இந்திய ஹஜ் குழு (Haj Committee of India) மூலம் - தமிழகத்திலிருந்து இவ்வருடம் ஹஜ் செய்ய உள்ள யாத்ரிகர்கள் தேர்வு நேற்று (23.4.2013) மாலை
சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஜி அனைக்கர் அப்துல் சுக்கூர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பிற்படுத்தப்பட்ட சமுதாய துறை அமைச்சர் முஹம்மது ஜான், தமிழக ஹஜ் குழு செயலாளர் முஹம்மது நசீமுதீன் IAS, பிற்படுத்தப்பட்ட சமுதாய துறை செயலாளர் டாக்டர் கே.அருள்மொழி IAS, தமிழ் நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி செயலாளர் முஹம்மது அப்சல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் இருந்து இவ்வருடம் 11,765 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான ஒதுக்கீடு
மொத்தம் 3637 இடங்கள். முன்னரே அறிவித்தப்படி இரண்டு வகையான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு - குலுக்கல்
இல்லாமல் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்விரண்டு வகை விண்ணப்பதாரர்கள் - 70 வயதை தாண்டிய விண்ணப்பதாரர்
(ஒரு துணையுடன்) மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பம் செய்து (2010 - 2012) தேர்வு ஆகாதவர்.
இவ்விரண்டு வகைகளுக்கு உட்பட்டு விண்ணப்பம் செய்திருந்த 936 பேர் குலுக்கல் இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நீங்கி மீதி இருந்த
10,829 விண்ணப்பங்கள் கொண்டு, மாவட்டம் வாரியாக - 2701 இடங்களுக்கான குலுக்கல் மட்டும் நடைபெற்றது.
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு தலைமை நிலையத்தில் உள்ள கணினி மூலம் குலுக்கல் நடந்தது. 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை
அடிப்படையில் தமிழகத்திற்கான இடமும், தமிழகத்திற்குள் ஒவ்வொரு மாவட்டத்திற்கான இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தற்போது 32
மாவட்டங்கள் இருந்தாலும், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு நேரத்தில் இருந்த 30 மாவட்டங்கள் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்றன.
கோயம்புத்தூரும், திருப்பூரும் ஒரு மாவட்டமாகவும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒரு மாவட்டமாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆங்கில அகரவரிசை மூலம் மாவட்டவாரியாக நடந்த குலுக்கலுக்கு பின்னர், மாவட்டம் வாரியாக Waiting List வரிசையும் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
பயணியர் வாரியாக முடிவுகளை காண இங்கு அழுத்தவும்
நிகழ்ச்சியில் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பம் செய்திருந்த நூற்றுக்கணக்கானோர் தமிழகம் முழுவதிலிருந்தும் கலந்துக்கொண்டனர். அவர்கள்
வசதிக்காக - ஆண்கள் பகுதியில் 4 படம்காட்டும் கருவியும் (Projector), பெண்கள் பகுதியில் ஒரு படம்காட்டும் கருவியும் (Projector) ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. |