ஆம் தேதியன்று (முகாமுக்கு ஒருநாள் முன்பாக) இத்தகவல் அதிகாரப்பூர்வமாக கிடைக்கபெற்றவுடன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா
ஷேக் துண்டு பிரசுரம் நகரில் வினியோகிக்கவும், உள்ளூர் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு ஓடவிடவும் ஏற்பாடு செய்தார். நகரின் பல பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கி மூலம் இதுகுறித்து அறிவிப்பு செய்யப்பட்டது.
முகாம் நடந்த சில மணி நேரங்களில் - பொதுமக்களின் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது சாத்தியம் இல்லை என்பதால், மீண்டும் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை பலரால் வைக்கப்பட்டது. இது குறித்து பரிசீலனை செய்யும்படி முகாமை ஆய்வு செய்ய வந்த திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவனிடம் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார். கூட்ட மிகுதி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறி, இது பற்றிய கோரிக்கையை வைக்கும்படி வட்டாட்சியர் நகர்மன்றத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டது @ 10:20 pm / 24.4.2013] |