காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, இன்று 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
மே 30ஆம் தேதி வியாழக்கிழமையன்று (நேற்று) மாலையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பெங்களூரு எச்.ஏ.எல். அணியும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதின. பெங்களூரு அணியினர் வெள்ளை நிறத்திலும், நெல்லை அணியினர் மஞ்சள் நிறத்திலும் கள உடை அணிந்திருந்தனர்.
இந்த இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கலந்துகொண்டார். போட்டி துவங்குவதற்கு முன்பாக, அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை சிறப்பு விருந்தினரான மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர், அவருக்கு ஈரணி வீரர்களும், நடுவர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியருடன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வந்திருந்தார்.
அறிமுக நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியில் பங்கேற்கும் ஈரணி வீரர்களும் தமக்குள் நட்பைப் பரிமாறிக்கொள்ளும் விதமாக மாலை மாற்றிக்கொண்டனர்.
பின்னர், போட்டி துவங்கியது. இறுதிப்போட்டி என்பதால், கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஈரணிகளும் விறுவிறுப்புடன் விளையாடின. எனினும், முதற்பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இவ்வாறிருக்க, இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாட்டின் போக்கே மாறியது. ஒருபுறத்தில் பெங்களூரு அணி வீரர்கள் முனைப்புடன் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்கும் வகையில் நெல்லை அணியினர் தடுப்பாட்டத்தில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களால் தாக்குதல் ஆட்டத்தைக் கையாள இயலவில்லை.
ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் இம்மானுவேல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தி, முதல் கோலை அடித்தார். 57ஆவது நிமிடத்தில், அதே பெங்களூரு அணியின் தலைவர் ஆர்.சி.ப்ரகாஷ் ஒரு கோல் அடித்தார்.
இரண்டு கோல்கள் வாங்கியதால், நெல்லை அணியினரின் ஆட்டம் மந்தமானது. இந்நிலையில், கோல் காப்பு எல்லையில் நெல்லை அணி வீரர் தவறிழைத்தமையால், பெங்களூரு அணிக்கு பெனாலிட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த அணி வீரர் இம்மானுவேல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இந்த வீரர், கோல் அடித்த மகிழ்ச்சியில், மைதானத்தில் அற்புதமாக குட்டிக்கரணம் அடித்து, ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார்.
பின்னர், ஆட்டம் நிறைவடையும் வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், பெங்களூரு எச்.ஏ.எல். அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
நேற்று இறுதிப்போட்டி என்பதால், ரசிகர்கள் பகுதியில் அமர இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இடம் கிடைக்காத அனைவரும், மைதானத்தின் வட புறத்திலுள்ள மணற்பரப்பில் அமர்ந்து விளையாட்டை ரசித்தனர்.
கண்ணைக் கவர்ந்த காட்சிகள்:
இறுதிப்போட்டியை முன்னிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக, போட்டியில் கோல் அடிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. சீருடை அணிந்த பேண்டு வாத்தியக் குழுவினர் பார்வையாளர் பகுதியில் வலம் வந்தனர்.
நேற்றைய போட்டியை காயல்பட்டணம்.காம் உள்ளிட்ட இணையதளங்களில் வீடியோ நேரலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்றிரவு 07.00 மணிக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அந்த அணிக்கு “மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு” வெள்ளி சுழற்கோப்பையும், “ஆச்சி மசாலா” நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 35 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பெற்ற நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணிக்கு கோப்பையும், ஹாங்காங் ஓ.பி.சி. நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 25 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது. (பரிசளிப்பு விழா குறித்த தகவல்கள் தனிச்செய்தியாக தரப்படும்.)
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
ஒளிநேரலை ஏற்பாடு:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக் (கணனி தொழில்நுட்பம்)
‘DHL’ ஹரி (கணனி தொழில்நுட்பம்)
M.T.ஹபீப் முஹம்மத் (கேமரா)
S.M.J.ஜெய்னுல் ஆப்தீன் (கேமரா)
A.K.முஹம்மத் இம்ரான் (கேமரா)
A.S.அஷ்ரஃப் (நேர்முக வர்ணனை)
கலாமீ யாஸர் (நேர்முக வர்ணனை)
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்(உறுதுணை)
மே 29ஆம் தேதியன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |