முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மாணவ-மாணவியர் பள்ளிப்படிப்புக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 01ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்துவர் / இஸ்லாமியர் / புத்த மதத்தினர் / சீக்கியர் மற்றும் பார்ஸி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை (Prematric Scholarship) திட்டத்தின் கீழ் 2013-14ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற,
>> மாணவ-மாணவியரின் பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
>> மாணவ-மாணவியர், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
>> பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை / ஆதி திராவிடர் நலத்துறை / மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2013-14ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.
>> குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டுமே இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
>> குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
>> மாணவ-மாணவியர், புதியது (Fresh) (ம) புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை, www.tn.gov.in/bcmw/welfshemes_minorities.htm என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
>> விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.08.2013.
>> கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து, அதற்கான கேட்புப் பட்டியலை உரிய படிவத்தில் பதிந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் 22.08.2013 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, தினத்தந்தி நாளிதழில் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவ-மாணவியர், மேற்படி கல்வி உதவித்தொகை பெற, உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |