கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் வீசிய துர்வாடை வீச்சம் குறித்த KEPAவின் முறையீடு குறித்து, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள விளக்கத்தை KEPA ஆட்சேபித்து அறிக்கையளித்துள்ளது.
இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் பல மணி நேரமாக துர்வாடை வீசியது. அதுகுறித்து ஆய்வு செய்யக்கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் - சென்னையிலுள்ள தலைமை அலுவலகம், தூத்துக்குடியிலுள்ள மாவட்ட அலுவலகம் ஆகியவற்றுக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் தொலைநகல் (ஃபேக்ஸ்) மூலம் முறையிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 09.04.2013 தேதியிட்ட விளக்கம் KEPAவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் ஆய்வு செய்ததாகவும், அங்கிருந்து துர்வாடை வீசவில்லை என்றும் கூறியிருப்பதோடு,
அந்நாளில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு திசை நோக்கி காற்று வீசியதாகவும், துர்வாடை வீச்சத்திற்கு உள்ளூரில் குப்பை எரிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, KEPA சார்பில் பின்வருமாறு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது:-
மார்ச் 20, 2013 அன்று காயல்பட்டினத்தில் உணரப்பட்ட வாயு வாடை குறித்து தங்களிடம் வழங்கப்பட்ட புகார் குறித்த தங்களின் விளக்கம் கிடைக்கபெற்றது. தங்களின் பதில் திருப்திகரமாக இல்லை.
வாயு வாடைக்கு காரணம் - உள்ளூரில் உள்ள குப்பை எரிக்கப்பட்டதாக இருக்கும் என தாங்கள் தெரிவிக்கிறீர்கள். இந்த முடிவுக்கு வருவதற்கு முன் தாங்கள் - நகரின் குப்பைகள் எங்கு கொட்டப்படுகின்றன என ஆய்வு மேற்கொண்டீர்களா என நாங்கள் வினவ விரும்புகிறோம்.
காயல்பட்டினம் நகரில் உருவாகும் குப்பைகள் - நகரின் மேற்கு பகுதியில் - நகராட்சி பணியாட்களால் கொட்டப்படுகிறது. தங்களின் கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ள தகவலின்படி - காற்றின் திசை வட கிழக்கில் இருந்து, தென் மேற்கு நோக்கி இருந்தது என்றால், குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்து உருவாகும் துர்வாடை, நகரின் கிழக்கு கரையோரம் உள்ள பகுதிகளில் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் உணரப்பட்டது. ஆகவே - தங்களின் விளக்கம் சரியல்ல என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள காற்றின் திசை படி, நகரின் வடக்குப்பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இருந்து தான் அந்த வாயு வாடை வந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது. நகரின் வடக்கில் DCW தொழிற்சாலை உள்ளது. குப்பைகள் கொட்டப்படும் இடம், நகரின் மேற்கு பகுதியில் உள்ளது.
இவ்வாறு அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மறுப்பறிக்கையை, KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர் ஷஃபீயுல்லாஹ், செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், 22.04.2013 திங்கட்கிழமையன்று காலை 11.30 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரிடம் நேரடியாக வழங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்குச் சென்ற அக்குழுவினர், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அதிகாரி கோகுல்தாஸிடம் மேற்படி மறுப்பறிக்கையை அளித்துள்ளனர்.
இவ்வாறு, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |