காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 26-05-2013 ஞாயிறு மாலை 07:00 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
“மஹல்லா ஜமாஅத் பெருமையை வலியுறுத்தி, நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை கோரி, வேலை வாய்ப்புத் தேர்வுகளில் அரபு மொழி நீட்டிக்க வேண்டி” என்ற முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ் முஹம்மது நாஸர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இறைமறை ஒதினார் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ் வரவேற்று பேசினார். மன்னர் பாதுல் அஷ்ஹப் துவக்க உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
இஸ்லாத்தின் சிறப்பான மஹல்லா ஜமாஅத் பெருமையை நிலை நிறுத்த வேண்டுமானால் ஜமாஅத்துக்களில் கட்டுப்பாடு என்பதை காப்பாற்ற வேண்டும். ஜமாஅத்துக்கள் கட்டுப்பாடுடன் செயல்பட்டால்தான் சமுதாயத்தின் மானம் மரியாதை ஊரின் பெருமை காப்பாற்றப்படும்.
ஒவ்வொரு ஜமாத்திலும் ஷரீஅத் பஞ்சாயத் இயங்க வேண்டும். ஒரு ஜமாஅத்தில் எற்படும் பிரச்சனைகளை குடும்ப விவரங்களை அந்தந்த ஜமாஅத்தே தீர்த்துக் கொள்ள வேண்டும். நம் ஊரில் குடும்ப விவகாரங்களும் முடுக்கு தகராறுகளும் ஆறுமுகனேரி காவல் நிலையத்துக்கும், நீதி மன்றங்களுக்கும் செல்கின்றன. இது நம் சமுதாயத்துக்கு பெருமை தரக்கூடியதல்ல.
ஒவ்வொரு ஜமாஅத்திலும் பைத்துல் மால் உருவாக்கி அந்த மஹல்லாவில் யார் ஏழைகள் என்பதை அறிந்து கைதூக்கி விட வேண்டும். நமது நகரில் இரண்டு பைத்துல்மால்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இவ்வளவு பெரிய ஊருக்கு இரண்டு பைத்துல்மால் போதாது. இன்னும் பைத்துல்மால்கள் உருவாக்கப்பட வேண்டும்.
வெளியூர்களில் தவறு செய்கின்றவர்களெல்லாம் காயல்பட்டினத்தை புகலிடமாகக் கொள்கின்றனர். கஞ்சா, விபச்சாரம், போதைவழக்குகள் என்றால் கைதானவன் காயல்பட்டினத்தை சேர்ந்தவன் என செய்தி வருகிறது. ஆராய்ந்து பார்த்தால் அவன் அண்மையில் எங்கிருந்தோ வந்த காயல்பட்டினத்தில் குடியேறியவனாக இருக்கிறான் இவர்களை கண்காணித்து கட்டுப்படுத்துவது காயல்பட்டினத்திலுள்ள ஜமாஅத்துக்களின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் பேசுகையில் கூறியதாவது:-
காயல்பட்டணத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. ஊரைப்பற்றி கவலைப்படாமல் அரசு புறம் போக்கு மற்றும் தனியார் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன.
எத்தகைய ஆவணங்களும் இல்லாத இந்த விடுகளுக்கு மின் இனைப்புக்கள் எப்படி கொடுக்கப்படுகின்றன நகராட்சி வரி எப்படி போடுகிறது ? கடற்கரையில் வீடுகளை கட்டிக் கொண்டே இருக்கிறார்கள் மின் இணைப்பு உடனே கொடுக்கப்படுகிறது.
சட்டப்படி நாம் எல்லா ஆதரங்களையும் வைத்து வீடு கட்டினாலும் அதற்கு மின் இணைப்புதர காலம் கடத்தும் மின் வாரிய உதவிப் பொறியாளர் இந்த ஆக்கிரமிப்பு விடுகளுக்கு மட்டும் எப்படி கொடுக்கிறார் ஒரே ஊரில் இத்தனை ஆண்டுகாலமாக அவரால் எப்படி இருக்க முடிகிறது புகார் அனுப்பினால் விசாரணை அதிகாரிகளை கையில் போட்டு இங்கேயே நீடிக்கிறார். எனவே இதனை எதிர்த்து ஊர் மக்கள் தான் திரண்டு எழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்காயர் பேசியதாவது:-
காயல்பட்டினத்தில் சட்ட விரோதமான காரியங்களுக்கு அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள். சட்டப்படியான காரியங்களை செய்துதர மறுக்கிறார்கள் அல்லது காலம் கடத்துகிறார்கள் என இங்கே குறிப்பிட்டார்கள்.
தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக அவர்களை சந்திக்கு கொண்டு வரலாம். ஊருக்கும் சமூகத்திற்கும் எதிராக செயல்படும் இத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளிக்கலாம். அந்த புகார்கள் எல்லாம் வேலை செய்ய வில்லை எனில் லஞ்ச ஒழிப்பு மூலம் அவர்களை பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கலாம். ஓரிருவரை இப்படி செய்வதன் மூலம் தான் ஊழலை ஒழிக்க முடியும் எனவே இதற்கு ஊர்மக்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியருமான காயல் மகபூப் பேசியதாவது:-
முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டதில் இரண்டாவது கோரிக்கையான நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சில விளக்கங்களைத்தர விரும்புகிறேன்.
மராட்டியம், குஜராத், உப்பி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எண்ணற்ற முஸ்லிகள் விசாரணை சிறைவாசிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு தங்கள் மீதுள்ள வழக்குகள் என்னவென்றே தெரியாது. அவர்களை விடுதலை செய்யுங்கள் என வலியுறுத்துகிறோம். கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்ஸில் கூட்டம், சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டங்களில் தீர்மானங்களை நிறை வேற்றி மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினோம்.
மத்திய அரசும் இதற்காக வழிகாட்டும் உத்தரவுகளை மாநில அரசுகளுக்கு அனுப்பியிருக்கும் போது மாநிலங்கள் அதை செயல்படுத்த வில்லை ஆனால் இதற்கிடையே நடைபெறும் இன்னொரு அநியாயத்தை பாருங்கள்.
கர்நாடக மாநிலத்தில் மே 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 17-ம் தேதி பெங்களூரு மல்லேஸ் வரத்தில் பி.ஜே.பி. அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு 16 பேர் காயமடைந்தார்கள் இது அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு என அப்போதே சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் நடைபெற சில நாட்களுக்கு முன் அதாவது ஏப்ரல் 23-ம் தேதி இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கிச்சான் புகாரி அவரது மைத்துனர் சதாம் உசேன், பீர் முஹைதீன், பஷீர் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர் தேர்தல் நடைபெறும் அன்று கோவை அஸ்கர் அலி, பழியம் ஹக்கீம், ரன்மதுல்லா, தென்காசி சுலைமான் ஆகியோர் கைது செய்யப்பட்டு பரபரப்பாக செய்திவருகிறது.
இப்படி கைது செய்யப்படவர்களை சந்திக்க அவர்கள் குடும்பத்தினர் எவ்வளவோ முயன்றும் காவல்துறை சந்திக்க அனுமதிக்க வில்லை மே 6,7 தேதிகளில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போதுதான் ஓரிரு நிமிடங்கள் அவர்களிடம் அவர்கள் உறவினர்களால் பெசமுடிந்துள்ளது. கடுமையான சித்ரவதை செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உடலில் மின்கலம் பாய்ச்சப்பட்டுள்ளது. அவர்கள் குடும்பத்தார் கதறி அழுகிறார்கள். ஆனால் சட்ட சபையில் இதைப்பற்றி பேசி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல எவ்வளவோ வாய்ப்பிருந்து அங்கே பேசாமல் அம்மாவை வாயார புகழ்ந்து விட்டு வெளியில் வந்துபூச்சாண்டி காட்டுகிறார்கள் இவர்களை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். போட்டி போட்டுக் கொண்டு வாழ் போஸ்டர் அடித்து அம்மா புகழ்பாடும் இவர்களை சமுதாயம் அடையாளம் காணவேண்டும்.
உபியில் காலித் முஜாஹித் என்ற 22 வயது ஆலிம் பேராசிரியரை அடித்துக் கொன்றதை போல் கிச்சான் புகாரியையும் என்கவுன்டரில் கொள்ள முயற்ச்சி நடக்கிறது. தமிழக காவல்துறையின் உளவு அமைப்பான எஸ்.ஐ.யு, எஸ்.ஐ.டி அதிகாரிகள் இதை செய்கிறார்கள் என அவர்கள் குடும்பம் குற்றம் சுமத்துகிறது. இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆக்கப்பூர்வமான பல்வேறு காரியங்களி செய்து கொண்டிருக்கிறது. இந்த பொதுக் கூட்டத்திற்கு கேரள மாநிலத்திலிருந்து இரண்டு பிரமுகர்கள் வருகை தந்துள்ளார்கள் ஒன்று கேரள அரசின் கெல்டெக் வாரிய தலைவர் பீமா பள்ளி ரஷீத் அவர்கள் மலபாரில் பல கல்வி நிறுவங்களி நடத்துகின்ற ஸ்டீல் இன்டஸ்ட்ரியல் காரப்பே ரேஷன் வாரிய தலைவர் ஹம்ஸா.
இன்று திருவனந்தபுரம் சித்திரை திருறார் மருத்துமனையின் கென்ஸர் சென்டரில் சிகிச்சை பெறுகின்றவர்கள் தங்க, உணவு , மருந்துகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சி.எச். முஹம்மது கோயா பெயரில் ஒரு சென்டர் துவங்கப்பட்டு உதவி செய்து கொண்டிருக்கிறது. நமது ஊரை சேர்ந்தவர்களும் இதில் பயனடைந்து வருகிறார்கள் அதில் முக்கிய பொறுப்பில் பீமா பள்ளி ரஷீத் உள்ளார்கள். கென்ஸர் சிகிட்சைக்கு செல்வோர் இங்குள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளிடம் ஒரு கடிதம் வாங்கிச் சென்றால் இதற்கான உதவியை பெறலாம்.
தெற்கு ஆத்தூரில் அல் மத்ரஸத்துல் அப்பாஸிய்யா கட்டப்பட்டுள்ளது. மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ள அதன் கட்டுமான பணிக்கு இந்திய யூனியம் முஸ்லிம் லீக் இயன்றவை உதவி செய்து கொண்டிருக்கிறது. அதே போன்று கட்டுமானமே இல்லாமல் இயங்கி வந்த திரேஸ்புரம் பள்ளிக்கூட கட்டுமானப்பணிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் தாரளமாக உதவி வருகின்றனர். சமுதாயத்தை பிளவு படுத்தாமல் இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமன காரியங்களுக்கு உதவி வருகிறோம்.
காயல்பட்டினம் நகராட்சி இன்று செயல் இழந்து போய்விட்டது தலைவருக்கும் உறுப்பினர்களுக்குமிடையில் ஒற்றுமை இல்லை. அதனால் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இனிமேல் உள்ளாட்சி தேர்தலில் காயல்பட்டினம் நகராட்சியை அரசியல் கட்சிகள் கையில் எடுக்க வேண்டும். அடுத்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும். ஒருமுறை அந்த வாய்ப்பை கொடுத்துப்பாருங்கள், தெரிந்து கொள்வீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட - கேரள அரசின் கெல்டெக் வரியா தலைவரும் திருவனந்தபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருமான பீமாபள்ளி ரஷீத், கேரள அரசின் ஸ்டீல் இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் தலைவரும், மலபார் கல்லூரிகள் குழுமத்தின் தலைவருமான கே.எஸ்.ஹம்ஸா ஆகியோர் மலையாளத்தில் உரையாற்ற, கட்சியின் மாநில செயலாளர் நெல்லை மஜீத் அதனை தமிழாக்கம் செய்து பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை ஏற்றதால் கேரள முஸ்லிகள் அனுபவித்து வரும் சலுகைகளை அவர்கள் பட்டியலிட்டனர் உ.பி, பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்களின் சோதனைகளுக்கு காரணம் அவர்கள் முஸ்லிம் லீகை புறக்கணித்ததுதான் என்பதை புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டனர்.
பின்னர், நடப்பாண்டு ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு, முறையே ரூபாய் 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பணப்பரிசுகளும், குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு மேலாண்மை பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவிக்கு ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசும், கூட்ட மேடையில் வழங்கப்பட்டது.
இறுதியாக நகர பொருளாளர் ஹாஜி முஹம்மது ஹஸன் நன்றி கூற, நகர துணைத் தலைவர் ஹாஜி அரபி துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், பாங்காங் காயிதே மில்லத் பேரவை தலைவர் வாவு சம்சுதீன், மாவட்ட காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி சேக்னா லெப்பை, கேம்பலாபாத் நகர தலைவர் அபுல்ஹஸன், எம்.எஸ்.எப். மாவட்ட அமைப்பாளர் எம்.எ.சி. சுஹைல் இப்ராகிம், துணை அமைப்பாளர்கள் எ.ஆர்.சேக் முஹம்மது, அப்துல் பாஸித், நகர எம்.எஸ்.எப் அமைப்பாளர் நவ்பல் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்ட கவுரவ தலைவர் எம்.அப்துல் கனி, மாநகர் தலைவர் நவ்ரங் சகாபுதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கே.மீராசா, மாவட்ட துணை செயலாளர் உவைஸ், ஆத்தூர் நகர செயலாளர் செய்து அப்பாஸ் உள்ளிட்ட - கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகளும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கூட்டம் நடைபெற்ற மே 26 அன்று மாலையில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்ற மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டியில், இக்கூட்டத்தின் சிறப்பழைப்பாளர்களும் - கேரள அரசு பிரமுகர்களுமான பீமாபள்ளி ரஷீத், கே.எஸ்.ஹம்ஸா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, ஐக்கிய விளையாட்டு சங்க சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்திற்கெதிரில், முஸ்லிம் லீக் மாணவரணி (எம்.எஸ்.எஃப்.) கொடியேற்ற நிகழ்ச்சியிலும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பீமாபள்ளி ரஷீத் கொடியேற்றினார்.
பின்னர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மற்றும் கே.எம்.டி. மருத்துவமனை ஆகிய இடங்களில், அந்தந்த நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
தகவல்:
A.L.S.அபூஸாலிஹ்
(நகர செயலாளர்)
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
(மாணவரணி நகர அமைப்பாளர்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
காயல்பட்டினம் கிளை |