தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களில், பொருளாதார 6ஆவது கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாகவும், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பளிக்குமாறும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆணைப்படி, ஆறாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணி 05.06.2013 முதல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் மேற்கொள்ளப்படும் தொழில் நடவடிக்கைகள் மற்றும் அதில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு, இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் - இக்கணக்கெடுப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் பொருளாதார கணக்கெடுப்பு விபரங்களை சேகரிக்க தங்கள் வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் 05.06.2013 முதல் நேரில் வருவார்கள். அவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பை அளித்து, கணக்கெடுப்பாளர்களுக்கு சரியான விபரங்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மக்கள் நல திட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த கணக்கெடுப்பு விபரங்கள் பயன்படும் என்பதால், உண்மையான தகவல்களை அளிக்குமாறு பொதுமக்கள் அனைவருககும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கணக்கெடுப்பு, இதர வரிகள் தொடர்பாக நடத்தப்படவில்லை எனவும், தொழில் நடவடிக்கைகள் குறித்த புள்ளி விபரங்களை அரசுக்கு அளிப்பதற்காக மட்டுமே இக்கணக்கெடுப்பில் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |