அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி மாநில செயலாளராக, இதுவரை அதிமுக இளைஞர் - இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளராக இருந்துவந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா நியமிக்கப்படுவதாக, கடந்த மே மாதம் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.
அதிமுக கட்சியின் மகளிரணி மாநில செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டமைக்காக, தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பாவை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இன்று காலை 10.00 மணியளவில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி 13ஆவது வார்டு உறுப்பினரும், மேலவை நகர பிரதிநிதியுமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் சால்வை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், கட்சியின் நகர துணைச் செயலாளர் கே.ஏ.எஸ்.அப்துல் காதர், மூத்த உறுப்பினரும், பேச்சாளருமான எஸ்.ஏ.முஹ்யித்தீன், 01ஆவது வார்டு செயலாளர் செந்தமிழ் செல்வன், ஜெயலலிதா பேரவை நகர நிர்வாகிகளுள் ஒருவரான புரட்சி சங்கர், சமூக சேவகர் ஆத்தூர் முருகேசன், நகர அதிமுக உறுப்பினர் மரைக்கார் ஆகியோரும், அதிமுக மகளிரணியின் புதிய மாநில செயலாளரான மேயர் சசிகலா புஷ்பாவுக்கு சால்வை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பாவை வாழ்த்தி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சார்பில், நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
|