சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், நகர்நலனுக்காக ரூபாய் 2 லட்சம் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், சிங்கப்பூர் - FAIRY POINT SEA VIEW CHALETஇல், 13.04.2013 சனிக்கிழமையன்று நடைபெற்றது.
முன்னேற்பாடுகள்:
நிகழ்விடம் வருகை:
அன்று மாலை 15.30 மணியளவில், உணவு தயாரிப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்விடம் வந்தடைந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, மன்ற அங்கத்தினரும், அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களும், LAVENDER - BEACH ROAD, மன்ற அலுவலகம் அருகிலுள்ள நிறுத்தம், BEDOK பகுதியிலுள்ள – மன்ற ஆலோசகர் வீட்டருகிலுள்ள நிறுத்தம் ஆகிய நிறுத்தங்களிலிருந்து, பேருந்து மூலம், மாலை 16.30 மணிக்கு நிகழ்விடம் வந்தடைந்தனர். பேருந்து முழுவதும் கூட்டம் நிறைந்திருந்தது. இடமின்மை காரணமாக பல உறுப்பினர்கள் நின்றவாறே பயணித்து வந்தனர்.
அஸ்ர் தொழுகை:
துவக்கமாக, மாலை 16.45 மணிக்கு, அஸ்ர் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார்.
தேனீர் & சிற்றுண்டி:
அதனைத் தொடர்ந்து, நிகழ்விடத்திலேயே சுடச்சுட தேனீரும், வடையும் தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மறுபுறத்தில், இரவுணவுக்கான ஏற்பாடுகள் அந்தந்த ஏற்பாட்டுக் குழுவினரின் மேற்பார்வையில் பரபரப்போடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பின்னூட்டம்:
முன்னதாக, மன்றத்தின் - நகர்நலனுக்கான அனைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த - உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக, அனைத்துறுப்பினர்களுக்கும் பின்னூட்டப் படிவம் வழங்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் தம் கருத்துக்களைப் பதிவு செய்து எடுத்து வந்திருந்த அப்படிவங்கள் இத்தருணத்தில் சேகரிக்கப்பட்டது.
பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும், மன்றத்தில் புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு பரிசீலித்து, தேவையானவற்றுக்கு விளக்கமளிக்கும் எனவும், ஏற்கப்பட வேண்டிய ஆலோசனைகளை அங்கீகரிக்கும் எனவும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
மாலைப் பொழுதுபோக்கு:
தேனீர் - சிற்றுண்டியுபசரிப்பைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் ஓய்வு - அரட்டை - இயற்கைக் காட்சிகளை ரசித்தல் - டென்னிஸ் பந்து க்ரிக்கெட் விளையாட்டு என பொழுதுபோக்கத் துவங்கினர்.
மழலையர் விளையாட்டுப் போட்டிகள்:
மறுமுனையில், மழலையருக்காக, பலூன் சண்டை, முறுக்கு கடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. மழலையர் இப்போட்டிகளில் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்கேற்றனர். இப்போட்டிகளை, குழந்தைகளின் தாய்மார் மற்றும் மகளிர் உறவினர்கள் மாடியிலிருந்தவாறு, மகிழ்ச்சியுடனும் - ரசனையுடனும் அவதானித்துக்கொண்டிருந்தனர்.
ஒருநாள் ஊதிய நன்கொடையளிப்பு:
முன்னதாக, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தூண்டலின் பேரில், “உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை” திட்டத்தின் கீழ், நகர்நலனுக்காக தமது ஊதியத்தின் ஒருநாள் விகிதத் தொகையை வழங்க, கடந்த பிப்ரவரி மாதம் 01ஆம் தேதியன்று நிய்யத் (எண்ணம்) வைத்திருந்தனர்.
அதனடிப்படையில், இரவு 19.00 மணிக்கு நன்கொடை சேகரிப்பு நடைபெற்றது. மூடி முத்திரையிடப்பட்ட உறைக்குள், உறுப்பினர்கள் தங்களது நன்கொடைத் தொகைகளை வைத்து, அதற்கென வடிவமைக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் இட்டனர்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் தொகை, தாயகம் காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்களின் துயர் துடைக்க பயன்படுத்தப்படும் என்றும், சேகரிக்கப்பட்ட மொத்த தொகை - அதற்கென நியமிக்கப்பட்ட குழுவால் கூட்ட நிறைவில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.
இரவுணவு ஏற்பாடு:
இது ஒருபுறமிருக்க, இரவுணவு ஏற்பாடுகளை, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் செய்து முடித்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மஃரிப் தொழுகை:
பின்னர், இரவு 19.00 மணிக்கு - மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார்.
பொதுக்குழுக் கூட்டம்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், நிர்ணயிக்கப்பட்ட நேரமான இரவு 19.45 மணிக்கு சரியாக துவங்கியது. மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குது் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மன்ற ஆலோசகர் உரை:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், இலங்கை - கொழும்பு நகரிலிருந்து வருகை தந்திருந்த ஹாஜி இஸ்மத் ஷாஜஹான் ஆகியோரைக் குறிப்பிட்டும், மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் - அவர்கள் தம் குடும்பத்தினரையும் பொதுவாகவும் அவர் வரவேற்றார்.
மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை உள்ளிட்ட நிர்வாகிகளைக் கொண்ட – மன்றத்தின் நடப்பு செயற்குழுவின் செயல்பாடுகளை அவர் பெரிதும் பாராட்டினார். குறிப்பாக, மன்றச் செயலாளரின் முழு ஈடுபாட்டுடன் கூடிய மன்றப் பணிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகள் அனைத்தும் இறையருளால் - உறுப்பினர்கள் அனைவரின் ஒற்றுமையுடன் கூடிய செயல்பாட்டால் சிறப்புற்றிருப்பதாகக் கூறிய அவர், பரபரப்பு நிறைந்த இந்நாட்டில், தமது ஓய்வு நேரத்தில் கனிசமான நேரத்தை நகர்நலனுக்காக அர்ப்பணிக்கும் மன்ற அங்கத்தினரின் செயல்பாடுகளுக்கு சிறிதும் இடைஞ்சல் தராமல், ஊக்கமளித்து, உற்சாகமூட்டி வரும் - மன்ற உறுப்பினர்களின் மனைவியரது ஒத்துழைப்புக்கு தனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
தலைமையுரை:
பின்னர், கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான எம்.ஆர்.ரஷீத் ஜமான் உரையாற்றினார்.
தனது தலைமையிலான நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பளித்த - மன்றத்தின் அனைத்து செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் தனதுரையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர், இறைவனின் துணை கொண்டு - தங்களால் இயன்ற அளவுக்கு மன்றப் பணிகளை திருப்திகரமாக செய்துள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் புதிய செயற்குழுவிற்கு, தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் மனப்பூர்வமாக அளிக்க ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
செயலர் உரை:
பின்னர், மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் உரையாற்றினார்.
துவக்கமாக, கடந்த 2012ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் வருடாந்திர செயல்பாட்டறிக்கையை அவர் வாசித்தார். தேவையான தகவல்களுக்கு, கணனி மற்றும் அசைபட உருப்பெருக்கி உதவியுடன் அவர் விளக்கமளித்தார்.
இந்த ஆண்டறிக்கை, மன்றத்தின் அனைத்துறுப்பினர்களுக்கும், அவரவர் மின்னஞ்சல் முகவரிகளுக்கு முற்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(இன்ஷாஅல்லாஹ், விரைவில் தனிச்செய்தியாக தரப்படும்.)
பொருளாளர் உரை:
பின்னர், மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை உரையாற்றினார்.
துவக்கமாக, கடந்த 2012ஆம் ஆண்டிற்கான விரிவான வரவு - செலவு கணக்கறிக்கையை, கணனி மற்றும் அசைபட உருப்பெருக்கி துணையுடன் அவர் கூட்டத்தில் சமர்ப்பித்தார். குறுக்கு விசாரணைகளுக்குப் பின் உறுப்பினர்கள் ஏகமனதாக அதற்கு ஒப்புதலளித்தனர்.
மன்றத்தின் சார்பில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலாக நற்சேவைகள் செய்யப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் கூறிய அவர், இதற்காக முழு ஒத்துழைப்பளித்தமைக்காக, மன்றத்தின் அனைத்துறுப்பினர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.
கல்வி, மருத்துவம் மற்றும் மனிதாபிமான நலத்திட்ட உதவிகளுக்காக கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும், 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கேள்வி நேரம்:
பின்னர், மன்றத்தின் செயல்பாடுகள் குறித்த தமது கருத்துக்களையும், கேள்விகளையும் முன்வைக்க, கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அதில், பல உறுப்பினர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விரிவான - விளக்கமான பதில் மன்ற நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.
மகளிர் பங்கேற்பு:
இக்கேள்வி நேரத்தில், திரை மறைவிலிருந்து மகளிரும் ஆர்வத்துடன் பங்கேற்று, பல கேள்விகளைக் கேட்டனர். திருக்குர்ஆனின் சிறு அத்தியாயங்களை மனனம் செய்ய மகளிருக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் மகளிரால் மன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.
அதனையடுத்து பேசிய மன்ற ஆலோசகர், சில தலைப்புகளை அவர்களுக்கு வழங்கி, மன்றத்தின் அடுத்த பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போது, போட்டிக்கு ஆயத்தமாக வருமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை மகளிராலேயே கேட்கப்பட்டது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதிய செயற்குழு போட்டியின்றி தேர்வு:
14.04.2013 முதல் 31.03.2015 வரையுள்ள பருவத்திற்கான - மன்றத்தின் புதிய செயற்குழுவிற்காக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய அனைத்து உறுப்பினர்களுக்கும் முற்கூட்டியே வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. எனினும், ஒவ்வொரு நிர்வாகப் பொறுப்பிற்கும் தலா ஒருவரே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தமையால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக, மன்ற ஆலோசகர் அறிவித்தார்.
ஆலோசகர்:
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
தலைவர்:
எம்.அஹ்மத் ஃபுஆத்
துணைத் தலைவர்கள்:
(1) முனைவர் எம்.என்.முஹம்மத் லெப்பை
(2) எம்.ஆர்.ரஷீத் ஜமான்
செயலாளர்:
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
துணைச் செயலாளர்:
கே.எம்.டி.ஷேக்னா லெப்பை
பொருளாளர்:
கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய்
துணைப் பொருளாளர்:
அபூ முஹம்மத் உதுமான்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர் (Admin Co-Ordinator):
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
திட்ட ஒருங்கிணைப்பாளர் (Project Co-Ordinator):
எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல்
செயற்குழு உறுப்பினர்கள்:
(1) சாளை ஷேக் நவாஸ்
(2) வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி
(3) சோனா அபூபக்கர் ஸித்தீக்
(4) ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன்
(5) ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர்
செப்டம்பர் 30 வரையுள்ள பருவத்திற்கான துணைக்குழு உறுப்பினர்கள்:
(1) ஜெ.அபுல் காஸிம்
(2) எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ
(3) எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர்
(4) எம்.எஸ்.செய்யித் லெப்பை
(5) ஜெ.எஸ்.தவ்ஹீத்
இவ்வாறாக, புதிய நிர்வாகிகள் அடங்கிய செயற்குழு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
புதிய தலைவர் ஏற்புரை:
பின்னர், மன்றத்தின் புதிய தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் ஏற்புரையாற்றினார்.
தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தான் உள்ளிட்ட - மன்றத்தின் புதிய செயற்குழுவை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தமைக்காக அனைத்துறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக துவக்கமாக அவர் கூறினார்.
மன்றத்திலுள்ள இளைஞர்கள் - பெரியவர்களை மதித்து செயல்படுவதும், பெரியவர்கள் - இளைஞர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதுமே இம்மன்றத்தின் மகத்தான வெற்றிக்கு மூல காரணங்கள் என்று புகழ்ந்துரைத்த அவர், மன்ற ஆலோசகர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் நிறைவான ஒத்துழைப்புகளையும் பெற்றவர்களாக - தங்களாலியன்ற அளவுக்கு மன்றப் பணிகளை தனது தலைமையிலான புதிய செயற்குழு இறையருளால் சிறப்புற செய்யும் என உறுதியளித்தார்.
முதியோர் நலத்திட்டம்:
காயல்பட்டினத்திலுள்ள, வயது முதிர்ந்த - இயலா நிலையிலுள்ள முதியோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரச் செலவினங்களுக்காக குறிப்பிட்ட ஒரு தொகையை மாதந்தோறும் அளிக்கும் நோக்குடன் முன்மொழியப்பட்ட திட்டமே “முதியோர் நலத்திட்டம்”.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து உறுப்பினர்களின் கருத்தறிய சிறிய கருத்தாய்வு நடத்தப்பட்டது. அதில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என 90 சதவிகித உறுப்பினர்கள் ஒப்புதலளித்ததையடுத்து, அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் நடைமுறைப்படுத்திட - மன்றத்தின் சார்பில், “முதியோர் நலத்திட்டம்” இக்கூட்டத்தில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
பின்னர், நடப்பு கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் (எ) ஷாஜஹான் துரை:
துவக்கமாக, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் தலைவரும், எழுத்தாளருமான ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.
துவக்க காலத்தில், சிங்கப்பூரில் தான் கழித்த நாட்களையும், அதில் பெற்ற அனுபவங்களையும் துவக்கமாக அவர் தனதுரையில் அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
அக்காலகட்டத்தில், உள்ளூர் தொடர்பான தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஒரேயொரு காயலர் மட்டுமே சிங்கையிலிருந்ததாகவும், இன்று ஏராளமான இளைஞர்கள் இங்கே பணியாற்றுவதும், தொழில் புரிந்து வருவதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறிய அவர்,
தான் பயணித்த நாடுகளிலேயே சிங்கப்பூர் மிகுந்த பாதுகாப்பும், சுத்தமும் நிறைந்த நாடாகத் திகழ்வதாகக் கூறினார்.
சிங்கை காயல் நல மன்றத்தின் வளர்ச்சி தன்னை பெரிதும் மகிழச் செய்திருப்பதாகக் கூறிய அவர், நகர்நலனுக்காகவும், நகர மக்கள் நலனுக்காகவும் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி, வெற்றி காண்பதில், சிங்கை காயல் நல மன்றம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் கூறினார்.
சிங்கை காயல் நல மன்றத்திற்கு மகளிர் பிரிவு ஒன்றையும் துவக்கலாம் என்று ஆலோசனை வழங்கிய அவர், இந்நாட்டில் கிடைக்கும் வசதிகளை இங்குள்ள மகளிர் நிறைவாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டுமென்று கூறினார்.
சிங்கை காயல் நல மன்றத்தின் சேவைப் பணிகள் அனைத்தையும் தான் பெரிதும் பாராட்டுவதாகவும், வருங்காலங்களில் இம்மன்றம் இன்னும் சிறப்புற பிரார்த்திப்பதாகவும் கூறி, அவர் தனதுரையை நிறைவு செய்தார்.
ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்:
அடுத்து, மற்றொரு சிறப்பு விருந்தினரான - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார்.
கடந்த 2001ஆம் ஆண்டு தான் முதன்முதலாக சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது, வெறும் 5 அல்லது 6 காயலர்கள் மட்டுமே இந்நாட்டில் இருந்ததாகவும், இன்று காயலர்கள் தம் குடும்பத்தினருடன் சுமார் 150 பேர் வசித்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறிய அவர், இன்று இந்தளவுக்கு காயலர்கள் இந்நாட்டில் நிறைந்திருக்கக் காரணம், துவக்க காலத்தில் வசித்த சொற்ப காயலர்களின் வழிகாட்டுதல் மற்றும் பெருந்தன்மையே என்று கூறினார்.
சிங்கை காயல் நல மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் புகழ்ந்து பேசிய அவர், மன்றத்தின் பணிகள் சிறக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் உரித்தாக்கிக் கொள்வதாகக் கூறினார்.
இவரது உரையின் முழுத் தொகுப்பும், இம்மாதம் 15ஆம் தேதி வெளியான ‘மணிச்சுடர்’ நாளிதழில் பின்வருமாறு விரிவாக வெளியிடப்பட்டுள்ளது:
இலச்சினை & முழக்கம் வெளியீடு:
பின்னர், மன்றத்திற்கான புதிய இலச்சினை மற்றும் முழக்கத்தை (LOGO & SLOGAN), நடப்பு தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வெளியிட்டார்.
இலச்சினையை தயாரித்தளித்தமைக்காக, மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் செய்யித் இஸ்மாஈலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
புதிய இலச்சினை மற்றும் முழக்கத்திற்கு சிங்கை சங்கப் பதிவகம் ஒப்புதலளித்துள்ளதாகக் கூறிய அவர், மன்றத்தின் புதிய முழக்கம் குறித்து விளக்கமளித்தார்:
முழக்கம்: ‘Local Strength - Kayal Reach”
சிங்கை காயலர்களது வலிமையின் பலன் தாயகம் காயல்பட்டினத்தைச் சென்றடைகிறது என்ற செய்தியை இந்த முழக்கம் தாங்கியிருப்பதாக அவர் கூறினார்.
ஒருநாள் ஊதிய நன்கொடைத் தொகை எண்ணிக்கை:
கூட்டம் துவங்குமுன், நிகழ்விடத்தில் மன்ற உறுப்பினர்கள் அளித்த வருடாந்திர - ஒருநாள் ஊதிய நன்கொடை உறைகள் அடங்கிய சிறப்புப் பெட்டி திறக்கப்பட்டு, தொகை எண்ணப்பட்டது. இந்திய ரூபாய் கணக்கில் மொத்தம் 2 லட்சம் ரூபாய் இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் இது கூடுதலாகும் என தெரிவிக்கப்பட்டது.
தமது சிறிய பங்களிப்புகள் இணைந்து, நகர்நலப் பணிகளுக்காக இவ்வளவு பெரிய தொகை சேகரிக்கப்பட்டுள்ளமை குறித்து உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும், நகர்நலனுக்கான நிதி சேகரிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், பெறப்படும் நிதி நகருக்கும், நகர மக்களுக்கும் சென்று சேர்ந்து, அவர்களின் தேவைகள் நிறைவேறவும், வருங்காலங்களில் அவர்களும் நன்கொடை வழங்குமளவிற்கு உயரவும் இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
மன்றத்தின் “ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டம்” ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டின் நகர்நலப் பணிகள் - ஒரு கண்ணோட்டம்:
கடந்த 2012ஆம் ஆண்டில், மன்றத்தால் செய்யப்பட்ட நகர்நலப் பணிகள், மன்ற செயல்பாடுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய படப்பதிவுகள், அசைபட உருப்பெருக்கி மற்றும் விரிதிரை துணையுடன் அனைவருக்கும் தொகுப்பாகக் காண்பிக்கப்பட்டது.
இதன் மூலம், உறுப்பினர்கள் தமது கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் மனக்கண் முன் கொண்டு வந்து, அவை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.
மழலையர் மறையோதல் போட்டி:
பின்னர், மழலையருக்கான மறையோதல் போட்டி நடைபெற்றது. மன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தமது மழலைக் குரல்களால் திருமறை குர்ஆனை அழகிய முறையில் ஓதி, அனைவரையும் மகிழ்வித்தனர்.
இப்போட்டியில் பங்கேற்ற 15 குழந்தைகளுக்கும், சிறப்பு விருந்தினர்கள் தம் கரங்களால் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தனர்.
பரிசளிப்பு:
பின்னர், முன்னதாக நடத்தப்பட்ட அனைத்து வகை போட்டிகளில் வென்றோருக்கான பரிசளிப்பு நடைபெற்றது. பரிசு பெற்றோர் விபரம் வருமாறு:-
திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி:
(1) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
(2) ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்
(3) ஹாஃபிழ் எம்.டி.செய்யித் அஹ்மத்
சிறப்புப் பரிசு: ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்
ஆறுதல் பரிசு:
ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத்
ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஸூஃபீ
ஹாஃபிழ் எம்.ஆர்.ஸூஃபீ
ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப்
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்
ஹாஃபிழ் செய்யித் இஸ்மாஈல்
(ஹாஃபிழ்) பி.எம்.எச்.முஹம்மத் அப்துல் காதிர்
சிறப்புப் பரிசு:
அடுத்து, Singapore Press சார்பில் நடத்தப்பட்ட 4x100 மீட்டர் தொடர் ஒட்டப் போட்டியில் பங்கேற்று, இரண்டாமிடம் பெற்ற - மன்றத்தின் இளைய உறுப்பினர் ஃபாஸில் உடைய சாதனையைப் பாராட்டி, சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன், பரிசளிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ நன்றி கூறி, துஆ பிரார்த்தனை செய்ய, இரவு 22.00 மணியளவில் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இஷா தொழுகை & இரவுணவு:
22.10 மணிக்கு, இஷா ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு அனைவருக்கும் இரவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
பரிசளிப்பு தொடர்ச்சி...
பின்னர், பரிசளிப்பு நிகழ்ச்சி தொடர்ந்தது. இதர போட்டிகளில் வென்றோருக்கான பரிசுகள் இந்நிகழ்வின்போது பின்வருமாறு வழங்கப்பட்டன:-
கைப்பந்து:
(1) எம்.ஜெ.செய்யித் அப்துல் ரஹ்மான் அணி
(2) எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ அணி
கால்பந்து:
(1) வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி அணி
(2) எஸ்.டி.செய்யித் முஹ்யித்தீன் அணி
டை ப்ரேக்கர் கால்பந்து:
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
குறு நீள் ஓட்டப் போட்டி (மினி மாரத்தான்):
(1) சோனா மஹ்மூத் மானாத்தம்பி
(2) எம்.ஜெ.செய்யித் அப்துல் ரஹ்மான்
(3) முஹம்மத் லெப்பை அஹ்னஃப்
பரிசுகளை, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் ஆகியோர் வழங்கினர்.
மகளிருக்கான போட்டிகள்:
பின்னர், மகளிருக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மகளிர் போட்டியில் பரிசு பெற்றோர் விபரம்:-
(1) ஃபஸ்மின் (கே.எம்.டி.ஷேக்னா லெப்பை அவர்களின் தங்கை)
(2) ஆயிஷா (ஷேக் அப்துல் காதிர் அவர்களின் மனைவி)
(3) முஹம்மத் ஃபாத்திமா ஆலிமா (மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ அவர்களின் மனைவி)
(3) சித்தி ஃபரீதா (முஹம்மத் இப்றாஹீம் அவர்களின் மனைவி)
பின்னர், மகளிர் இணைந்து, தாயகம் காயல்பட்டினத்தின் நடப்புச் செய்திகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்.
மறுநாள்...
இவ்வாறாக நிகழ்வுகள் சென்றுகொண்டிருக்க, மறுநாள் பிறந்தது.
சூட்டுக் கறி:
அதிகாலை 01.00 மணியளவில், சிக்கன், நண்டு ஆகியவற்றைக் கொண்டு BBQ சூட்டுக்கறி தயாரிக்கப்பட்டது.
நள்ளிரவரட்டை:
அவற்றை ருசித்து உண்டவர்களாக, உறுப்பினர்கள் - நீண்ட நாட்களுக்குப் பிறகு, நள்ளிரவின் நீண்ட பொழுதை இன்பமுற கழித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஓய்வெடுத்தனர்.
காலை உணவு:
காலை 09.00 மணியளவில் அனைவருக்கும் சேமியா பிரியாணி காலை உணவாகப் பரிமாறப்பட்டது.
பிரியாவிடை:
என்றும் நீங்கா நினைவுகளை மனதில் தாங்கியவர்களாக, கனத்த இதயத்துடன் காலை 11.30 மணியளவில் பேருந்து மூலம் அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் குறித்த காலத்தில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சரியாக நடைபெற்றதற்கு, ஏற்பாட்டுக் குழுவினரே காரணம். எனவே, அவர்கள் அனைவருக்கும் சிங்கை காயல் நல மன்றம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது. இன்ஷாஅல்லாஹ் இனி வருங்காலங்களில், இன்னும் சிறப்புற செயல்பட இம்மன்றம் காத்திருக்கிறது......
இவ்வாறு, சிங்கை காயல் நல மன்றத்தின் நடப்பு மற்றும் புதிய செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 14:48 / 25.04.2013] |